‘நிர்வாகம் பொறுப்பல்ல’ திரைப்பட விமர்சனம்

கார்த்தீஸ்வரன், ஸ்ரீநிதி, ஆதவன் ,லிவிங்ஸ்டன், பிளாக் பாண்டி, மிருதுளா சுரேஷ், அகல்யா வெங்கடேசன் நடித்துள்ளனர்.கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி உள்ளார் எஸ் கார்த்தீஸ்வரன்.இசை : ஸ்ரீகாந்த் தேவா, ஒளிப்பதிவு: என்.எஸ். ராஜேஷ், படத் தொகுப்பு :சஜின் சி ,பாடல்கள்: கருணாகரன், கலை இயக்கம் .மாரியப்பன், ஸ்டண்ட் .ஜாக்கி ஜான்சன், தயாரிப்பு :டி ராதாகிருஷ்ணன் .

நாயகன் கார்த்தீஸ்வரன் ஒரு மோசடிப் பேர்வழி. அவர் யாரையும் ஏமாற்ற மாட்டார். ஆனால் ஏமாறும் மனநிலை கொண்டவர்களுக்கு ஏமாற வாய்ப்பு அளிக்கிறார். இப்படிச் ‘சதுரங்க வேட்டை’ பாணியில் பலவிதமான மோசடிகளில் ஈடுபட்டு 5 ஆயிரம் கோடி சம்பாதிக்கிறார்.சம்பாதித்த பணத்தை எடுத்துக்கொண்டு நாட்டை விட்டுத் தப்பித்து பறந்து ஓடி விட நினைக்கும் அவர், காவல் ஆய்வாளர் ஸ்ரீநிதியிடம் சிக்கிக் கொள்கிறார். அவர் போலீஸ் பிடியில் இருந்து தப்பித்தாரா? அவர் செய்த வித விதமான மோசடிகள் என்ன என்பதுதான் 129 நிமிடங்கள் கொண்ட ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ படத்தின் மீதிக் கதை.

சிறையில் 11 மணிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும் கைதி என்பதிலிருந்து படம் தொடங்குகிறது. அந்தத் தூக்குத் தண்டனை கைதி தான் நாயகன் கார்த்தீஸ்வரன்.அவருக்கு ஏன் தூக்குத் தண்டனை என்ற கேள்விக்குப் பதிலாக முன் கதை தொடங்குகிறது.சுவாரஸ்யமான மோசடிக் காட்சிகள் ஒவ்வொன்றாக விரிகின்றன.

படத்தில் நாயகன் கே பாத்திரத்தில் நடித்து இயக்கி இருக்கிறார் எஸ் கார்த்தீஸ்வரன்.மோசடி நாயகனுக்கு ஏற்ற எளிமையான நல்லவரா கெட்டவரா என்று தீர்மானிக்க முடியாத முகத்தோற்றம், சாதுவான உடல்மொழி என்று வருகிற அவர் செய்யும் மோசடிகள் அனைத்தும் மிரள வைக்கின்றன.வெவ்வேறு தோற்றங்களிலும் வருகிறார். ஒரு நடிகராக நடிப்பு ஆடல் பாடல் நகைச்சுவை என்று கலந்து கட்டி செய்திருக்கிறார்.

காவல் ஆய்வாளராக வரும் ஸ்ரீநிதி கம்பீரமும் அழகும் இணைந்த தோற்றத்தில் வருகிறார். கார்த்தீஸ்வரனின் மோசடிக் கும்பலில் வரும் ஆதவன் நகைச்சுவை செய்கிறார்.பணத்தைக் கொடுத்து ஏமாறும் பாத்திரங்களில் பிளாக் பாண்டியும் லிவிங்ஸ்டனும் வருகிறார்கள். மிருதுளா சுரேஷ், அகல்யா வெங்கடேசன் என இருவரும் கொடுத்த வேலையைக் குறையின்றிச் செய்திருக்கிறார்கள்.

என் எஸ் ராஜேஷின் ஒளிப்பதிவில் காட்சிகள் வண்ணமயமாகவும் வணிக ரீதியாகவும் உள்ளன.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் துள்ளல் ரகமாக அமைந்து ஆட்டம் போட வைக்கிறது என்றால் பின்னணி இசை மிகை ஒலியுடன் ஒலிக்கிறது.படத்தொகுப்பாளர் சஜின் படத்தின் விறுவிறுப்புக்கு உதவி இருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் கார்த்தீஸ்வரன் குறைந்த விலையில் ஸ்மார்ட் போன் தொடங்கி இன்றைய ஆன்லைன் மோசடிகளின் அனைத்து முகங்களையும் காட்சிகள் ஆக்கி அதிர்ச்சி ஊட்டுகிறார். அன்றாடம் ஆன்லைன் மோசடிகள் பற்றி நாம் அறிந்து கொண்டிருந்தாலும் அவற்றை அலட்சியமாகக் கடந்து போகிறோம். ஆனால் நமக்கு வரும்போதுதான் அதன் வலி தெரிகிறது.
நிபந்தனைகள் பற்றிப் படிக்காமலேயே கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடும் ஆபத்தையும் கூறி எச்சரிக்கிறார்கள்ஆன்லைன் மோசடிகளைப் பற்றி அம்பலப்படுத்தும் ஒரு படமாக இது உருவாகி இருக்கிறது.கலகலப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாமல் சின்ன பட்ஜெட்டில் நல்லதொரு விழிப்புணர்வுப் படமாக உருவாக்கி இருக்கிறார்கள்.

சில முதிர்ச்சியற்ற காட்சிகளைப் புறம் தள்ளிவிட்டுக் கூட படத்தின் நோக்கத்திற்காக இந்தப் படத்தை ரசிக்கலாம்.