தனது கணவனைக் கொன்றவர்களை மதுரையை எரித்து கண்ணகி பழி வாங்கினாள் என்பது சிலப்பதிகாரத்துக் கதை. தனது காதலனைக் கொன்றவர்களைக் காதலி எப்படிக் கொடூரமாகப் பழி வாங்குகிறாள் என்பதுதான் இந்த நவயுக கண்ணகியின் கதை.இந்தப் படத்தை கிரண் துரைராஜ் இயக்கி உள்ளார்.ஷார்ட் ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாகிறது.
இந்தப் படம் ஒரு பெண்ணை மையப்படுத்தி உருவாகி உள்ளது. கதை வேலூர் மாவட்டத்தில் நடக்கிறது.படத்தின் முதன்மைக் கதாபாத்திரமான சுவாதி ஒரு மேல் தட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவள். மருத்துவம் படிப்பவள்.
அவளது குடும்பத்தில் மத -ஜாதி ,மேல், கீழ் எண்ணங்கள் எல்லாம் இருக்கின்றன.ஆனால் வெளியில் தெரியாது.
அதற்கு இணையான நாயகன் கதாபாத்திரமான நந்தாவும் ஓர் டாக்டர் தான்.அவன் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவன். தனது
தாயுடன் எளிமையான வாழ்க்கை வாழ்கிறவன்.அவனோ பகுத்தறிவு சுதந்திர சிந்தனை கொண்டவன். இந்த இரு பாத்திரங்களுக்கு இடையே காதல் வருகிறது. அது பெண்ணின் வீட்டில் பிரளயமாக வெடிக்கிறது. அதன் விளைவாக நந்தா கொடூரமாகக் கொல்லப்படுகிறான்.அதற்கு நவயுக கண்ணகியாக மாறி சுவாதி எப்படி கொடூரமாக, யாரும் எதிர்பார்க்காத வகையில் பழி வாங்குகிறாள் என்பதுதான் கதை.
இது ஓர் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அது எங்கு நடந்தது என்பதைப் பற்றிப் பார்வையாளர்கள் யூகித்துக் கொள்ளும்படியான அடையாளங்களைக் காட்சிகளில் வைத்துள்ளார்கள்.சுவாதியின் பழிவாங்கல் எபிசோட் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்.அதிர்ச்சியூட்டக்கூடியதாகவும் இருக்கும். அது எப்படி சாத்தியம் என்பதையும் யூகிக்க வைக்கிறார்கள்.
படத்தின் பிரதான பாத்திரங்களான சுவாதி, நந்தா என்ற இருபாத்திரங்களும் நன்றாக சித்தரிக்கப்பட்டுள்ளன.சுவாதியின் கணவர் பாத்திர சித்திரமும் கூட நல்ல வார்ப்பு.
நல்லதுக்குத்தான் சொல்கிறேன் என்றுபெற்றோரால் மற்றோரால் எப்படிப் பழைய நம்பிக்கைகள் அடுத்த தலைமுறைகளிடம் பதிக்கப்படுகின்றன என்பதையும் கூறி சமுதாயத்திற்கு யோசிக்க வைக்கும் சில கேள்விகளையும் கேட்டுள்ளார் இயக்குநர்.
பிரதான பாத்திரம் சுவாதியாக வரும் நடிகை பவித்ரா பல்வேறு உணர்ச்சிகரமான தருணங்களைக் காட்டும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு நடிப்பில் ஒளிர்கிறார்..படத்தில் நடித்துள்ள அனைவருமே தங்கள் பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர்.
படத்தில் காட்டப்படும் குறியீடுகள் அளவுக்கு அதிகமாக தோன்றுகின்றன.இது சற்றே அலுப்பூட்டுகிறது.
படத்தின் ஒளிப்பதிவும் இசையும் நிச்சயம் படத்தை நல்ல தரத்திற்கு இட்டுச் சென்றுள்ளன. பொழுதுபோக்கு படங்களின் நடுவில் சற்றே யோசிக்க வைக்கும் வகையில் வந்துள்ள ஒரு படம் தான் இது.