‘நிறம் மாறும் உலகில்’ திரைப்பட விமர்சனம்

பாரதிராஜா, நட்டி, ரியோ ராஜ், சாண்டி, யோகி பாபு, வடிவுக்கரசி, துளசி, ஆதிரா, கனிகா, லவ்லின் சந்திரசேகர், ரிஷிகாந்த், ஏகன், விக்னேஷ் காந்த், காவியா அறிவுமணி, ஆய்ரா கிருஷ்ணன், முல்லை அரசு, மைம் கோபி, விஜி சந்திரசேகர், ஆடுகளம் நரேன், சுரேஷ் மேனன், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர் .

பிரிட்டோ ஜே பி இயக்கியுள்ளார்.மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளனர்.தேவ் பிரகாஷ் ரேகன் இசையமைத்துள்ளார். தமிழரசன் படத்தொகுப்பு செய்துள்ளார். சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் – ஜிஎஸ் சினிமா இன்டர்நேஷனல் சார்பில் எல் கேத்தரின் ஷோபா மற்றும் லெனின் தயாரித்துள்ளனர். பெர்பெக்ட் பிக்சர்ஸ் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது.

அம்மாவின் மகத்துவம் பேசும் கதைகளின் தொகுப்பு இந்த படம். இப்படி ஒரே வரியில் இந்த படத்தை தட்டையாகக் கூறிவிட முடியாது என்றாலும் இது ஒரு மாறுபட்ட திரை அனுபவம்.

இந்த உலகத்தில் மனிதர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள். ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நெருக்கடிக்குள்ளாகிறான்..
அவன் எதிர்பாராத மோசமான ஒரு குரூரம் அவன் கண் முன் கண்ணாமூச்சி காட்டி விட்டுச் செல்கிறது. அப்போதுதான் அன்பு விசுவாசம் துரோகம் போன்றவற்றின் முகங்கள் மனிதனுக்குத் தெரிகின்றன.அப்படிச் சிலரின் வாழ்க்கையில் நடந்த இருட்டான குரூரமான பக்கங்களைப் புரட்டிக் காட்டுவது தான் இந்தப் படம்.

ஒரு பிளாஷ்பேக் முறையில் கதை செல்கிறது.

யோகி பாபு ஒரு பெண்ணிடம் தனது அனுபவங்களின் கதையைச் சொல்வதாகப் படம் தொடங்குகிறது. லவ்லின் சந்திரசேகர் தன் அம்மாவிடம் சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார் அவர் ரயிலில் டிக்கெட் பரிசோதகர் யோகி பாபுவைச் சந்திக்கிறார். அவரிடம் பேசும்போது யோகி பாபு பல கதைகளைப் பகிர்ந்து கொள்கிறார்.அப்போது
யோகி பாபு, அம்மா என்பவள் எப்படிப்பட்டவள் அவளது முக்கியத்துவம் என்ன என்பதைப் புரிய வைப்பதற்காக நான்கு கதைகளைச் சொல்கிறார்.அந்த நான்கு கதையின் மையச்சரடாக அம்மா என்கிற பாத்திரம் வருகிறது.

அம்மா பாசத்திற்காக ஏங்கும் தாதா, பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்து ஆளாக்கினாலும் கடைசி காலத்தில் பசியோடு இறக்கும் அம்மா, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அம்மாவைக் காப்பாற்ற முடியாமல் போகும் மகனின் சோகம், அம்மா என்ற உறவுக்காக எதை வேண்டுமானாலும் தூக்கி வீசத் தயாராக இருக்கும்,ஏன் தனது கனவுக் காதலியைக் கூட புறந்தள்ளிப் புறக்கணித்துவிட்டு செல்கிற ஆதரவற்ற இளைஞன், என்று நான்கு விதமான கதைகளும், அதில் பயணித்த கதாபாத்திரங்களின் அம்மா மீதான பாசப் போராட்டம் தான் ‘நிறம் மாறும் உலகில்’.

நான்கு கதைகளின் முதன்மைத் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நட்டி, ரியோ ராஜ், பாரதிராஜா – வடிவுக்கரசி, சாண்டி என அனைவரும் கொடுத்த வேலையைக் குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.இவர்களது ஒவ்வொரு கதையும் தனித்தனி சிறுகதை அனுபவத்தையும் பரவச அனுபவத்தையும் கொடுக்கிறது. இவர்களுடன் இணைந்து நடித்திருக்கும் துளசி, யோகி பாபு, ஆதிரை, கனிகா, லவ்லின் சந்திரசேகர், ரிஷிகாந்த், ஏகன், விக்னேஷ்காந்த், காவியா அறிவுமணி, அய்ரா கிருஷ்ணன், முல்லை அரசி, மைக் கோபி, விஜி சந்திரசேகர், ஆடுகளம் நரேன், சுரேஷ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி என அனைவரும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.அச்சு அசலாகப் அந்தந்தப் பாத்திரத்தில் பொருந்தியுள்ளார்கள்.

பாத்திரங்களின் தன்மைக்கேற்ற ஒளிப்பதிவாளர்கள் மல்லிகா அர்ஜுனன் மற்றும் மணிகண்ட ராஜு ஆகியோரது ஒளிப்பதிவு நேர்த்தி.இசையமைப்பாளர் தேவ் பிரகாஷ் ரீகனின் இசையில் பாடல்கள் துள்ளல் ரகம். பின்னணி இசையும் பிரமாதம்.படத்தொகுப்பாளர் தமிழ் அரசன் இயக்குநர் காட்சிப்படுத்திய நான்கு கதைகளையும் ஒவ்வொன்றாக அடுக்கிக் கோர்த்துக் கொடுத்துள்ளார்.

எழுதி இயக்கியிருக்கும் பிரிட்டோ ஜே.பி, நான்கு கதைகளையும் அம்மா பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் கூறியுள்ளார் அவர்களின் அதீத உணர்ச்சிகள் சிலருக்கு சலிப்பூட்டலாம்.ஒவ்வொரு கதைக்கும் ஒரு முன் கதை உள்ளது ஏராளமான துக்ககர சம்பவங்கள் துன்பியல் கதையாக மாற்றியுள்ளது.மொத்தத்தில், ‘நிறம் மாறும் உலகில்’ அம்மாவின் மகிமையைச் சொல்லும், உண்மைகளை ஓங்கி அறையும் சோகமான காவியச் சுவை உள்ள படம்.