‘நாங்கள்’ திரைப்பட விமர்சனம்

அப்துல் ரஃபே, மிதுன் வி, ரித்திக் மோகன், நித்தின் டி, பிரார்த்தனா ஸ்ரீகாந்த் , சாப் ஜான் எடத்தட்டில், ராக்ஷி நடித்துள்ளனர்.

கதை திரைக்கதை ,ஒளிப்பதிவு, படத்தொகுப்பு செய்து இயக்கியுள்ளார் அவினாஷ் பிரகாஷ் .தயாரிப்பு ஜி.வி.எஸ். ராஜு, இசை வேத் சங்கர் சுகவனம்.

இந்த ‘நாங்கள்’ திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்ற பெருமைக்குரியது. இந்தப் படம் வருகிற 18-ஆம் தேதி வெளியாகிறது.படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

கதையின் நாயகன் ராஜ்குமாராக வரும் அப்துல் ரஃபே ஊட்டியில் ஒரு தனியார் பள்ளி நடத்தி வருகிறார் .அவர் தனக்குள் ஒரு லட்சியவாதியாக இருக்க நினைக்கிறார்.தான் போட்ட கோட்டில் பயணம் செய்ய விரும்பும் பாத்திரம்.அவர் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்து வாழ்கிறார். தன்னுடன் தனது மூன்று ஆண் குழந்தைகளையும் வைத்துக் கொண்டு,அவர்களை மிகவும் கண்டிப்பாக வளர்க்கிறார். கண்டிப்பு என்றால் அப்படி ஒரு ராணுவக் கட்டுப்பாட்டுடன் வளர்க்கிறார் .சிறிய தவறு செய்தாலும் தண்டனைகள் அதிகம். தந்தையின் ஒடுக்குதலுக்குப் பயந்து அந்த குழந்தைகள் அடிமைகள் போல் வளர்கின்றன .ஒரு கட்டத்தில் எதிர்த்து திமிறி எழுகிறார்கள். கேரளாவில் உள்ள தங்களது தாய் பிரார்த்தனாவிடம் செல்கிறார்கள். ஆனால் தாய் இருக்கும் சிரமங்களைப் பார்த்து விட்டு அங்கிருக்க பிடிக்காமல் வேறு வழி இல்லாமல் மீண்டும் தந்தையிடம் வருகிறார்கள்.

ஒரு கட்டத்தில் தந்தை அப்துல்ரஃபே, மகன்களின் எதிர்காலத்திற்காகக் கடுமையான முடிவுகளை தைரியமாக  எடுக்கிறார் .அப்போது பிரிந்து போன மனைவி பிரார்த்தனா வந்து சேர்கிறார் . தனது மனைவியை அவர் ஏற்றுக் கொண்டாரா? குழந்தைகளுக்காக அவர் என்ன முடிவுகள் எடுக்கிறார்? என்பதே ‘நாங்கள் ‘படத்தின் மீதிக் கதை.

கண்டிப்பு என்கிற பெயரில் குழந்தைகளை அச்சுறுத்தும், கொடுமைப்படுத்தும் சர்வாதிகாரி தந்தையாக அப்துல் ரஃபே நடித்துள்ளார். அவர் குழந்தைகளைத் தாக்கும் காட்சிகளில் மோசமான மனிதராகத் தெரிகிறார்.அந்த பாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை வழங்கியுள்ளார் அப்துல் ரஃபே.
ஏமாற்றம் தோல்வி சோகம் துயரமென்று பிரார்த்தனா எதார்த்தமாக நடித்துள்ளார். அப்துல் ரஃபேயின் மகன்களாக மிதுன், ரித்திக் ,நிதின் ஆகியோர் வருகிறார்கள். குழந்தைத்தனமான பாவம் அறியாத அவர்களது முகபாவனைகள் நம்மை அவர்கள் மேல் அனுதாபத்தை ஏற்படுத்துகிறது.
தந்தையால் துன்புறுத்தப்பட்டவர்கள் ஒரு கட்டத்தில் பொங்கி எழுவது திரைக்கதையில் நல்ல திருப்பம் .ஒளிப்பதிவு செய்து இருக்கும் இயக்குநர் துயரமான காட்சிகளை மட்டும் கறுப்பு வெள்ளையில் காட்டி புதுமை செய்துள்ளார். இசையமைத்திருக்கும் வேத் சங்கர் தனது பின்னணி இசையால் படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார் .

மனைவியைப் பிரிந்து ஒரு தந்தை வாழ்கிறார் அவரிடம் வளரும் குழந்தைகள் எப்படி அணுகப்படுகின்றன ?அந்தத் தந்தையின் உளவியல் சிக்கல் என்ன? சமுதாயம் குறித்து அவரது பதற்றம் என்ன?கண்டிப்பாக வளரும் குழந்தைகள் எப்படி வாழ்க்கையினைப் பார்க்கிறார்கள் ,சந்திக்கும் வலிகளில் இருந்து அவர்கள் என்ன கற்றுக் கொள்கிறார்கள்? என்பதை உணர்ச்சிபூர்வமாக திரைக்கதை அமைத்து இயக்கி உள்ளார் அவினாஷ் பிரகாஷ்.படத்தில் நடித்திருக்கும் அனைவருமே யதார்த்தமாக நடித்துள்ளார்கள். ராஜ்குமார் பாத்திரம் ஏற்றுள்ள கதை நாயகன் பிடிவாதக்காரன் கொடுமைக்காரன் என்று நினைத்தாலும் அவரது கோணத்தில் வாழ்வில் முன்னேற வேண்டும் தன் குடும்பத்தையும் பிள்ளைகளையும் முன்னுக்கு  கொண்டுவர வேண்டும் என்ற லட்சிய வாதத்தில் இருக்கும் அவருடன் மற்றவர்கள் ஒத்துப் போகவில்லை, அவரது லட்சியத்திற்கு பிறர் ஒத்துழைக்கவில்லை என்கிற கோணத்தில் அவரது எண்ணம் இருக்கிறது .அதனால் இந்த பாத்திரத்தின் மீது எதிர்மறை நிழல் விழுகிறது .இந்தப் படத்தில் வரும் பாத்திரங்கள் அனைத்தும் அவரவர் கோணத்தில் சரியாகவே தோன்றும்.அந்த யதார்த்தத்தைப் படம் உணர வைக்கிறது. பாசங்கற்ற சமகால மனிதர்களைக் கண் முன் நிறுத்துகிறது.ஆனால் சில நாடகீயமான காட்சிகள் பலவீனமாக உள்ளன .

வழக்கம் போன்ற வணிக சினிமா சூத்திரங்களில் இருந்து சற்று மாறுபட்ட மனித உணர்வுகளைச் சொல்லும் படமாக இந்த ‘நாங்கள்’ படத்தைப் பார்க்கலாம்.