ஹரிஷ் அலக் ,வின்ஷு, வி.ஜே. பப்பு, பாடினி குமார், ஜீவா ரவி, பிரவீனா, , கேத்தே, முருகானந்தம், பிரதீப், மதன் எஸ் ராஜா, சாரதா நந்தகோபால் நடித்துள்ளனர். சுபராக் முபாரக் இயக்கியுள்ளார் , ஒளிப்பதிவு – ஆனந்த் ராஜேந்திரன்,இசை -அஸ்வந்த். எடிட்டிங் -சுர்பார்க் எம், கலை – சி.கே. சக்திவேல்.தயாரிப்பு ஏ.அழகு பாண்டியன்.
அது ஒரு மலைப் பாங்கான பகுதி.அங்குள்ள ஒரு மலைக் கிராமம் ஒன்றில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது.அங்கே செல்கிற ஆண்கள் உயிருடன் திரும்பி வர மாட்டார்கள் என்ற நம்பிக்கையும் அச்சமும் நிலவுகின்றன.அப்படிப்பட்ட பகுதிக்கு ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக, காதல் ஜோடியான விஜே பப்பு – பாடினி குமார் உள்ளிட்ட இரண்டு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் என ஐந்து பேர் செல்கிறார்கள். அவர்கள் தங்கள் பணியைத் தொடங்கும் போது, அவர்களைச் சுற்றி வினோதமான அமானுஷ்யமான என்று நினைக்கும் படியான சம்பவங்கள் நடக்கின்றன. அத்துடன் அவர்கள் வழி தவறி ஆண்களுக்கு ஆபத்து நேரம் என்று கருதப்படும் வனப்பகுதிக்குள் நுழைந்து விடுகிறார்கள், அதன் பிறகு என்ன நடந்தது என்பதை பல மர்மங்களோடு சொல்வது தான் ‘நறுவீ’.
நாயகனாக நடித்திருக்கும் ஹரிஷ் அலக், புதுமுகம் என்றாலும் ஏற்று பாத்திரத்திற்கு நியாயம் செய்யும் அளவில் நடித்திருக்கிறார்.பாடல் காட்சிகளிலும் அலட்டிக் கொள்ளாமலேயே தன் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.விஜே பப்பு – பாடினி குமார் ஜோடி இருவரும், இயல்பாக நடித்துள்ளார்கள். பல்வேறு இடங்களில் படம் பார்ப்பவர்களைச் சிரிப்பு மூட்டுகிறார்கள்.ஜீவா ரவி, பிரவீனா, கேத்தே, முருகானந்தம், பிரதீப், மதன் எஸ்.ராஜா, சாரதா நந்தகோபல் ஆகியோரது அனுபவம் வாய்ந்த நடிப்பு படத்திற்கு கூடுதல் அனுகூலமாக உதவி உள்ளது.
இசையமைப்பாளர் அஸ்வத் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.பின்னணி இசையிலும் குறை சொல்ல ஒன்றுமில்லை.ஒளிப்பதிவாளர் ஆனந்த் ராஜேந்திரன், அடர்ந்த வனப்பகுதியின் அழகையும் அதன் பின்னே உள்ள ஆபத்தையும் உணர்த்தும் வகையில் காட்சிப்படுத்தி இருக்கிறார்.படத்தில் கண்டெடுக்கப்படும் ஒரு டைரி ஒரு கண்ணீர்க் காதல் கதையைக் கூறுகிறது.கல்விக்காகப் போராடியவர்களின் வாழ்க்கையையும் மூடநம்பிக்கையால் மனிதர்கள் மூடர்களாகி மாறிச் செய்த அட்டூழியங்களையும் நினைத்துப் பார்க்க வைக்கிறது
படத்தொகுப்பாளர் சுபராக்.எம், இரண்டு வெவ்வேறு கதைகளைத் தாவித்தாவிக் கதை சொல்லும் பாணியில் நான் லீனியர் முறையில் சொல்லி, படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்கிறார். எழுதி இயக்கியிருக்கும் சுபராக் முபாரக், சஸ்பென்ஸ் திரில்லர் ரகத்தில், அமானுஷ்யம் கலந்து கதை சொல்லும் என்றுள்ளார் ஆனால் அதில் அழுத்தம் இல்லை.
அச்சமூட்டுவதற்கும் பரபரப்பு காட்டுவதற்கும் ஏற்ற வகையில் கதையில் பல இடங்கள் இருந்தாலும் அதைச் சரியாகக் கையாளாமல் தவறி இருக்கிறார் இயக்குநர் .இதனால் சில காட்சிகளில் தொய்வு உணர முடிகிறது.இருந்தாலும் இந்தக் கதையின் மூலம் அவர் ஒரு நல்ல செய்தியைச் சொல்ல முயன்றுள்ளார்.மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு கல்வியின் மூலமே விடுதலை கிடைக்கும் என்பதை உணர்த்தும் வகையில் கல்வியின் முக்கியத்துவத்தை இந்தக் கதைக்குள் நுழைத்துச் சொன்னதற்காக இயக்குநரைப் பாராட்டலாம்.
பழங்குடியின மக்களின் வாழ்க்கையின் வலிகளை- கல்வி ஒன்றே அவர்களுக்கான மீட்புக்கான வழி என்பதையும் கூறியுள்ளார்.இந்தக் கருத்தை சஸ்பென்ஸ் படக் கதைக்குள் அவர் கையாண்டிருப்பது பாராட்டுக்குரியது.மொத்தத்தில் ‘நறுவீ’ கசந்தாலும் பிடிக்க வேண்டியஒரு மூலிகை மருந்து.


