சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் நடிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில் 24ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘வேலைக்காரன்’. அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் 22ஆம் தேதி வெளியாகிறது. முன்பாக பத்திரிகையாளர்களை சந்தித்து படத்தை பற்றிய தன்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொண்டார் இயக்குநர் மோகன் ராஜா.
‘சிவகார்த்திகேயன் இல்லைனா இந்த படமே நடந்திருக்காது. தனி ஒருவன் கொடுத்த அழுத்தத்தை நாம் செய்யப்போற படத்துலயும் கொடுக்கணும்னு கேட்டார். படத்துக்கு என்ன தேவையோ அதை தயங்காமல் பண்ணுங்கனு பெரிய தெம்பை கொடுத்தார் ஆர்டி . ராஜா. படத்தில் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. வீம்புக்கு நடிகர்களை நடிக்க வைக்காமல் எல்லோருக்கும் நல்ல கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறேன். ராம்ஜி உழைப்பு அபரிமிதமானது. அவருடன் 3வது படமும் இணைந்து பண்ணுவேன். அனிருத் சின்ன பையன், ஆனால் பெரிய திறமையாளர். கதையை புரிஞ்சிக்கிட்டு சிறப்பான இசையை கொடுத்திருக்கிறார். நயன்தாரா தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம். அவர் ஒரு படத்தில் இருந்தாலே அது மிகவும் சென்சிட்டிவான படமாக தான் இருக்கும், அந்த அளவுக்கு பக்குவமான நடிகையாகி இருக்கிறார். ஃபகத் பாசில், அரவிந்த்சாமி போன்ற மிகச்சிறந்த நடிகர்களை என் படங்களில் இயக்கியதில் நான் பெருமைப்படுகிறேன்.
ஒரு நல்ல படம் வெளிவருவதில் நிறைய தடைகள் இருக்கின்றன. பரீட்சார்த்தமான படங்களின் பட்ஜெட் எப்போதும் 5 கோடிக்குள் தான் இருக்கும். ஆனால் இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கிறது. இங்கு நினைத்த படங்களை செய்ய யாருக்கும் உரிமை கிடைப்பதில்லை. தயாரிப்பாளர், ஹீரோ ஆகியோரை திருப்திப்படுத்த தான் படங்கள் படம் எடுத்து, ஒரு மேடை அமைத்த பிறகு தான் நாம் நினைத்ததை எடுக்க முடியும். வேலைக்காரர்கள், முதலாளித்துவம் பற்றிய குறைகளை இந்த படத்தில் சொல்லியிருக்கிறேன். இந்த சமூகத்தில் உழைப்புக்கான ஊதியம் பெரும்பாலானோருக்கு கிடைப்பதில்லை. அதையும் சினிமா மூலம் சொல்ல முயற்சித்திருகிறேன். கேள்வி கேட்டு புரட்சி செய்த காலம் முடிந்து விட்டது, பதில் சொல்லி புரட்சி செய்ய வேண்டிய காலம். இந்த படத்துக்கு பிறகு அது நடக்கும். சமூகத்தை பற்றி பேசும் படங்கள் நேர்மறையாக மட்டும் தான் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன்” என்றார்.


