”பார்வை ஒன்றே போதுமே”முரளி கிருஷ்ணா இயக்கி, இசையமைக்க, ஹை டெக் பிக்சர்ஸ் சார்பில் ரஃபி தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள ‘ நேர்முகம் ‘படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது.
பாடல்கள் குறுந்தகட்டைநடிகை நமீதா வெளியிட நடிகர் பாண்டியராஜன் பெற்றுக்கொண்டார்.
தயாரிப்பாளர் ஜின்னா, சுரேஷ் காமாட்சி, நடிகைகள் நமீதா, மீரா நந்தன், நடிகர்கள் பிரஜின், கூல் சுரேஷ் உள்பட பல சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.
இயக்குநர் முரளி கிருஷ்ணா வரவேற்றார்.
விழாவில் நடிகர் பாண்டியராஜன் பேசும்போது,” என்னோட முதல்படம் ஆண்பாவம். விநியோகஸ்தர்களுக்கு படத்தைப் போட்டுக் காட்டினோம். ஒருத்தர் நேரா வந்தார். எல்லாம் நல்லாத்தான்யா இருக்கு. ஆனா நீ ஏன்யா நடிச்சன்னார்?? எனக்கு பகீர்னு ஆயிருச்சு.
வேற வழியில்லாம தயாரிப்பாளர் தன்னோடசொத்து கித்தெல்லாம் வித்து படத்தை ரீலீஸ் பண்ணினார். பல்லாவரத்துல படம் ஓடுற தியேட்டருக்குப் போயிருந்தேன்.
படமே ரொம்ப டல்லா தெரிஞ்சது. மொத்தமே 20பேர் தான் படம் பார்த்துட்டு இருந்தாங்க. வீட்டுக்கு வந்து எங்கம்மா மடியில படுத்துட்டு என் படத்தை நான் நடிச்சுக் கெடுத்திட்டேன்மான்னு அழுதேன். தயாரிப்பாளர் மனசுக்குள்ள அழுதார்.
அன்னைக்கு நைட் ஷோ, அபிராமி தியேட்டர்ல இருந்து என் அஸிஸ்டெண்ட் போன் பண்ணான். அண்ணே, படம் நல்ல “டாக்”அப்டின்னான். அந்த“டாக்”கைத் தான் நான் காலையில பல்லாவரத்துலயே பாத்துட்டனேன்னு சொன்னேன். அவன் மேனேஜர் கிட்ட போனைக் கொடுத்து பேசச்சொன்னான். கூட்டம் எப்டி இருக்குன்னு கேட்டேன். ஹவுஸ் ஃபுல்னு சொன்னார்.
நம்ம படத்துக்கு வந்த கூட்டம் இல்ல, படிக்காதவன் படத்துக்கு வந்த கூட்டம், டிக்கெட் கிடைக்காம நம்ம படம் பாக்கிறாங்கன்னு சொன்னார். உடனே கிளம்பி அபிராமி தியேட்டர் போனேன். படம் பாத்த கூட்டத்துல ஒருத்தர், “ஏய், நீதான நடிச்சிருக்க”ன்னு கேட்டார். ஆமான்னு தலையாட்டினேன். ஒரு கையெழுத்து போட்டுக் குடுன்னார். போட்டுக் குடுத்தேன்.
இதை ஏன் சொல்றேன்னா, ‘நேர் முகம்’ படத்துல நிறைய புதுமுகங்கள் இருக்காங்க. இந்த வாய்ப்பு முக்கியமில்லை. இதுக்கு அப்புறம் பார்க்கப் போற விசயங்கள் தான் முக்கியம். ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி சொல்வாங்க.நேரடியாவே நீ காலி அப்டின்னு பேசுவாங்க. எதையும் மனசுல ஏத்திக்காம உங்க வேலையை மட்டும் கரெக்டா செய்ங்க. கண்டிப்பா ஜெயிக்கலாம்.
சமீபத்துல சிங்கப்பூர் போயிருந்தேன். லிப்ட்ல என்னைப் பார்த்த ஒரு தமிழர் “இப்போ தான் உங்களை உயிரோட பாக்கிறேன்“னார். அவர் சொல்ல வந்த விசயம் என்னன்னா, திரையில் உங்களை பாத்திருக்கேன், இப்போத்தான் நேர்ல பாக்கிறேன் அப்டிங்கிறதுதான். ஆனா, அந்த நிமிட பரபரப்புல அவருக்கு அதை எப்டி சொல்றதுன்னு தெரியல.
அதே மாதிரி, இன்னொருத்தர்,“ஏன்ம்பா இப்போ உள்ள படங்கள்ல பார்க்க முடியலையே, ரொம்ப நாளா நீ நடிக்கலையா?”ன்னார். கடைசியா எப்போ படம் பாத்தீங்கன்னு கேட்டேன். பத்து வருசம் இருக்கும்னார். அவர் சொல்ல வந்த விசயம் என்னன்னா, நீ நடிக்கிறது எனக்கு பிடிக்கும்… நெறைய படங்கள்ல நடின்னு அப்டிங்கிறது தான். அதை அவர் ஸ்டைல்ல சொல்லிட்டார்.
ஆனா, யார் என்ன சொன்னாலும் இந்த மாதிரி, நமக்கு நாமே டப்பிங் பண்ணி பாத்துக்கவேண்டியது தான்.
நேர்முகம் படம் பெரிய அளவில் வெற்றி பெற என் வாழ்த்துகள் என்றார்.