பணத்தாசை ,குறுக்கு வழிப்பாதை, பயணம்,குற்றவுணர்ச்சி இவைசார்ந்த கதை. நல்லதொரு உளவியல் பார்வையில் எடுக்கப்பட்டுள்ள கதை.
இன்றைய உலகமயமாக்கல் சூழலில் எப்படியாவது பணம் சம்பாதிக்க நினைக்கும் நாலு பேரைப் பற்றி சொல்லியிருக்கும் படம்தான் ‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’.
நியாயமான போலீஸ்காரர் ஒருவர் பெரும் கோடீஸ்வரர் ஒருவரின் உயிரைக் காப்பாற்றுகிறார். பண ஆசை இல்லாத அந்தப் போலீஸ்காரருக்கு கோடீஸ்வரர் பிளாங் செக் ஒன்றைக் கொடுக்கிறார்.
அவரது மகனோ தந்தைக்கு நேர் எதிரான கொள்கையுள்ளவர்.எப்படியும் பணம் சம்பாதிக்க நினைக்கிற ரகம். அப்படிப்பட்ட அவரது மகனைச்சிக்க வைத்து அந்தச்செக்கை வைத்துப் பணம் பண்ண ஒரு கும்பல் திட்டமிடுகிறது. கும்பலுடன் அவரது மகன் இணைந்து நாலு பேராகி, அந்த செக்கை வைத்து பல கோடிகளை சுருட்டலாம் என்று திட்டம் போடுகிறார்கள். தில்லு முல்லுகள் மூலம் வங்கியை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட, அதில் வெற்றி பெற்றார்களா இல்லையா, என்பதை பலவிதமான திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையோடு சொல்லியிருக்கிறார்கள்.
எந்த மாதிரியான கதை சொன்னாலும் அதை சினிமா விதிப்படி தான் சொல்ல வேண்டும் என்ற சூத்திரத்தை இப்படத்தின் மூலம் உடைத்துள்ள இயக்குநர் தினேஷ் செல்வராஜ், தான் சொல்ல வந்ததை ரொம்ப தைரியமாகச் சொல்லியிருக்கிறார்.
நடிகர்களைக் காட்டிலும் கதையும் அதை சொல்லும் விதமும் தான் முக்கியம் என்றாலும், கதையில் சொல்லப்படும் சம்பவங்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் நடிகர்களின் பங்கு அதிகம். அந்த வகையில், இதில் நடித்த இந்த நாலு பேரும் புதியவர்கள் என்றாலும் அவர்களது நடிப்பு அவர்கள் நடித்த கதாபாத்திரத்தை படம் பார்ப்பவர்களின் மனதில் பதியச் செய்கிறது.
‘லைப் இஸ் பியூட்டிபூல்’ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டு கடைசியில் அத்தனையையும் கோட்டைவிடும் அனில் என்ற வேடத்தில் நடித்துள்ள கார்த்திகேயன், எப்போதும் படபடவென்று பேசி அவ்வபோது நம்மை சிரிக்க வைப்பதுடன், பதற்றத்தை வெளிப்படுத்தி நமக்கும் அந்த பதற்றத்தை கொடுக்கும் ஸ்ரீதர் என்ற இவன்ஸ்ரீ, ஜானி என்ற வேடத்தில் நடித்த ஜெகதீஸ். இந்த மூன்று பேரால் தான் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை தெரியாமலேயே அவர்களுடன் கூட்டணி அமைத்து கொள்ளையில் ஈடுபடும் பிரபு என்ற ஷாரியா, பிரபுவின் அப்பா வேடத்தில் அநியாயத்துக்கு நல்லவராக நடித்திருக்கும் அருள்ஜோதி என அனைத்து நடிகர்களின் நடிப்பும் நிறைவாக உள்ளது.
படத்தில் ஒரே ஒரு இடத்தில் கூட பெண்களை காட்டாமல் படமாக்கியிருப்பது புதிது மட்டுமல்ல துணிச்சலானதும் கூட அதை மறக்க வைக்குமளவுக்குச் வேகமாகச் செல்லும் திரைக்கதை சபாஷ் போட வைக்கிறது .
பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்து, எப்படி வேண்டுமானாலும் வாழலாம், என்பதை நான்கு கதாபாத்திரங்கள் மூலம் காட்டியிருக்கும் இயக்குநர் இப்படித்தான் வாழ வேண்டும், இது தான் வாழ்க்கை என்று அருள்ஜோதி கதாபாத்திரம் மூலம் சொல்லியிருக்கும் விதம், இதம்.
ஆங்காங்கே தெறிக்கும் நறுக் வசனங்கள் அட போட வைக்கின்றன
இயக்குநர் தினேஷ் செல்வராஜ் நம்பிக்கையூட்டும் நல்வரவு.