‘நூடுல்ஸ்’ விமர்சனம்

ஹரீஷ் உத்தமன், ஷீலா ராஜ்குமார், ஆழியா, திருநாவுக்கரசு, மில்லர், வசந்த், பாரி, நகுனா, ஹரிதா, மஹினா, சுபா,பிரகாஷ்,அறிவு மதன் ஆகியோர் நடித்துள்ளனர்.இதுவரை நடிகராக முகம் காட்டிய அருவி மதன் இதன் மூலம் இயக்குநராகியுள்ளார்.ரோலிங் சவுண்ட் பிக்சர்ஸ் சார்பில் அருண் பிரகாஷ் தயாரித்திருக்கிறார்.இந்தப் படத்தின் ஒளிப்பதிவை வினோத் கவனிக்க, படத் தொகுப்பை சரத்குமார் மேற்கொள்ள ராபர்ட் சற்குணம் இசை அமைத்துள்ளார். கலை இயக்குநராக கென்னடி பணியாற்றியுள்ளார்.

இப்படத்தை ‘வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்’ சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிடுகிறார்.

ஒருவனுக்கு எதிராக விதி சதி வேலை செய்து அடித்து ஆடும் போது கடும் நெருக்கடிக்கும் மனக் கொந்தளிப்புக்கும் உள்ளாகும் மனிதன் அந்த நேரத்தில் என்ன செய்கிறான்? என்பதைச் சொல்கிற கதை இது. இப்படி பல முனைக் தாக்கத்திற்குள்ளாகும் ஒருவனின் மன உணர்வின் விரிவாக்கமே இப்படம்.

படத்தின் கதை என்ன?
ஹரீஷ் உத்தமனும் ஷீலாராஜ்குமாரும் காதல் மணம் செய்தவர்கள். அவர்களுக்கு ஒரு குழந்தை ஆழியா.அந்த அடுக்குமாடி குறிப்பில் சக குடியிருப்பு வாசிகள் தான் உறவினர்கள் போல் உள்ளார்கள். ஷீலாவின் பெற்றோர் 10 வருடங்களாக மகளைப் பார்க்காமல் உள்ளனர்.
ஒரு நாள் மொட்டை மாடியில் அனைவரும் மகிழ்ச்சியாக ஆடிப்பாடி மகிழ்ச்சியாக உள்ளனர் .இது பற்றிப்  போலீஸ் நிலையத்திற்குப் புகார் வந்து இன்ஸ்பெக்டர் அருவி மதன் அந்த இடத்திற்கு வந்து எச்சரிக்கிறார். அதனால் கோபமடைந்த ஹரிஷ் மற்றும் ஷீலா அருவி மதனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அது சண்டையாக மாறுகிறது.ஷீலாவின் பெற்றோர்கள் வருவதாக உள்ளது.ஹரிஷ் மகிழ்ச்சியுடன் வெளியே கடைக்கு சென்று திரும்பி வந்து வீடு பார்ப்பதற்கு ஒரு கொலை நிகழ்ந்து கொலைப்பழி ஷீலாவின் மீது விழுகிறது.செய்வதறியாது தவிக்கிறது குடும்பம் .அதன் பின் நடக்கிற சம்பவங்கள் படத்தில் வருகிற காட்சிகள் ஒவ்வொரு நொடியும் நம்மை இருக்கை நொடியில் இருத்தி வைப்பவை.முடிவு தெரிவதற்குள் நமக்கு பதற்றம் உச்சத்திற்குச் செல்கிறது.

இத்தனை நாள் எதிர்மறை நிழல் விழுந்த பாத்திரத்தில் நடித்து வந்த ஹரிஷ் உத்தமன் இதில் நேர்நிலை பாத்திரத்தில் வருகிறார்.அவர் ஏற்றுள்ள சரவணன் பாத்திரம் பாசம் நிறைந்த காதல் கணவராக தன் மனைவி மீது வந்த கொலைப்பழியைத் தன் மேல் போட்டுக் கொள்ளும் மாண்புமிகு மனிதராக மனதில் பதிகிறார்.இக்கட்டுகளில் மாட்டிக் கொண்டு அவர் படும் பாட்டை நல்ல நடிப்பால் வெளிப்படுத்தியுள்ளார்.

ஷோகேஸ் பொம்மை போல் வரும் கதாநாயகிகளில் இருந்து ஷீலா ராஜ்குமார் வித்தியாசமானவர்.தொடர்ந்து அடர்த்திமிகு வேடங்களில் நடித்து வருபவர் .ஹரிஷ்  மனைவி சக்தியாக வரும் அவர் இதிலும் தனது அசத்தலான நடிப்பு மூலம் படத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறார்.

அந்த அடுக்குமாடி குடியிருப்பின் குடியிருப்புவாசியாக நடித்திருக்கும் திருநாவுக்கரசு, அவரது மனைவியாக வரும் மஹினா, வழக்கறிஞராக நடித்திருக்கும் வசந்த் மாரிமுத்து, போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் ஷோபன் மில்லர் ,குழந்தை நட்சத்திரம் ஆழியா,இயக்குநர் அருவி மதன் எனப் படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்கள் நடிப்பின் மூலம் படத்திற்கு வலு சேர்த்துள்ளார்கள்.

வெளிப்புற படப்பிடிப்பிற்கு வாய்ப்பு இல்லாத ஒரு கதையாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கதை நகர்ந்தாலும் எந்த சலிப்பும் தொய்வும் இன்றி திரைக்கதை அமைத்து காட்சிகளை வழங்கியுள்ளார் இயக்குநர் அருவி மதன்.

அந்த சலிப்பு தெரியாமல் மாறுபட்ட கோணங்களில் ஒளிப்பதிவு செய்துள்ளார் டி. வினோத். ராபர்ட் சற்குணத்தின் பின்னணி இசையில் இரைச்சல் எரிச்சல் இல்லாத நேர்த்தி.படத்தொகுப்பாளர் சரத்குமாரின் பணியும், கலை இயக்குநர் ஆனந்தன் எட்வர்ட் கென்னடியின் பணியும் இயக்குநரின் கரத்தை வலுப்படுத்தி உள்ளன.

நடிகராக வந்து இயக்குநராக மாறியுள்ள அருவி மதன் முதல் படத்திலேயே படம் பார்ப்பவர்கள் வியக்கும் விதத்தில் எளிமையான கதையை, மிக சுவாரஸ்யமான படமாகக் கொடுத்திருக்கிறார்.நிச்சயமாகக் கதை கூறும் முறையில் கவனிக்கத்தக்க படமாக ‘நூடுல்ஸ்’ உருவாகியுள்ளது. இதனை ரசிகர்களுக்குப் புதிய திரை அனுபவம் தரும் படைப்பாகக் கொள்ளலாம்.