கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் நினைவுதினத்தை முன்னிட்டு கருவடிக்குப்பத்தில் உள்ள அவர் நினைவிடத்தில் அஞ்சலி கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:–
புதுவைக்கு பல முறை நான் வந்துள்ளேன். என் சொந்த ஊர் செங்கல்பட்டுதான். என் உறவினர்கள் பலரும் புதுவையில் வசிக்கின்றனர். புதுவை பல்கலைக்கழகத்தில் நாடக துறையில் நான் பயின்றேன். அப்போது எனது பேராசிரியரோடு 1980–ம் ஆண்டு சங்கரதாஸ் சுவாமிகள் நினைவிடத்திற்கு வந்திருந்தேன். அப்போது இதுபோல் பராமரிப்பு இல்லை, மண்டபமே இல்லை. ஆனால் இப்போது ஆத்மாக்கள் அமைதிபெறும் இடமாக இதை மாற்றியுள்ளனர்.
அன்று நாடகம் பயிலும் மாணவனாக வந்த நான் இன்று கலையுலக நடிகராக, நடிகர் சங்க தலைவராக வந்துள்ளேன். இந்த கூட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக பங்கேற்கவில்லை. சங்கரதாஸ் சுவாமிகளின் பல்லாயிரக்கணக்கான சீடர்களில் ஒருவனாக வந்துள்ளேன்.
முத்தமிழை வளர்த்த தமிழ்ச்சங்கத்தில் நாடக கலைஞர்களின் நிலை மனக்கஷ்டத்தை அளிக்கும் நிலையில் உள்ளது. அவர்களுக்கு மருத்துவ உதவி, கல்வி உதவி, பொருளாதார உதவிகள் செய்வது போதாது. இது எல்லா மனிதர்களுக்கும் தேவைப்படுவதுதான். அதைவிட ஒரு படி மேலாக நாடக கலைகளை மீட்டுருவாக்கம் அளித்து புத்துணர்ச்சி ஊட்ட வேண்டும். நாடக கலைஞர்கள் யாரையும் சார்ந்து கையேந்தும் நிலையை மாற்ற வேண்டும்.
நான் லண்டனில் தாண்டவம் என்ற சினிமா படத்திற்காக 40 நாட்கள் தங்கியிருந்தேன். அப்போது மாலை 5 மணியானவுடன் இயக்குநர்களை கெஞ்சி கூத்தாடி என்காட்சிகளை முடிக்கும்படி கூறுவேன். லண்டனில் ஒரே தெருவில் 65 நாடக அரங்குகள் உள்ளது. அங்கு சிறிது காலதாமதமாக சென்றாலும் டிக்கெட் கிடைக்காது. பிரான்சிலும் நாடக கலைக்கு வரவேற்பு உள்ளது. அங்கு குறைந்தபட்ச டிக்கெட்டின் விலையே 22 பவுண்ட். நாடக கலைக்கு மக்களே கைகொடுக்க வேண்டும். நாம் எல்லோரும் சேர்ந்து கைகொடுத்து நாடக கலைஞர்களை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும். சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகத்தை உலக அரங்கிற்கு கொண்டுசெல்வேன்.
இந்த பதவிக்காலம் 3 ஆண்டுகள்தான். அதற்குள் சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகத்தை வெளிநாடுகளுக்கு கொண்டுசெல்ல அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன். புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளும் இந்த நினைவிடத்திற்கு வந்து செல்லும்படி இந்த இடத்தை மாற்றுவோம். நினைவஞ்சலிக்கு பல்வேறு இடங்களில் இருந்து வரும் நடிகர்கள் தங்குவதற்கு வசதி செய்துதர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை நாங்கள் நிறைவேற்றுவோம். அடுத்த ஆண்டு இதைவிட சிறப்பாக நினைவுநாள் நிகழ்ச்சியை மக்களும் பங்கேற்கும் வகையில் நடத்துவோம்.”
இவ்வாறு அவர் பேசினார்.