நாம் ஆவணப்படுத்துதலில் பின்தங்கி இருக்கிறோம்: இயக்குநர் வசந்த பாலன் பேச்சு!

திரைப்பட இயக்குநரும் கவிஞருமான பிருந்தா சாரதி இயக்கி உருவாக்கி இருக்கும் ‘கவிக்கோ’ அப்துல் ரகுமான் பற்றிய ஆவணப்படம்  சென்னை படைப்பு அரங்கத்தில் திரையிடப்பட்டது.இந்த சிறப்புக் காட்சிக்கு இயக்குநர் வசந்த பாலன்  சிறப்பு விருந்தினராக   வந்திருந்தார்.

இயக்குநர் வசந்த பாலன் ஆவணப்படம் பற்றிப் பேசும் போது,

Vasanthabalan Director-Movie.Webindia123.com“பிருந்தா சாரதி எனது நண்பர் எனது அறைத் தோழர் என்பதால் அரைகுறையாகத் தான் புரிந்து கொண்டிருப்பேன். நெருக்கமாக இருப்பதால் ஒரு சிக்கல் இருவருமே சரியாகப் புரிந்து கொண்டிருக்க மாட்டோம். அருகில் இருப்பவர்களைப் புரிந்து கொள்வதில் சிக்கல்தான். இந்தப் படத்தைப் பார்த்தேன் இது ஒரு பிரமாதமான முயற்சி. அதற்காக நான் அவரைப் பாராட்டுகிறேன். படம் பார்க்கும்போதுதான் தெரிந்தது ,இது எவ்வளவு பெரிய வேலை என்று. ஒரு ஆவணப்படம் எடுப்பது திரைப்படத்தை எடுப்பதை விட கடினமான வேலை. ஒவ்வொருவரையும் தேடித்தேடிச் சென்று எடுத்து சேர்ப்பது சாதாரண வேலை அல்ல.
மிகச்சிறப்பாக இருக்கிறது, அற்புதமாக இருக்கிறது. ஆவணப்படம் பற்றிக் குறைவாக மதிப்பிடுவது தமிழகத்தில் இருக்கிறது, இந்தியாவில் இருக்கிறது.

ஆவணப்படுத்துதலில் நாம் பின்தங்கி இருக்கிறோம் ஏ.பி. நாகராஜன் என்கிற இயக்குநரைப் பற்றி எந்த ஆவணமும் இல்லை. மாடர்ன் தியேட்டர்ஸ் எப்படி இருந்தது ? ஸ்டுடியோக்கள் எப்படி இருந்தன? எவ்வளவோ ஆளுமைகள் எப்படி இருந்தனர்? ஏதாவது ஆவணங்கள் இருக்கின்றனவா?

நான் ஆவணப்படுத்துதல் பற்றிப் பேசிக்கொண்டே இருக்கிறேன். ஆவணப் படுத்துதலில் நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம்.மிகவும் பலவீனமாக இருக்கிறோம்.
பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழன் வாழ்ந்தான் என்பதற்கு என்ன ஆவணம் இருக்கிறது?
நமக்கு 2000 ஆண்டுகால பாரம்பரியம் இருக்கிறது. ஆனால் எந்த டாக்குமெண்டேஷன் இருக்கிறது? நான் எங்கே போனாலும் டாகுமெண்டே சன் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறேன் இதில் நாம் மிகவும் பலவீனமாக இருக்கிறோம் செய்யத் தவறிக் கொண்டிருக்கிறோம்.
ஆவண படுத்துதல் சார்ந்து ஒரு கூச்ச சுபாவம் தமிழர்களிடம் இருந்து கொண்டே இருக்கிறது.டாக்குமெண்டேஷன் எவ்வளவு முக்கியம் என்று
நான் ஜெயமோகனிடம் பேசிக்கொண்டே இருப்பேன். அதற்குப் பிறகுதான்  விஷ்ணுபுரம் விருது விழாவிற்கு ஒவ்வொரு எழுத்தாளர்கள் பற்றியும் டாக்குமெண்டரி எடுக்கப்பட்டது. அப்படித்தான் விருது பெறும் படைப்பாளிகள் பற்றி ஆவணப்படம் எடுத்து ஒரு நூலையும் வெளியிட்டு வருகிறார்கள்.
விஷ்ணுபுரம் அமைப்பு தொடர்ந்து ஆவணப் படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து இந்த கவிக்கோவுக்கு எடுத்திருக்கும் இந்த ஆவணப் படத்தை நான் பார்க்கிறேன்.
அவர் எவ்வளவு பெரிய ஆளுமை என்று நினைக்கிற போது ஆச்சரியமாக இருக்கிறது.எப்படி மலையைப் பார்த்து வியந்திருக்கிறோமோ,எப்படி கடலை பார்த்து வியந்திருக்கிறோமா அப்படி கவிக்கோ என்கிற ஆளுமையைப் பார்த்து நான் வியந்து போகிறேன்.என் கல்லூரிக் காலத்தில் எங்கள் கல்லூரியில் இரண்டு குழுக்கள் இருக்கும் ஒன்று வைரமுத்துவைப் பின்பற்றுபவர்கள் . இன்னொன்று அப்துல் ரகுமானைப் பின்பற்றுபவர்கள் . கவிக்கோ ‘பித்தன்’ என்ற ஒரு கவிதைத் தொடர் எழுதினார் .அந்தக் கவிதையைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு அதே பித்தன் வேறு மாதிரி சொன்னால் எப்படி இருக்கும் என்று நான் எழுதிப் பழகினேன். இதைப் பார்த்த போதுஎன் கல்லூரி நாட்கள் நினைவுக்கு வந்தன.
ஒரு பழுத்த சிங்கம் போன்ற அந்த பெரும் ஆளுமையைத் தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைத்தது .

இந்த ஆவணப்படத்தில் பேசிய ஆளுமைகள் அனைவருமே அழகாகப் பேசி இருக்கிறார்கள்.இந்தப் படத்திலிருந்து தமிழக அரசியல் மாற்றங்கள், மரபுக் கவிதையின் மாற்றம், புதுக்கவிதையின் வளர்ச்சி, ஹைக்கூ கவிதை வளர்ச்சி போன்ற அனைத்தையும் தெரிந்து கொள்ள முடிகிறது.அவர் எப்போது முதலில் கவிராத்திரி
நடத்தினார் போன்ற எவ்வளவோ விஷயங்களை ஒரு ஆவணப்படத்தில் செய்ய முடியுமா என்று ஆச்சரியமாக இருக்கிறது .இது மொத்த கவிஞர்களின் வரலாறு போல இருக்கிறது . இதில் பேசுகிற ஆளுமைகளை பார்க்கும் பொழுது ஒவ்வொரு முகத்திற்கும் ஒரு ஆவணப்படம் எடுக்க வேண்டும் போல் தோன்றுகிறது.தமிழக அரசோ, தனியார் நிறுவனங்களோ இதற்கு முயற்சி செய்யலாம்.உங்களுக்குத் தெரியுமா போன முறை ‘The Elephant Whisperers ‘என்ற ஆவணப்படத்திற்கு ஆஸ்கார் விருதே கிடைத்தது.எனவே இது போன்ற ஆவணப் படங்கள் நிறைய எடுக்கப்பட வேண்டும். பிருந்தாவுக்கு என் வாழ்த்துக்கள் “என்றார்.  

திரையிடலுக்குப் பின்பு படைப்பு குழும வெளியீடுகளாக கோ. லீலா எழுதிய ‘பூமியின் மூலப்பத்திரம்’ மற்றும் ‘சோறு – உணவு அரசியல்’ ஆகிய இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன.நூல்கள் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் ஜோ டி குரூஸ், மருத்துவர் சிவராமன், சூழலியலாளர் கோவை சதாசிவம், இயக்குநர் பிருந்தா சாரதி, படைப்பு நிர்வாகி ராஜா, படைப்பு நிறுவனர் ஜின்னா அஸ்மி, திரைக் கலைஞர் ரேகா ஆகியோர் கலந்து கொண்டனர்.