அண்மையில் வெளியான ‘தனி ஒருவன்’ படம் வெற்றிப்படமானதை முன்னிட்டு படக்குழுவினர் ஊடகங்களைச் சந்தித்தனர். ஜெயம் ரவி, தம்பி ராமையா, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட சில நடிகர்களும், இயக்குநர் மோகன் ராஜா, இசையமைப்பாளர் ‘ஹிப்ஹாப் தமிழா’ புகழ் ஆதி உள்ளிட்ட சில தொழில்நுட்ப கலைஞர்களும் கலந்து கொண்டார்கள்.
அந்நிகழ்ச்சியில் இயக்குநர் மோகன் ராஜா பேசும்போது
“நான்12 ஆண்டுகளாக சினிமாத் துறையில் இருந்தும், நான் இத்தனை படங்கள் எடுத்தும், இயக்குநராக என்னை யாரும் நம்பவில்லை.என்னிடம் வரும் ஹீரோக்கள் அனைவருமே ‘ரீமேக் படம் எடுப்பீர்கள் என்றால் நடிக்க தயார்’ என்றே கூறினார்கள். இதனால் நான் திரிசங்கு நிலையிலேயே இருந்து வந்தேன்.”
நான் புத்திசாலியெல்லாம் கிடையாது. என்னை உழைப்பாளி என்று சொன்னால் ஏற்றுக்கொள்வேன். புத்திசாலிகளை என்னுடன் சேர்த்துக்கொண்டு, என்னுடைய முழு உழைப்பை இந்த படத்திற்கு கொடுத்தேன். அதன் அறுவடையாகத் தான் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது” என்றார்.
அடுத்து பேச வந்த ஜெயம் ரவி, “இதுநாள் வரை பத்திரிகையாளர்களிடம் எனக்கு நட்பு இருந்தது; ஆனால் அவர்கள் மேல் எனக்கு மரியாதை இருந்ததில்லை. ‘தனி ஒருவன்’ விமர்சனங்களைப் படித்த பிறகுதான் பத்திரிகையாளர்கள் மேல் முதன்முதலாக எனக்கு மரியாதை ஏற்பட்டது. என்ன விமர்சனம்! எத்தனை பாராட்டு!
ஊடக பத்திரிகையாளர் சந்திப்புகளில் எல்லாம்என்னிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்பார்கள் உங்களுக்கும் அந்த நடிகைக்கும் இதுவாமே. அந்த நடிகையுடன் நெருக்கமாக நடித்தீர்களா? இந்த நடிகையின் இடுப்பைக் கிள்ளினீர்களாமே என்றெல்லாம் கேட்பார்கள். அப்போது எனக்குக் கடுப்பாக இருக்கும். புத்தி சாலித்தனமாக கேட்க மாட்டார்களா உருப்படியாக கேட்க மாட்டார்களா ? சீரியஸாக எதாவது கேட்க மாட்டார்களா என்று நினைப்பேன்.
ஜெயம்ரவிக்குள் சீரியஸான மனுஷனும் இருக்கிறானே அதைப்பற்றி யாருமேகேட்க மாட்டார்களா என்று நினைப்பேன்.இனி நல்ல படம் கொடுத்தால் பத்திரிகையாளர்கள் நல்ல விமர்சனம் எழுதுவார்கள் என நம்புகிறேன்.
என் திரையுலக வாழ்க்கையில் ‘தனி ஒருவன்’ சாதனை படம். நல்ல படங்கள் எடுத்தால் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அதற்கு இந்த படத்தின் வெற்றி உதாரணம். என் அண்ணன் மோகன் ராஜாவை ‘ரீமேக்’ இயக்குநர் என்று பலரும் அழைத்தனர். அது எனக்கு வருத்தமாக இருந்தது.
இந்த படம் மூலம் நேரடியாக வெற்றி படம் கொடுக்க முடியும் என்று அவர் நிரூபித்துவிட்டார். இதுவரை என்னை சந்தோஷப்படுத்தித்தான் அவர் பார்த்துள்ளார். இப்போது முதல் தடவையாக இந்த படம் மூலம் அவர் சந்தோஷப்படுவதை பார்த்து நான் ஆனந்த கண்ணீர் வடித்தேன்.காதல், குத்துப்பாட்டு எதுவும் இல்லாமல் வந்த ‘தனி ஒருவன்’ படத்தை ரசிகர்கள் கொண்டாடுவதன் மூலம் நல்ல கதைகளில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வமும் ஏற்பட்டுள்ளது.”.” என்று பேசினார்.
தம்பி ராமையா, கணேஷ் வெங்கட்ராம் இசையமைப்பாளர் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி போன்றோரும் கலந்து கொண்டு பேசினர்.