தேவயானி, விஜித், கண்மணி, ஜி.வி. அவனா அஸ்னி, ராஜ்கபூர், இளவரசு, வடிவுக்கரசி, நீலிமா ராணி, தர்ஷன் சிவா, அக்ஷரா, கவிதாரவி, மனோஜ் குமார், பிரவீன், ஆண்டர்சன் நடித்துள்ளனர். சிவா ஆறுமுகம் இயக்கியுள்ளார்.
ஒளிப்பதிவு ஆர்.பி. குருதேவ், இசை நரேன் பாலகுமார், எடிட்டிங் ரோலக்ஸ் ,தயாரிப்பு தர்ஷன் பிலிம்ஸ்.
நிரஞ்சன் , லான்ஸி திருமணமான இளம் ஜோடிகள் இருவரும் மென்பொருள் துறையில் வேலை பார்க்கிறார்கள். பேச்சு வரும் பருவத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. குழந்தையின் பெயர் நிலா.இருவரும் பணத்தைத் துரத்திக் கொண்டு செல்வதால் குழந்தையைப் பார்த்துக் கொள்ள முடியாமல் வேலைக்காரியை அமர்த்துகிறார்கள்.அவளோ சரியாக கவனிப்பதில்லை. அந்த நேரத்தில் குழந்தையைப் பார்த்துக் கொள்ள ஜோதி வருகிறாள்.அவள் ஒரு இலங்கைப் பெண். இலங்கை யுத்தத்தில் குடும்பத்தை இழந்தவள்.அவள் குழந்தை மீது அன்பைப் பொழிகிறாள். அதனால் குழந்தை அவளுடன் ஒட்டிக் கொள்கிறது.வீட்டில் அன்பு கிடைக்காததால் தற்காலிகமாக நிழலுக்கு ஒதுங்கும் நிழற்குடையாக வந்த ஜோதியையே வீடு என்று குழந்தை நினைக்கிறது. நிலாவின் தாயும் தந்தையும் ஒரு கட்டத்தில் அமெரிக்கா செல்லத் திட்டமிடுகின்றனர்.ஒரு நாள் குழந்தை காணாமல் போய்விடுகிறாள். காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார்கள்.பலர் மீது சந்தேகம் வருகிறது. ஏன் ஜோதி மீது கூட சந்தேகம் வருகிறது. தன் மீது சந்தேகப்பட்டதால் ஜோதி பெரிதும் மனம் உடைகிறாள்.குழந்தைக்கு என்ன ஆயிற்று என்று ஒரு மர்மம் நீடிக்கிறது. ஒரு வழியாகக் கண்டுபிடிக்கப்படுகிறது.அதன் பிறகு வெளிநாட்டுக்குப் பயணப்படுகிறார்கள்.
விமான நிலையம் செல்லும் அந்தக் கடைசி நேரத்தில் ஜோதியைப் பிரிய மனம் இல்லாமல் குழந்தை தவிக்கிறாள். அதன் பிறகும் விமான நிலையத்திற்கும் குழந்தையை வலுக்கட்டாயமாக ஜோதியிடம் இருந்து பிரித்து எடுத்துச் செல்கிறார்கள். ஜோதி தன்னுடன் வரவேண்டும் என்று குழந்தை நினைக்கிறாள்.
ஆனால் எதிர்பாராத விதமாக குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. ஜோதிமா ஜோதிமா என்ற குழந்தை நிலா புலம்பி மூர்ச்சை ஆகிறாள்.
முடிவு என்ன என்பதுதான் நிழற்குடை படத்தின் கதை.
இப்படத்தில் ஜோதி என்கிற பாத்திரத்தில் தேவயானி நடித்துள்ளார். படத்தை இந்த ஜோதி பாத்திரம் தான் தூக்கி நிறுத்துகிறது.இயல்பான நடிப்பு அழகான தோற்றம் என்று அவரது திரை தோற்றம் படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.
விஜித் நிரஞ்சனாக நடித்துள்ளார் .கண்மணி லான்சியாக நடித்துள்ளார். இருவரும் அளவான நடிப்பு குறை சொல்ல ஒன்றும் இல்லை குழந்தை நட்சத்திரமாக வெவ்வேறு பருவத்தில் 2 குழந்தைகளை நடிக்க வைத்துள்ளனர்.மூன்று வயதில்
அஹானா அஸ்னி,ஐந்து வயதில் நிக்காரிகாவும் வருகின்றனர் குறிப்பாக ஐந்து வயது சிறுமி நடிப்பில் பளீர் முத்திரை பதித்துள்ளாள் .வில்லன் போலத் தோன்றச் செய்யும் தர்ஷன் சிவாவின் கதாபாத்திரமும், சார்ந்த காட்சிகளும் சுவாரஸ்யம்.
இளவரசு, வடிவக்கரசு, நீலிமா ராணி, அக்ஷரா, கவிதாரவி, மனோஜ் குமார், பிரவீன் ஆகியோரும் துணைப் பாத்திரங்களில் வருகிறார்கள்.அவரவர் ஏற்ற பங்கை அவரவர் அளித்துச் செய்துள்ளனர்.ஒளிப்பதிவாளர் ஆர். பி .குருதேவ் ஒளிப்பதிவில் பட்ஜெட்டைக் காட்டிக் கொடுக்காத வகையில் காட்சிகளை நிறைவு செய்துள்ளார்.
நரேன் பாலகுமாரின் இசை பரவாயில்லை ரகம். முதல் பாதி திரைப்படம் சற்றே மிதமான வேகத்தில் சென்றாலும் பிற்பாதியில் கதை, காட்சிகள், சம்பவங்கள் என்று அடர்த்தி கூட்டியுள்ளார் இயக்குநர்.
சமகால சமுதாயத்தின் அவல நிலையை காட்சிகளாகவும் வசனங்களாகவும் உயிரோட்டமாக அமைத்துள்ளார் இயக்குநர்.
யாரிடமும் அன்பு காட்டாமல் பணத்தைத் துரத்துவதால் குழந்தைகள் பெற்றோரைப் புறக்கணிக்கின்றன. அதே குழந்தைகள் வளர்ந்து பெற்றோரை முதியோர் விடுதியில் சேர்க்கின்றன.
சக மனிதரை நேசியுங்கள். மனிதர்களால் ஆனது தான் வாழ்வு .மனிதர்களை விட பணம் பெரிதல்ல என்று சொல்லாமல் சொல்கிறது இந்தத் திரைப்படம்.
இப் படம் பார்க்கும் அனைவரையும் சிந்திக்க வைக்கக் கூடியது.மொத்தத்தில் இந்த ‘நிழற்குடை’ வெயிலில் இருந்து காக்கக்கூடிய குளிர் நிழல் தருகிறது.