’நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ விமர்சனம்

செந்தூர் பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாக, ப்ரீத்தி கரண் கதாநாயகியாக நடித்துள்ளார். சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி, தமிழ்செல்வி, ஷிவானி கீர்த்தி, அபிஷேக் ராஜு, மாலிக், நாகராஜ், எஸ்.கே.தாஸ், எம். அமுதாராணி, மினு வாலண்டினா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பிரசாத் ராமர் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.பின்னணிப் பாடகரும் இசையமைப்பாளருமான பிரதீப்குமாரின் இசையில்,தயாரிப்பில் உருவாகி இருக்கிறது.

வெளியீடு எஸ். ஹரி உத்ராவின் உத்ரா புரொடக்ஷன்ஸ் .இப்படம் மார்ச் 8, 2024-ல் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்தக் காலத்து இளைஞர்கள் பொறுப்பற்று திரிபவர்கள், பார்க்கிற பெண்களையெல்லாம் காமப்பார்வை பார்ப்பவர்கள், சிரித்துப் பேசினாலே தவறாக நினைப்பவர்கள் என்கிற பிம்பம் உள்ளது.இந்த எண்ணத்தில் படத்தின் கதாநாயகன் தொலைபேசியில் வலை வீசி பலருடன் கடலை போடுகிறான். அதில் சற்று சகஜமாக பேசும் அரசி என்கிற பெண்ணை பார்ப்பதற்கு மதுரையிலிருந்து எனது நண்பனை அழைத்துக் கொண்டு நண்பனின் பைக்கிலேயே மயிலாடுதுறை செல்கிறான். தவறான எண்ணத்தில் சென்றவன் அவளைத் தனியே அழைத்துச் செல்கிறான் தவறாக நடக்க முயற்சி செய்கிறான். முடிவு என்ன? என்பதுதான் கதை.

படம் ஆரம்பிக்கும் போதே தியேட்டரில் ஒரு முறைதவறிய ஜோடியின் சல்லாபத்தைக் காட்டுகிறார்கள்.அந்தக் காட்சியைப் பார்த்ததுமே படத்தின் மீது’ ஏ ‘முத்திரை குத்தி விடுவோம்.

மதுரையிலிருந்து மயிலாடுதுறை செல்கிற சிவா என்கிற இந்தப் படத்தின் கதாநாயகன் போகிற வழி எல்லாம் கடலை போடுவதும் பெண்களை எப்படி வளைப்பது என்றும் பேசிக் கொண்டு செல்கிறான்.

மயிலாடுதுறை செல்லும் சிவா அரசியை வீட்டில் போய் சந்திக்கிறான். அங்கே அவள் தனியாக இல்லை அவளது பாட்டியுடன் இருக்கிறாள். அதைப் பார்த்ததும் அவனுக்கு அதிர்ச்சி. இருந்தாலும் அவன் தன்னுடன் படிப்பவன் என்று பாட்டியிடம் பொய் சொல்லி விட்டு வெளியே வருகிறாள் அரசி. அவர்கள் பூம்புகார் செல்கிறார்கள் .அங்கே தனியிடம் தேடி அமர்ந்த போது மனதில் வைத்திருந்த காம எண்ணத்தைச் செயல்படுத்த அவன் திடீரென அவளிடம் தவறாக நடந்து கொள்கிறான். அதைக் கண்டு சற்றே பதறிய அவள் அப்போது துணிச்சலாக எதிர்வினை ஆற்றுகிறாள். அவனுக்கு அதிர்ச்சி வைத்தியமும் கிடைக்கிறது .அதன்பின் அவள் பயந்து ஓடாமல் அவனை எப்படி நடத்துகிறாள் முடிவு என்ன என்பதுதான் படத்தின் கதை.

கடலை போடும் பெண்ணை சந்தித்து எப்படியும் தனது ஆசையை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற ஒரு இளைஞனின் பாதையும் பயணமும் தான் இந்தப் படத்தின் கதை என்கிற அளவில் சிறுமையான நோக்கத்துடன் செல்லும் கதாநாயகனின் பார்வையில் படம் நகர்கிறது .படத்தின் பெரும் பகுதி பைக்கில் போவதிலேயே கழிகிறது.

கதாநாயகன் சிவா பாத்திரத்தில் வரும் நடிகர் செந்தூர் பாண்டியன் எப்போதும் உர்ரென்று மூஞ்சியை வைத்துக்கொண்டு சிடுசிடுப்பாக இருப்பது ஏன்? படம் முழுக்க அப்படியே வருகிறார்.கதாநாயகி ப்ரீத்தி கரண் ஓரளவுக்கு இயல்பாகவே நடித்துள்ளார்.கதாநாயகன் மூலம் கழற்றிவிட்டுவிட்டுச் செல்லும் அவனது நண்பன் பாத்திரம் படத்தின் முடிவில் அனுதாபத்தையும் நல்ல பேரையும் பெற்று விடுகிறது.

படத்தில் நடித்தவர்கள் எடுக்கப்பட்டுள்ள காட்சிகள் நோக்கமில்லாத . வெளிப்பாடுகள் போன்றவை படத்தின் இயக்குநரின் முதிர்வின்மையைக் காட்டுகிறது.

வணிக மதிப்பு ,இளைஞர்களுக்கு பிடிக்கும் என்ற மூடநம்பிக்கையில் படத்தில் திணிக்கப்பட்டிருக்கும் காட்சிகள், வசனங்கள் ஆபாச நெடியடித்து முகம் சுளிக்க வைக்கின்றன ,
பெண்களைத் தவறான நோக்கில் பார்க்கும் இளைஞர்களை எச்சரிக்கும் விதத்தில் இந்தப் படத்தை நாகரிகமாக எடுத்திருக்கலாம். ஆனால் மலிவான பாதையில் போய் படத்தை ஆபாசப் படம் போன்று தோன்ற வைத்து விடுகிறார்கள்.