பிக் பாஸ் புகழ் தர்ஷன், மஹிமா நம்பியார், சிங்கம் புலி ,ஆர் எஸ் சிவாஜி, அருள்தாஸ் , இன்ப ரவிக்குமார், வசந்தா நடித்துள்ளனர். எங்கேயும் எப்போதும் திரைப்படம் இயக்கிய எம்.சரவணன் இயக்கி உள்ளார்.
நாட்டு நடப்பில் நிலவும் ஒரு பிரச்சினையை மையமாக வைத்து இப்டத்தை எடுத்துள்ளார். பெரும்பாலான தொலைதூரத்துக் கிராம மக்கள் சந்திக்கும் பிரச்சினை தான் கதை.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு மலைக்கிராமம். அங்குள்ள மருத்துவ மனையில் பணிபுரிய மருத்துவர்கள் மகிழ்ச்சியுடன் வருவதில்லை .மலைப் பகுதி என்பதால் வரத் தயங்குகிறார்கள். வருபவர்கள் சிறிது காலத்தில் மாறுதல் பெற்று சென்று விடுகிறார்கள்.மருத்துவமனை இருந்தும் சரியான மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் அந்த கிராமத்தில் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன. அந்த ஊரைச் சேர்ந்த நாயகன் தர்ஷனின் தங்கையும் இறந்து போகிறார்.அப்படி ஒரு சூழலில் தான் அரசு நியமிக்கும் ஒரு பெண் மருத்துவர் அந்த ஊருக்கு வருகிறார். அவரும் மாறுதல் பெற்று சென்று விடுகிற மனநிலையில் உள்ளார். .தங்கள் ஊருக்கு மருத்துவராக வந்த அவரைத் தக்க வைக்க அந்த மக்கள் போராடுகிறார்கள்.அவர்களின் போராட்டமும் அதன் விளைவுகளும் தான் படத்தின் கதை.
ஏற்கெனவே ’எங்கேயும், எப்போதும்’, ’இவன் வேற மாதிரி’ படங்களில் வணிக அம்சங்களைக் கலந்து ஒரு விறுவிறுப்பான கதையைச் சொன்ன சரவணன், இப்படத்தில் பிரச்சினைகளின் பின்னணியில் உள்ள மனித உணர்ச்சிகளை மையமாக வைத்து அதன் வழியே இப்படத்தை எடுத்துள்ளார். இடையில் சில நாடகீய தருணங்களை இணைத்துள்ளார்.
சந்திராயன் விடுகிறோம் எனப் பெருமைப்படும் இந்தக் காலத்தில்தான் குக்கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளன என்ற அவலத்தைக் கூறியுள்ளார்.
மக்கள் வாழ்க்கையை அரசியல் எப்படி மாற்றுகிறது என்பதை தொட்டுக்காட்டும் வகையில் நீட் அரசியல், உணவு பழக்கமாற்றம் போன்றவற்றையும் சொல்கிறது நாடு.
நாயகன் பிக் பாஸ் தர்ஷனுக்கு இது பெயர்சொல்லும் வாய்ப்பு. பிரச்சினையால் அழுத்தப்பட்ட சோகம் கலந்த நடிப்பில் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறார்.
டாக்டராக வரும் மஹிமா முதலில் ஊர் மக்களை வெறுக்கிறார்.பின்பு புரிந்து கொண்டு நேசிக்கிறார்.இந்தச் சூழலுக்கான நடிப்பு வாய்ப்பில் நல்ல நடிப்பைத் தந்துள்ளார்.
சிங்கம் புலி பாத்திரத்தின் மூலம் நடப்பு அரசியலில் கேள்வி கேட்க வேண்டியவற்றைப் பற்றிப் பேச வைத்துள்ளார் இயக்குநர்.இதில் கார்ப்பரேட் மருத்துவமனைகளைப் பற்றி அழுத்தமாகப் பேசியுள்ளார். சக்திவேலின் ஒளிப்பதிவிலும் சத்யாவின் இசையிலும் இயக்குநரின் கரம் வலுப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஆன்மா கிராமங்களில்தான் இருக்கிறது என்றார் காந்தி. கிராமங்களைப் புறம் தள்ளிவிட்டு நகரங்களை மட்டும் வளர்ப்பது வளர்ச்சி இல்லை வீக்கம் என்பதை உணர வைக்கிறது இப்படத்தின் கதை.கிராமங்கள் வளர ஆரோக்கியமான மக்கள் தேவை. அதற்கு மருத்துவ வசதி தேவை என்பதை அழுத்தமாகக் கூறி உள்ள இந்தப் படம்,மருத்துவம் போன்றே மருத்துவக் கல்வியை வலியுறுத்துகிறது.
நாடு என்பது தனியானது அல்ல. பல ஊர்கள் சேர்ந்ததுதான் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.இந்த வகையில் நாடு நல்லதொரு கருத்தைக் கூறியுள்ள படம் எனலாம்.