பவிஷ் நாராயண், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா பி வாரியர், வெங்கடேஷ் மேனன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த்தா ஷங்கர், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் ,ஆடுகளம் நரேன், உதய் மகேஷ், ஸ்ரீதேவி நடித்துள்ளனர். எழுதி இயக்கியுள்ளார் தனுஷ்.
இசை ஜிவி பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு லியான் பிரிட்டோ, படத்தொகுப்பு பிரசன்னா ஜி. கே, கலை இயக்கம் ஜாக்கி, நடனம் பாபா பாஸ்கர் .
தயாரிப்பு வுண்டர் பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்.
காலமாற்றம் இளைய தலைமுறைகளிடம் மனமாற்றம் செய்துள்ளது.காதலை அவர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் அணுகுகிறார்கள் என்பதைப் பற்றிய காலத்தில் கண்ணாடி போல் இந்தப் படத்தை உருவாக்க முயன்றுள்ளனர்.காதலுக்கும், காதல் தோல்விக்கும் உள்ள இடைவெளியை, வேறுபாட்டைப் பற்றிக் கதை பேசுகிறது.
படம் தொடங்கியதுமே காதல் தோல்விப் பாடல் வருகிறது. சமையலை ஒரு தொழிலாக நினைக்காமல் கலையாக விருப்பத்துடன் செய்பவர் கதாநாயகன் பிரபு. செஃப் தொழிலை ஆர்வத்துடன் படித்து வரும் கதாநாயகன் பிரபு, தனது வருங்கால மனைவியிடம் பேசிக் கொண்டிருக்கும்போது,தனது முன் கதையைக் கூறுகிறார். அதில் தன் முதல் காதல் தோல்வி குறித்தும், காதலி குறித்தும் சொல்லத் தொடங்குகிறார்.
கதாநாயகன் பிரபு. அவர் கதாநாயகி நிலாவைச் (அனிகா) சந்திக்கிறார். சாப்பாட்டு பிரியரான நிலாவை பிரபு சமையலில் அசத்துகிறார்.
இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. ஒரு கட்டத்தில் இருவரும் தங்கள் வீட்டில் சொல்கிறார்கள்.பிரபு வீட்டில் பிரச்சினை இல்லை.சம்மதம் கிடைக்கிறது.
நிலாவின் வீட்டில் அவரது தந்தை சரத்குமார், பிரபுவை ஏற்கவில்லை.வசதி வாய்ப்பு பொருளாதார ஏற்றத்தாழ்வு குறுக்கே நிற்கிறது. ஆனால், நிலா தனது பிரபுவுடனான காதலில் உறுதியாக இருக்கிறார்.பிரபுவை ஆழம் பார்க்க பழகிப் பார்க்க வேண்டும் என சரத்குமார் நினைக்கிறார்.மகளுக்காகப் பழகிய போதும் சரத்குமார் பிரபுவுடன் ஒட்டவில்லை.சரத்குமார் ஏளனம் செய்ய பிரபுவும் பதிலடி கொடுக்கிறார்.ஒரு கட்டத்தில் சரத்குமாருக்கு உள்ள உடல்ரீதியான பிரச்சினை தெரிந்து அவரது குறுகிய ஆயுள் காலம் அறிந்து பிரபு காதலியிடம் இருந்து விலகிக் கொள்கிறார்.பிரபு – நிலாவின் காதல் உடைகிறது.அடுத்த சில மாதங்களில் நிலாவிற்கு வேறொரு நபருடன் திருமணம் நடக்கவிருக்கிறது.இந்த திருமணத்திற்கு நிலா அழைப்பிதழ் அனுப்பியதால் பிரபு செல்கிறார்.அதன்பின் என்ன நடந்தது, நிலாவும் பிரபுவும் இணைந்தார்களா இல்லையா..? என்பதே படத்தின் மீதிக் கதை.
இயக்குநர் தனுஷ் மீண்டும் யதார்த்தமான திரைப்படத்தை வழங்கியுள்ளார்.ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிக்கும் படியாகவும், சமகாலத்தை பிரதிபலிக்கும் வகையிலும் இக்கால இளைஞர்களையும் கவரும் விதத்திலும் அமைத்துள்ளார் இயக்குநர் தனுஷ்.
நடிகர் தனுஷின் அக்கா மகனான பவிஷ் சராசரிக்கு மீறிய உயரம் அந்த தோற்றம் அவருக்கு நல்ல லுக் தருகிறது.வெறும் தோற்றத்தை மட்டும் காட்டாமல் நடிப்பிலும் அவர் பளிச்சிடுகிறார்.நாயகி அனிகா சற்று பூசின மாதிரியான உடல் தோற்றம் கொண்டிருந்தாலும் சின்ன சின்ன முக பாவங்கள் மூலம் நன்றாகவே தனது நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
பவிஷ் நாயகன் நாயகி தாண்டி அனைவரையும் கவர்ந்த ஒரு கதாபாத்திரம் என்றால், அது மேத்யூ தாமஸ் நடித்த கதாபாத்திரம்தான். கதாநாயகனின் உயிர் நண்பனாக நடித்து படம் பார்ப்பவர்களை அவர்களது நெருங்கிய நண்பர்களை நினைவூட்டுகிறார்.நகைச்சுவைக் காட்சிகளில் ஆர்ப்பாட்டம் இல்லாமலேயே கவர்கிறார்.
சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேனின் அனுபவ நடிப்பு படத்திற்கு பலம். அவர்கள் திரையில் வந்தாலே அந்தப் பாத்திரங்கள் நிறைவு பெற்று விடுகின்றன. பிரியா வாரியர் , ரப்பியா கத்தூண், வெங்கடேஷ் மேனன், ரம்யா ரங்கநாதன் ஆகியோர் தங்களால் முடிந்த அளவுக்கு நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளனர்.
வழக்கமான காதல் கதை என கூறி இப்படத்தை தனுஷ் அடையாளப்படுத்தி இருந்தார். ஆனாலும் கூட, சற்று வித்தியாசமான காதல் கதையாகவே சொல்லப்பட்டுள்ளது.
மற்றபடி படத்தில் குறை என்று சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசையும் பாடல்களும் திரையரங்கை அதிர வைக்கும்.குறிப்பாக உணர்ச்சிகரமான காட்சிகளில் அதற்கு ஆழம் சேர்க்கிறது ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை.இசையமைப்பாளர் பாடல் காட்சியில் தோன்றியும் நடித்துள்ளார்.
லியான் பிரிட்டோவின் ஒளிப்பதிவு படத்திற்குப் பலம்.அழகுணர்ச்சியோடு காட்சிகளை எடுத்துள்ளார். பாடல்கள் காட்சிகளில் ரசனையான ஒளிப்பதிவுடன் கலை இயக்கமும் அழகு.
இளமை கொடிகட்டிப் பறக்கும் இந்தக் கதையில் இயக்குனர் தனுஷ் வெற்றி பெற்றுவிட்டார் என்றே கூறவேண்டும்.
மொத்தத்தில் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ இளைஞர்களைக் கவரும்.