மதுமிதா,வேல்முருகன்,ராஜலிங்கம்,செந்தில் குமார்,முருகேசன் ,மாரிக்கண்ணு,கோவை உமா மற்றும் கிராமத்து மக்கள் நடித்துள்ளனர்.அறிமுக இயக்குநர் வெண்பா கதிரேசன் இயக்கியுள்ளார்.ஒளிப்பதிவாளர் – பிரவீன் ,இசை – ஹரிகிருஷ்ணன்,எடிட்டர் – ஆனந்த் லிங்ககுமார்,கலை- தாமோதரன்.அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா வழங்கும் இப் படத்தை ஸ்ரீ துர்கா கிரியேஷன்ஸ் சார்பில் வி.ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிவதானுபுரம் என்கிற ஊர் தான் கதை நிகழ்விடம்.அந்த ஊராட்சியில் பல்வேறு சமூகத்தினரும் வாழ்ந்து வருகிறார்கள்.அந்த ஊராட்சி பொதுத் தொகுதியாக இருந்த போது பெரிதாக ஒன்று மாற்றம் இல்லை அது தனித்தொகுதியாக மாறுகிறது.தாழ்த்தப்பட்டவர்கள் சிறுபான்மையாகவும் பிற சமூகத்தினர் பெரும்பான்மையாகவும் வாழ்கிறார்கள் .எனவே தாழ்த்தப்பட்டவர்கள் நம்மை ஆள்வதா என்ற ஆணவப்போக்கு அங்கே தலை தூக்குகிறது.இருந்தாலும் அந்த மேல் தட்டு வர்க்கத்தினர் ,முதலில் அதற்குப் பல்வேறு இடையூறுகளைச் செய்கிறார்கள்.வேட்பாளர் கொலை வரை செல்கிறது.ஒரு கட்டத்தில் தங்களுக்கு சாதகமாக உள்ளவரை வேட்பாளராக்கி ஒரு கைப்பாவையாக அவரைப் பயன்படுத்தி தங்களது காரியத்தை சாதிக்க நினைக்கிறார்கள்.
கால மாற்றத்திற்குப் பின் 15 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஊர் மீண்டும் தனித்தொகுதி ஆகிறது.
தங்களது பொம்மை வேட்பாளரை நிறுத்துகிறார்கள் மேல்தட்டு சமூகத்தினர்.ஒரு காலத்தில் வேட்பாளராக நின்று கொலை செய்யப்பட்டவரின் பேத்தி அமுதா போட்டி வேட்பாளராக களத்துக்கு வருகிறாள்.அவளுக்கு எதிராக அவதூறுகள், பொய்ப்பிரச்சாரம், மிரட்டல், கொடூர தாக்குதல் என்று பல்வேறு தடைகளைச் செய்கிறார்கள்.அவளுக்கு ஆதரவாக யாருமே இல்லை. குடும்பத்தினரே வேட்பு மனுவைத் திரும்பப் பெறச் சொல்லி வற்புறுத்துகிறார்கள்.இந்நிலையில் அவள் எப்படி எதிர்ப்புகளை எதிர்கொள்கிறாள்? எப்படி அவள் தனது கொள்கையில் தீவிரமாக இருந்து வெற்றி பெறுகிறாள் என்பதே ‘நாளை நமதே’ திரைப்படத்தின் மீதிக் கதை.
படம் ஆரம்பித்ததும் காட்சிகள் செல்வதும் அண்மையில் வெளிவந்த ‘நந்தன் ‘படத்தின் கதை மையம் கொண்டுள்ள களத்தை நினைவூட்டுகிறது.இதில் அமுதா என்கிற பெண்ணைப் போராளியாக்கி கதையை வேறு திசையில் பயணம் செய்ய வைத்துள்ளார்கள். ‘நான் ஏன் தேர்தலில் நிற்கக்கூடாது ?’ என்பது தான் வேட்பாளர் அமுதாவின் கேள்வியாக இருக்கிறது அதற்குரிய பதில் கிடைத்ததா என்பதுதான் கதையின் திரைக்கதை செல்லும் பாதை.
படத்தின் ‘நாளை நமதே’ முழக்கத்தை உரக்கச் சொல்லும் உறுதியான அமுதா பாத்திரத்தில் மதுமிதா நடித்துள்ளார்.ஆரம்பத்தில் கூட்டத்தில் ஒரு முகமாக கதைக்குள் நுழைந்து ,பிறகு மெல்ல மெல்ல விரிந்து கதையை ஆக்கிரமித்துக் கொள்கிறார்.மதுமிதா இயல்பான நடிப்பால் கவர்கிறார். அதிகார வேட்கையை கண்களிலேயே காட்டி உள்ளார்.ஒப்பனை இல்லாத அந்த முகம் விருது நடிகைக்குரிய இலக்கணத்துடன் உள்ளது.
படத்தில் பிற துணைப் பாத்திரங்களில் நடித்துள்ள அனைவருமே பாத்திரங்களாகவே வருகிறார்கள்.மேலும் மண்ணின் மைந்தர்கள் பலரும் படத்தில் பாத்திரங்களாக கதையின் சாட்சியங்களாகி விடுகிறார்கள்.படத்தில் ஒரு கதாபாத்திரத்தை உயர்த்திப் பிடிப்பதற்காக வலுப்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கி உள்ள பாத்திரங்கள்,சார்ந்த காட்சிகள் செயற்கையாக நாடகத்தனமாக உள்ளன. உதாரணம் அந்த பைத்தியக்காரப் பெண், அமுதாவை கொலை செய்ய வரும் ஊர் பெரிய மனிதர் மனைவி போன்றவை.
எழுதி இயக்கியுள்ளார் வெண்பா கதிரேசன். “உனக்கான அரசியலை நீ பேசாவிட்டால், நீ வெறுக்கும் அரசியலால் நீ ஆளப்படுவாய்” எனற் லெனினின் பொன் மொழியோடு தொடங்குகிற படத்தை அதற்கான திசையில் பயணப்பட வைத்துள்ளார்.’அடி வாங்கு பின்வாங்காதே’,’நம் நாட்டில் அதிகாரத்தை நிர்ணயிப்பது பணம், மதம், ஜாதி மூன்று மட்டுமே ‘போன்ற கூர்மையான வசனங்கள் உள்ளன.படத்தின் முதல் பாதி
எடை குறைந்த காட்சிகள் கொண்டதாகவே உள்ளது. ஆனால் இரண்டாம் பாதியில் காட்சிகள் வழியே படத்தின் அடர்த்தியைக் கூட்டியுள்ளார் இயக்குநர்.
எளியவர்கள் அதிகாரத்திற்கு வரும் போது அவர்கள் எதிர் கொள்ளும் தடைகளைக் காட்சிகளாக இப்படத்தில் உருவாக்கி உள்ளார். படத்தின் எளிமையான கதைக்கு ஏற்ற ஒளிப்பதிவும் இசையும் இயக்குநருடன் கைகோர்த்துள்ளன.
சில காட்சிகள் பார்த்த சாயல்கொண்டவையாக இருந்தாலும் இயக்குநர் தான் பேச வேண்டிய கருத்தைப் படத்தில் பேசி உள்ளார்.
மொத்தத்தில் ‘நாளை நமதே ‘எளியவர்களின் அதிகாரம் நோக்கிய பயணம்.


