‘நிறங்கள் மூன்று ‘திரைப்பட விமர்சனம்

சரத்குமார் , அதர்வா முரளி,ரகுமான், துஷ்யந்த் , அம்மு அபிராமி ,சின்னி ஜெயந்த், ஜான் விஜய் நடித்துள்ளனர். கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்துள்ளார் . ஜாக்ஸ் பிஜோய் இசை அமைத்துள்ளார். ஐங்கரன் இன்டர்நேஷனல் சார்பில் கருணாமூர்த்தி இந்தப் படத்தை தயாரித்து இருக்கிறார்.

வாழ்வின் நெருக்கடிகளின் போது தான் மனிதனின் அசல் மனம் வெளியே தெரியும் என்பார்கள். அப்படி ஒரு பெண் காணாமல் போகிறாள் அதன் விளைவாக வெளிப்படும் மூன்று மனிதர்களின் அசல் நிறத்தை வெளிக்காட்டும் படம் தான் ‘நிறங்கள் மூன்று’.பிரதானமாக மூன்று மனிதர்களை, அவர்களின் குணச்சித்திரங்களை, அவர்களது அகத்தை
வெளிப்படுத்தும் வகையில் ஒரு கதை உருவாக்கி அதைப் பரபரப்பான திரில்லராகக் கொடுக்க முயன்றுள்ளார் கார்த்திக் நரேன் .

நாயகன் அதர்வாவுக்கு திரைப்பட இயக்குநராக வேண்டும் என்பது கனவு லட்சியம். இதற்காக வாய்ப்பு தேடி பல படிகள் ஏறி இறங்குகிறார்.பள்ளி ஆசிரியரான ரகுமான் தன் மகள் அம்மா அபிராமியைக் காணவில்லை என்று போலீஸ் ஆய்வாளர் சரத்குமாரிடம் புகார் செய்கிறார்.போலீஸ் அதிகாரியான சரத்குமாருக்கு இந்த வழக்கில் சட்டப்படி முடிவெடுப்பதா? நியாயப்படி முடிவு எடுப்பதா? மனசாட்சிப் படி முடிவெடுப்பதா? என்று ஒரு கேள்வி.
அம்மு அபிராமியைத் துஷ்யந்த் காதலிக்கிறார். அவரும் காணாமல் போன தனது காதலியைத் தேடி அலைகிறார் .இந்த சரத்குமார் , அதர்வா முரளி,ரகுமான் மூன்று கதாபாத்திரங்களின் பயணங்களும் வெவ்வேறு பாதையில் சென்று ஒரு புள்ளியில் இணைவது தான் நிறங்கள் மூன்று படத்தின் கதை.

படம் ஒரு மர்மம் நிறைந்த திகில் கதையாக இருந்தாலும் பாத்திரங்களின் சித்தரிப்பு இயல்பான வாழ்க்கையின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது ,அதே கதைக்கு ஒரு புதிய நிறத்தைத் தருகிறது.அந்த வேடங்களில் நடித்திருக்கும் நடிகர்களும் தங்கள் முந்தைய படங்களில் மூலம் கிடைத்துள்ள மனப்பதிவைக் கவனத்தில் கொள்ளாமல் அந்தந்த பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் போலீஸ் அதிகாரியாக வரும் சரத்குமார், பள்ளி ஆசிரியராக வரும் ரகுமான் பாத்திரங்களின் நகர்வுகள் எதிர்பாராத அதிர்வைத் தருபவை.

அடுத்தடுத்த காட்சிகள் எப்படி நகரும் என்பதை யூகிக்க முடியாத அளவிற்கு திரைக்கதை வேகமாகச் செல்கிறது.படத்து நாயகன் அதர்வா இயக்குநர் கனவோடு இருக்கும் ஒரு இளைஞனாக அந்த வீரியத்தை நடிப்பில் காட்டியுள்ளார் .அதற்காக எப்போதும் புகை போதை என்றுதான் இருக்க வேண்டுமா?
இரண்டாவது நாயகன் துஷ்யந்த் அம்மா அபிராமி இருவரும் தங்களுக்கு இட்ட வேலையைச் சரியாக செய்துள்ளார்கள்.

கார்த்திக் நரேன் தொழில் நுட்ப ரீதியில் தெளிவாக இருக்கிறார் என்பதற்குப் பல காட்சிகள் சாட்சிகளாக உள்ளன. அவர் திரைப்படத்துக்கான ஓர் எழுத்தாளராக மேலும் மேம்பட வேண்டும் . ‘துருவங்கள் பதினாறு’ படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் அப்படத்தில் உச்சகட்ட காட்சிக்காகப் பேசப்பட்டார் அதேபோல் இதிலும் ஒரு மாறுபட்ட உச்சகட்ட காட்சியைக் கொடுத்துள்ளார்.

நெருக்கடியான சவாலான மனசாட்சிக்கு சோதனையான காலகட்டங்களில் எப்படி மனித மனம் இயங்குகிறது என்பதை ஒரு கிரைம் திரில்லர் மூலம் கூறியுள்ளார் இயக்குநர் கார்த்திக் நரேன்.

தனது வித்தியாசமான கோணங்களின் மூலம் கவனம் ஈக்கிறார் ஒளிப்பதிவாளர் டிஜோ டாமி.ஒரு திரில்லர் படத்துக்கான கச்சிதமான பின்னணி இசையை வழங்கியுள்ளார் இசையமைப்பாளர் ஜாக்ஸ் பிஜோய் .பாடல்களில்’ மேகம் போல் ஆகி’ மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் இளமைத் துள்ளல் இசை.

மொத்தத்தில் கிரைம் த்ரில்லர் ரசிகர்களுக்கு வித்தியாசமான விருந்து தான் இந்த’ நிறங்கள் மூன்று’