வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம், வெளியான அன்றே அதன் மாபெரும் வெற்றியை உறுதி செய்துவிட்டது.
சிலம்பரசனுக்காக, எஸ்ஜே சூர்யாவுக்காக, யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையை ரசிப்பதற்காக ரசிகர்கள் திரையரங்குகளுக்கு ரிப்பீட் விசிட் அடித்த அற்புதமும் நடந்தது.
கலைஞர்களுக்கு முதலில் சந்தோசம் கொடுப்பது ரசிகர்களின் கைதட்டல்.. இரண்டாவதாக மாநில, தேசிய, உலக அளவில் தங்களது திறமைக்கு கிடைக்கும் அங்கீகாரம். உழைப்புக்கேற்ற ஊதியம் கூட அவர்களுக்கு மூன்றாம் பட்சம் தான்.
இந்த மூன்றுமே எந்த குறைவுமில்லாமல் கிடைத்த சந்தோஷத்தில் இப்போது மிதக்கின்றனர் மாநாடு படக்குழுவினர்.
படம் திரைக்கு வரும் முன்பே தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அனைவருக்கும் அவர்கள் உழைப்பிற்கான ஊதியத்தை பைசா பாக்கியில்லாமல் வழங்கிவிட்டார்.
படம் வெளியான நாள் முதல், அரங்கு நிறைந்த கூட்டமும் ரசிகர்களின் இடைவிடாத கைதட்டலும் இரண்டாவது சந்தோஷத்தையும் வழங்கிவிட்டன.
சமீபத்தில் தான் இந்தப்படம் 5௦வது நாளை கொண்டாடிய நிலையில் தற்போது நடைபெற்று வரும் நார்வே திரைப்பட விழாவில் கலந்துகொண்டு போட்டியிட்ட மாநாடு திரைப்படம் நான்கு பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது தான் இப்போதைய லேட்டஸ்ட் சந்தோஷத்திற்கு காரணம்,
முழுக்க முழுக்க தமிழ்ப் படங்கள் மட்டுமே பங்கேற்கும் ‘நார்வே தமிழ் திரைப்பட விழா’ விருதுகள் அறிவிப்பு நிகழ்ச்சி காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது.
இதில் சிறந்த இயக்குனராக வெங்கட்பிரபு, சிறந்த இசையமைப்பாளராக யுவன்சங்கர் ராஜா, சிறந்த வில்லனாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா மற்றும் சிறந்த படத்தொகுப்பாளராக பிரவீன் கே.எல் என மாநாடு படத்தில் பணியாற்றியவர்களே நான்கு விருதுகளை தட்டி சென்றுள்ளார்கள்..
இதில் இன்னும் கூடுதல் சந்தோஷமாக இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஒய்.ஜி.மகேந்திரனுக்கு அவரது இத்தனை ஆண்டுகால கலைச்சேவையை பாராட்டி கலைச்சிகரம் விருதும் வழங்கப்பட்டுள்ளது.
இந்தப்படத்திற்கு இத்தனை விருதுகள் கிடைத்ததன் பின்னணியில் பலரது உழைப்பும் இருந்தாலும், இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து, பல சிரமங்களுக்கு இடையே படத்தை எடுத்து முடித்து, ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் அர்ப்பணிப்பு உணர்வு மிக முக்கியமான காரணம்.. நல்ல படைப்புகளை எந்த சமரசமும் இன்றி உருவாக்க முற்படும்போது இதுபோன்ற விருதுகள் தான் சுரேஷ் காமாட்சி போன்ற தயாரிப்பாளர்களுக்கு மணிமகுடத்தில் சூட்டப்பட்ட வைரமாக அமையும்.
மாநாடு படத்திற்கான இந்த வருடத்திய முதல் விருது பட்டியலை நார்வே தமிழ் திரைப்பட விழா துவங்கி வைத்துள்ளது. இன்னும் பல திரைப்பட விழாக்களில் மாநாடு படம் கலந்துகொண்டு இதேபோன்ற பல விருதுகளை இன்னும் அள்ளி வரும் என்பதில் சந்தேகமே இல்லை.