பளபளப்பு ,பகட்டு ,புகழ் ,பெருமை என்று நிலவும் திரை உலகில் உலவும் நட்சத்திரமாக நயன்தாராவை ரசிகர்கள் அறிவார்கள்.ஆனால் அதை அடைய அவர் கடந்து வந்த பாதையை, சந்தித்த சவால்களை, தாண்டிய தடைகளைப் பற்றிச் சுருக்கமாகக் கூற முனைந்துள்ளது தான் இந்த ‘நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்’(Nayanthara: Beyond the Fairytale) ஆவணத் திரைப்படம்.
நடுத்தர வர்க்கத்தில் பிறந்து, திரையுலகில் ஒரு சாதாரண நடிகையாக நுழைந்து லேடி சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருக்கும் நயன்தாராவைப் பற்றி பேசுகிறது நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி இருக்கும் இந்த ஆவணப்படம். ஊடகங்களின் புகைப்படக்காரர்கள் சூழ்ந்த ஒரு சட்டகத்தில் இருந்து விரிகிறது இந்தப் படம்.
நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் சிறுவயது தோற்றத்தில் தங்களை அறிமுகம் செய்து கொள்வதிலிருந்து தொடங்கும் இந்த ஆவணப்படம், ‘மனசின்னகரே’ படத்தில் தொடங்கி ‘ஜவான்’ வரையிலான வாழ்க்கையைத் தொட்டுப் பேசிச் செல்கிறது.நயன்தாரா தன்னுடைய தொடக்க காலப் படங்களிலேயே ஜெயராம், சரத்குமார், மோகன்லால், மம்முட்டி, ரஜினிகாந்த் என நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.
நயன்தாராவை ‘மனசின்னகரே’வில் அறிமுகப்படுத்திய மலையாளத் திரைப்பட இயக்குநர் சத்தியன் அந்திகாட், ‘ஐயா’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் பாலச்சந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி, இயக்குநர்கள் விஷ்ணுவர்தன், அட்லி, நெல்சன், நடிகர்கள் நாகார்ஜுனா, ராணா டகுபதி, விஜய் சேதுபதி, உபேந்திரா, ஆடை வடிவமைப்பாளர் அனு வர்தன், நடிகைகள் ராதிகா, பார்வதி, தமன்னா போன்ற பிரபலங்கள் நயன்தாரா பற்றி இந்த ஆவணப் படத்தில் பேசுகின்றனர்.
ஆண்கள் கோலோச்சும் திரை உலகில் நட்சத்திரமான நயன்தாராவைப் பற்றி வியந்து பேசுகிறார் ராதிகா.
இந்த ஆவணப்படம் நயன்தாரா எதிர்கொண்ட சவால்களைப் பற்றிப் பேசினாலும், அவர் வாழ்வில் நடந்த பல சுவாரசியங்களை விட்டுவிட்டு கடந்து செல்வதாக உணர வைக்கிறது.அந்த சர்ச்சைக்குரிய 3 வினாடி ‘நானும் ரவுடிதான்’ பட வீடியோ துணுக்கும் வருகிறது.அது இல்லாமல் இருந்தாலும் ஒரு குறை இல்லை.
விக்கி – நயன் காதலைப் பற்றி விரிவாகப் பேசுகிறது இந்தப் படம் .பல சுவாரசியங்களைத் தவிர்த்தது போல் உள்ளது.
திருமண காட்சிகள் பிரம்மாண்டமாக உள்ளது.ரஜினிகாந்த், ஷாருக்கான், ஏ.ஆர். ரஹ்மான், சூர்யா – ஜோதிகா என பெரிய நட்சத்திர பட்டாளமே இவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர். ஆனால் வந்திருந்த நட்சத்திரங்கள் அனைவரையும் காட்டி இருக்கலாம். திருமண நிகழ்வு தொடர்பான காட்சிகள் அதிகம் இடம்பெறவில்லை.அதைத்தான் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். நயன்தாராவின் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனை ஏற்படுத்திய படங்களின் இயக்குநர்கள், தயாரிப்பாளர்களையும் பேச வைத்திருக்கலாம். அல்லது அவர்கள் பேச விரும்பவில்லையோ தெரியவில்லை.
எனவே கைக்கெட்டிய தூரத்தில் பூப் பறித்தது போல் உள்ளது இந்தப் படம்.
தொழில்நுட்ப ரீதியில் இந்தப் படம் திருப்தியைத் தந்தாலும் நேர்காண்களின் தொகுப்பு போல் உள்ளது.இன்னமும் எதிர்பார்த்தோம்.மேலும் கொஞ்சம் ஆழமாகப் பேசி இருக்கலாம்.