உதயநிதி நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இது ஹிந்தியில் வெளியான ஆர்டிகள் 15 படத்தின் மறு உருவாக்கம்.
ஏற்படுத்தியுள்ள எதிர்ப்பார்ப்பை இப் படம் பூர்த்தி செய்ததா?
கொங்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பகுதியில் மூன்று பள்ளி சிறுமிகள் காணாமல் போகிறார்கள். அவர்களில் இரண்டு சிறுமிகள் கொலை செய்யப்படுகிறார்கள். மற்றொரு சிறுமி காணவில்லை.அந்த வழக்கை புதிதாக பணிக்கு வந்திருக்கும் டிஎஸ்பி அதிகாரி உதயநிதி ஐபிஎஸ் விசாரிக்கிறார். அந்த சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமையின் பின்னணி என்ன? செய்தவர்கள் யார்? அவர்களை உதயநிதி கண்டுபிடித்துத் தண்டனை வாங்கிக் கொடுத்தாரா? போன்ற கேள்விகளுக்கு விடை தான் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் கதை.
நாட்டில் நிலவும் சாதி பிரச்சினைகளையும் பாகுபாட்டையும் அடிப்படையாக வைத்து பின்னப்பட்ட கதை இது.இந்தச் சாதிய எண்ணம் எப்படி கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை பரவி குற்றவாளிகளுக்குத் துணைபோகிறது அப்பாவிகளை ஒடுக்குகிறது என்பதைக் கூறுகிற கதை இது.
சமுதாயத்தின் பிரதிபலிப்பாக காவல்துறையில் இருக்கும் சாதிப் பாகுபாடு தடைகளைக் கடந்து எப்படி நீதியை உதயநிதி நிலைநாட்டுகிறார் என்பதைச் சொல்கிறது கதை.
மக்களைக் காப்பாற்ற ஒரே வழி சட்டம் மட்டுமே அதை விட முக்கியம் அந்த சட்டம் சரியானவர்கள் கையில் இருக்க வேண்டும் என்பதை அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும்படிச் சொல்கிறது படம்.
ஐபிஎஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருக்கும் உதயநிதி போலீஸ் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார்.மிகை நடிப்பு இல்லாத அவரது அளவான நடிப்பு தான் படத்தினை ரசிக்கத் தோன்றுகிறது.
போராளியாக நடித்திருக்கும் ஆரி, உதயநிதியின் மனைவியாக நடித்திருக்கும் தன்யா ரவிச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சுரேஷ் சக்கரவர்த்தி. சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் இளவரசு, ஷிவானி ராஜசேகர், மயில்சாமி, ராட்சசன் சரவணன் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் அந்தந்த பாத்திரத்திற்குப் பொருத்தமான தேர்வுகள். இந்த அனைத்து கதாப்பாத்திரங்களும் கதையோடு பயணிப்பது சிறப்பு.
தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவும், திபு நினன் தாமஸின் இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம்.திபு கதையோடு இணைந்த பாடல்களைக் கொடுத்திருக்கிறார். யுகபாரதியின் வரிகளில் வீரியம்.
அதிரடி ஆக்ஷன் காட்சிகள் பயங்கர சண்டைக் காட்சிகள் எதுவும் இல்லாமல் கதை இயல்பாகப் பயணிக்கிறது.அதுதான் படத்தின் அழகே.
இது ‘ஆர்டிகள் 15’ என்ற இந்திப் படத்தின் தமிழ் வடிவம் என்றாலும் மறு உருவாக்கம் என்கிற உணர்வே தெரியாமல் படமாக்கி இருக்கிறார்கள்.நேரடி தமிழ்ப் படம் போல மிக ச்சிதமாய்க்காட்சிப் படுத்தியுள்ளார் இயக்குநர் அருண்ராஜா காமராஜ்.
உதயநிதி இந்திக்கு எதிராகவும் தாய்மொழிக்கு ஆதரவாக பேசும் வசனத்திற்கு சபாஷ்.
சற்று எல்லை தாண்டினாலும் படம் சாதியம் பேசும் படமாக மாறிவிடும் அபாயம் இருந்தாலும் எச்சரிக்கையாக அனைவருக்குமான படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.
மொத்தத்தில் ‘நெஞ்சுக்கு நீதி’ கவரும்.