எளிமையான ஒரு கதையை எடுத்துக்கொண்டு தன் பாணியில் குறுகிய காலத்தயாரிப்பாக கொடுத்துள்ள படம்தான் ‘நாச்சியார்’ எனலாம்.
பாலாவின் நிறம் மாறாத பூதான் இந்த’ நாச்சியார்’.இதில் பாலாவின் அனைத்து அம்சங்களும் உண்டுதான் .ஆனால் சற்று அடக்கமாக.
நேர்மையான போலீஸ் அதிகாரி ஜோதிகா. அவரிடம் மைனர் பெண் கற்பழிக்கப்பட்ட வழக்கு ஒன்று வருகிறது. அதை விசாரிக்கும் அவர் அதற்குக் காரணமான மைனர் பையனான ஜி.வி.பிரகாஷை கைது செய்து சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைக்கிறார்.
ஆனால், அந்த பெண்ணோ , இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகிறோம், நடந்த தவறுக்கு இருவரும் தான் பொறுப்பு, என்று கூறுகிறாள். பிறகு கர்ப்பமான அந்தப் பெண்ணை ஜோதிகா தனது வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். சில நாட்களில் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறக்க, டி.என்.ஏ பரிசோதனையில் அந்த குழந்தையின் அப்பா ஜி.வி.பிரகாஷ் அல்ல என்று தெரிய வருகிறது.
அந்த பெண் யாரால் பாதிக்கப்பட்டாள், என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்க, அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் மீதிக்கதை.
ஒரே மாதிரியான படங்களில் நடித்துக் கொண்டிருந்த ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு இந்த படம் சற்று வித்தியாசம்தான். பல இடங்களில் தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் அவர் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மைனர் பெண்ணாக நடித்துள்ள இவானா, தனது குழந்தைமையையும், சேர்ந்து வரும் காதலையும் தனது கண்கள் மூலமாகவே பல இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ஜோதிகா துடிப்பான நடிப்பை ஓரம் கட்டிவிட்டு, எப்போதும் கோபத்துடனே வலம் வந்திருப்பது அவரை வேறுபடுத்திக் காட்டியிருக்கிறது.
முதல் முறையாக சொந்தக் குரலில்பேசியிருக்கும் ஜோதிகா, அதிரடியான தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ப தனது வசனங்களை உச்சரித்திருக்கிறார்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்துள்ள தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் நல்ல நடிகராக நல்வரவு. ஒரு காட்சியில் வரும் நீதிபதி , ஜி.வி.பிரகாஷின் பாட்டி என்று படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான வர்களாக இருக்கிறார்கள்.
தனது இசையை எந்த இடத்திலும் கோடுதாண்டவிடாமல் பாலாவின் கதை ஓட்டத்துடனே இளையராஜாவும் ஒளிப்பதிவாளர் ஈஸ்வரும் பயணித்துப் ப டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
முதல் முறையாக சென்னையை கதைக்களமாக கையாண்டுள்ளார் பாலா.
பாலா படத்தில் எந்த அளவுக்கு அழுத்தம் இருக்கிறதோ, அதே அளவுக்கு திரைக்கதையுடன் கூடிய நகைச்சுவைக் காட்சிகளும் அதிகமாக இருக்கும். இதில் அரசியல் மதம் சார்ந்த சாடல்களும் உண்டு.
எளியவர்களை மிதிக்கும் வலியவர்கள், எளியவர்களுக்காக சட்டத்தை நிலை நாட்ட போராடும் போலீஸ் அதிகாரி, என்கிற கதையை அழுத்தமாக சொல்ல முயற்சித்திருக்கும் பாலா, தனது பாணியில் இருந்து விலகி சொல்லியிருப்பதை சிலர் படத்திற்குப் பலவீனமாக உணரக்கூடும்.ஆனால் பாலாவும் மாற வேண்டாமா?