கடந்த 2017ல் மெரினாவில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியாக ஒன்றுகூடி வரலாற்று சிறப்புமிக்க போராட்டம் நடத்தி ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தனர். இந்த மாபெரும் போராட்டம் ‘மெரினா புரட்சி’ என்ற பெயரில் படமாக தயாராகியுள்ளது. நாச்சியாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை எம்.எஸ்.ராஜ் இயக்கியுளார். யூடியூப் ‘புட் சட்னி’ புகழ் ராஜ்மோகன், மெரினா புரட்சியில் பங்கெடுத்த நவீன், சுருதி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்திற்கு, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, தீபக் படத்தொகுப்பு செய்துள்ளார். அல்ருஃபியான் இசையமைத்துள்ளார். இந்தப்படம் தணிக்கை அதிகாரிகளால் சான்றிதழ் வழங்க மறுக்கப்பட்டு, ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பப்பட்டு, பின் நீதிமன்ற கதவுகளை தட்டி ஒரு வழியாக சென்சார் (U) சான்றிதழ் பெற்றுள்ளது.. இந்தநிலையில் இந்த மெரினா புரட்சியில் கலந்துகொண்ட இளைஞர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நிகழ்வு நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நடிகர் பொன்வண்ணன், இயக்குந ர் வசந்தபாலன், கவிஞர் மனுஷ்ய புத்திரன், எழுத்தாளர் லட்சுமி சரவணகுமார், பத்திரிக்கை விமர்சகர்கள் கேபிள் சங்கர், ஆர்.எஸ்.அந்தணன், சமூக ஆர்வலர்கள் சரவணா ராஜேந்திரன், அருள்தாஸ், இந்தப்படத்தை வெளியிடும் ஜேசு.சுந்தரமாறன், தமிழியம் தலைவர் மா.சோ.விக்டர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினார்கள்.
நடிகர் பொன்வண்ணன் பேசும்போது, “இந்த படத்தை ஒரு பெண் தயாரித்திருக்கிறார் என்பதை நினைத்து ஆச்சரியப்படுகிறேன்.. பிரெஞ்சு புரட்சி பற்றி எல்லாம் புத்தகத்தில் தான் படித்து அறிந்து கொண்டு இருக்கிறேன்.. ஆனால் தமிழகமெங்கும் நாம் வளர்க்கக்கூடிய ஒரு விலங்கினத்திற்காக இலட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டதை பார்த்தபோது உண்மையிலேயே பிரமிப்பு தான் ஏற்பட்டது. ஆனால் இந்த மெரினா போராட்டத்தின் பின்னால் மிகமிக நுட்பமான அரசியல் ஒன்று ஒளிந்திருக்கிறது.. உண்மையை சொல்லப்போனால் தமிழகத்தின் இருபெரும் ஆளுமைகள் கிட்டத்தட்ட விடுபட்டுப் போன நிலையில், தமிழகத்தின் அரசியல் தலையெழுத்தையே அந்த சமயத்தில் முழுமையாக மாறப்போகிறது என எதிர்பார்த்த வேலையில் அப்படி நடைபெறாமல் போனது துரதிஷ்டமே.. இந்த போராட்டத்தை ஆரம்பித்தது வேண்டுமென்றால் காலத்தின் கையில் இருந்தது.. போராட்டத்தை முடிப்பது அரசாங்கத்தின் கைகளுக்குள் போய்விட்டது.. இந்த முடிந்துபோன நிகழ்வுகளை ஒருவர் படமாக எடுத்து மக்களுக்கு ஞாபகமூட்ட வருகிறார் என்றால் அரசாங்கம் அங்கும் தனது எதிர்ப்புக்கரங்களுடன் வரத்தான் செய்யும். இந்த படத்தை தடுப்பதற்கு முனையும். அதே அமைப்புதான் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்கிற படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்து அதை மக்களின் பார்வைக்கு அனுப்பி வைக்கிறார்கள். இதன் மூலம் மக்களின் சிந்தனையை மடைமாற்றம் செய்ய நினைக்கிறார்கள்.. ஒரு எளிய பெண்மணி தனது சொந்த செலவில் தன்னிடம் இருக்கும் காசை எல்லாம் போட்டு இப்படி ஒரு படத்தை எடுத்திருப்பது மெரினா புரட்சியை விட மிகப்பெரிய புரட்சி என்றே சொல்வேன்.. கடந்த இரண்டு வருடமாக போராடி வரும் இந்த படக்குழுவினரின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்று கூறினார்.
இயக்குனரும் பத்திரிக்கையாளருமான கேபிள் சங்கர் பேசும்போது, “இந்த படத்தை பார்த்ததும் சோசியல் மீடியாக்களில் நிலவிவந்த ஒரு குற்றச்சாட்டுக்கு இதில் விடை சொல்லப்படவில்லையே என்கிற கேள்வி என் மனதில் தோன்ற அதை இயக்குனரிடமும் கேட்டேன்.. ஒரு போராட்டம் துவங்கிய முதல் நாள் பத்து பேர், அடுத்த நாள் ஆயிரம் பேர், அடுத்தநாள் லட்சக்கணக்கில் என மக்கள் மொத்தமாக ஒன்றுகூட அனுமதிக்கப்படுகிறார்கள்.. இந்த போராட்டக்களம் ரொம்பவே பாதுகாப்பாக இருக்கிறது என்கிற செய்தி பரப்பப்படுகிறது அதைத் தொடர்ந்து பெண்கள் பலர் குடும்பம் குடும்பமாக போராட்டத்துக்கு வருகிறார்கள். இதன் பின்னணியில் ஒரு மிகப்பெரிய அரசியல் இருக்கிறது. 5 பேர் 10 பேர் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தினாலே அடித்து விரட்டும் போலீசாரும் அரசாங்கமும் இத்தனை பேரை ஒன்று கூட அனுமதி அளித்ததன் பின்னணியில் இருப்பது என்ன என்கிற விஷயத்திற்கு இதில் சொல்லப்படவில்லையே எனது இயக்குனரிடம் கேட்டேன்.
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பேசும்போது, “நல்ல நோக்கத்தில் தொடங்குகிற போராட்டங்கள் கடைசி வரை அதே திசையில் பயணிக்குமா என்பது கேள்விக்குறி.. ஒரே நாளில் சில அமைப்புகள் மூலமாக இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தைத் திரட்டி ஒரு போராட்டத்தை நடத்த முடிந்தது சாத்தியம் என்றால் இனி வரும் நாட்களில் இதுபோன்ற ஒரு போராட்டத்தை நடத்திவிட முடியுமா..? லட்சக்கணக்கானோரை ஒன்று திரட்டி ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே போராட்டம் நடத்தினாரே..? அதே போன்ற ஒரு போராட்டத்தை இப்போது அவரால் நடத்த முடியுமா..? இந்தப் போராட்டத்தை தடுக்கவில்லை என்றால் அரசு கையாலாகாத்தனத்தோடு இருந்தது என்று சொல்லிவிட முடியாது.
இந்த படத்தை உலகமெங்கும் வெளியிட்டு, தமிழ் உணர்வாளர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை மேற்கொண்டிருக்கும் ஜெ ஸ்டுடியோ ஜேசு.சுந்தரமாறன் பேசும்போது, “இந்த படத்தை நான் பலமுறை பார்த்து விட்டேன்.. வெளிநாட்டை பொருத்தவரை ஒரு போராட்டம் நடந்தது என்றால் அவற்றை ஆவணப்படுத்தி வைக்க மிகப்பெரிய முயற்சி எடுப்பார்கள்.. ஆனால் தமிழகத்தில் இவ்வளவு பெரிய ஒரு போராட்டம் நடைபெற்ற பெற்ற பின்னர் அதனை வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் அளவிற்கு ஆவணப்படுத்தும் முயற்சி நடக்கவில்லையே என்ற ஆதங்கம் இருந்தது.. அப்போது தான் இந்த மெரினா புரட்சி திரைப்படத்தை என்னிடம் கொண்டு வந்தார் எம்எஸ்.ராஜ். அவர்கள் இவ்வளவு சிரமத்திற்கிடையே இந்த படத்தை உருவாக்கியபோது, என்னுடைய பங்களிப்பாக ஏதாவது இருக்க வேண்டும் என்று நினைத்தேன் இந்த பட வெளியீட்டிற்காக தனியாக நிறுவனம் தொடங்கி உலக நாடுகளில் வெளியிட்டு வருகிறேன்.. இதற்கு எனக்கு உலகத் தமிழர்கள் பலரும் உதவி செய்கின்றனர் என்பதையும் இங்கே தெரியப்படுத்திக் கொள்கிறேன்” என்று கூறினார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்கள் பேசும்போது, “லட்சக்கணக்கான இளைஞர்கள் ஒன்று திரண்டு ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி மிக கண்ணியமாக போராட்டம் நடத்தி உலக அரங்கில் தமிழகத்தை தலைநிமிர செய்தார்கள்.. மிகச்சிறந்த இந்த போராட்டம் ஒரு அமைப்பின் கீழ் நடந்திருந்தால் போராட்டத்தின் இறுதி நாளில் நடைபெற்ற வன்முறை தவிர்க்கப்பட்டிருக்கும்.. ஒரு பெண் காவலரே ஒரு கர்ப்பிணி பெண்ணை தாக்கி உயிரிழக்க செய்த சம்பவம் நிகழாமல் போயிருக்கும்.. போராட்டம் நடந்த அத்தனை நாட்களும் பாதுகாப்பாக இருந்த போலீசார் இறுதிநாளில் இந்த போராட்டம் வெற்றி பெற்றதாக மாறிவிடக்கூடாது என்கிற அரசாங்கத்தின் உத்தரவால் கடுமையாக நடந்து கொண்டதை பார்க்க முடிந்தது.. இதன் பின்னணியில் உள்ள அரசியலை இளைஞர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.. இப்படித்தான் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு எதிராக நூறு நாட்கள் அமைதியாக போராட்டத்தில் கடைசி நாளன்று அரசாங்கத்தால் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு பலர் பலியாகினர். எந்த போராட்டமுமே வெற்றிபெற கூடாது என்பதே அரசின் நோக்கம். இந்த மெரினா புரட்சி திரைப்படம் அனைத்து மக்களின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்” என்று கூறி வாழ்த்தினார்
படத்தின் இயக்குனர் எம்எஸ் ராஜு பேசும்போது, “இந்த போராட்டம் உருவாக காரணமாக இருந்த 18 பேரை வாழ்த்துவது மட்டுமே இந்த நிகழ்ச்சியின் நோக்கம் அல்ல.. சிலர் அப்படி தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள்.. இந்த போராட்டத்தை கடைசிவரை வெற்றிகரமாக நடத்திய 10 லட்சம் மக்களையும் கௌரவிக்கும் ஒரு நிகழ்வு தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.. இந்த படத்தில் போராட்டத்தில் கலந்து கொண்ட எல்லோருடைய உணர்வுகளும் அவர்களது பங்களிப்பும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.. இந்த படத்தை எடுத்து சென்சார் சான்றிதழ் வழங்குவதற்கு நான் பட்ட போராட்டம் ஒரு வகை என்றால் இந்த விழாவை நடத்துவதற்கு அதைவிட இன்னும் போராடவேண்டியிருந்தது.
இந்த நிலையில் இன்று ஜல்லிக்கட்டு விசாரணை கமிஷன் என்னையும் என் மனைவியையும் இந்த படத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக நாங்கள் காட்டியிருக்கும் விஷயங்களுக்கு கைவசம் வைத்திருக்கும் ஆதாரங்களுடன் எங்களை ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பியுள்ளது… இன்னொரு பக்கம் இந்த படத்தில் பீட்டா பற்றி நாங்கள் கூறியுள்ளதற்காக எங்கள் மீது 100 கோடி ரூபாய் கேட்டு வழக்கு தொடர்ந்து இருக்கிறது பீட்டா நிறுவனம். நானும் மற்ற இயக்குனர்கள் போல் கமர்சியலாக ஒரு படத்தை இயக்கிவிட்டு போய் இருக்கலாம் என்கிற எண்ணத்தை தான் இவையெல்லாம் ஏற்படுத்துகின்றன..
இந்த மெரினா புரட்சி ஆவணப்படுத்தப்பட வேண்டும் என நினைப்பது தவறா..? உனக்கேன் இந்த வேண்டாத வேலை என்று பலரும் கேட்கின்றனர். இந்த போராட்டத்தை ஆவணப்படுத்தும் முயற்சியில் யாருமே இறங்கவில்லை.. என்னை குறை சொல்பவர்கள் யாராவது ஒருவர் இதை செய்திருந்தால், நான் இந்த படத்தை எடுத்திருக்கவே மாட்டேன்.. ஒரு மாபெரும் புரட்சியை ஆவணமாக பதிவு செய்ய முயற்சித்தது ஒரு குற்றமா..? இந்த படத்தை நான் எடுக்க இன்னொரு காரணம் இந்த மெரீனா போராட்டத்தின் முடிவில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டதாக ஹிப் ஹாப் ஆதி போலீசாருக்கே தெரியாத ஒரு கருத்தை சொல்கிறார்.. இன்னொரு தரப்பினர் நாங்கள்தான் உணவு அளித்து இந்த போராட்டத்தை நடத்தினோம் என்று சொல்கிறார்கள்.. இதெல்லாம் என்னை ஆச்சரியப்படுத்தின.. இதன் பின்னணி என்ன என்று புலனாய்வு செய்து அதில் மறைந்துள்ள உண்மைகளையும் சேர்த்துதான் இந்த படத்தை உருவாக்கி உள்ளேன்.. அதனாலேயே இந்த படத்தை வெளியிட விடாமல் முடியாமல் இவ்வளவு எதிர்ப்புகளை சந்தித்து வருகிறேன். இந்த படத்தை உலகமெங்கும் திரு ஜேசு சுந்தரமாறன் வெளியிட முன் வந்ததற்கு, இப்படிப்பட்ட ஒரு மாபெரும் போராட்டம் வருங்கால சந்ததியினருக்கு தெரியாமல் போய்விட கூடாது என்கிற தமிழ் உணர்வு தான் காரணம்.. உலகின் பல நாடுகளில் இந்த படத்தை வெளியிட முடிந்த எங்களால் இந்தியாவில் தமிழகத்தில் இந்த படத்தை வெளியிடுவதற்கு இவ்வளவு போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது” என்று மனம் வெதும்பி கூறினார் இயக்குனர் எம்.எஸ்.ராஜு.