நோர்வே தமிழ் திரைப்பட விழா- தமிழர் விருது 2017

nff1ஏறு தழுவுதல்  எமது உரிமை. ஏற்றுக்கொள்வது அவர்களின் கடமை! தமிழராய் இணைவோம்! நோர்வேயிலிருந்து ஒரு குரல்!

நோர்வே தமிழ் திரைப்பட விழா குழு சார்பில் அதன் இயக்குநர் வசீகரன் சிவலிங்கம்  விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

”  நோர்வே தமிழ் திரைப்பட விழா குழுவினர் நாம் எமது முழுமையான, உறுதியான ஆதரவினை, தமிழ்நாட்டில்  ஏறு தழுவுதல் விளையாட்டை நடாத்த ஆதரவளிக்கிறோம். தமிழக மக்களோடு இணைந்திருக்கிறோம்.

 நோர்வே தமிழ் திரைப்பட விழா, தனது ஏழாவது (7) வருடத்தை, பத்திரிக்கை, ஊடக நண்பர்கள், கலைஞர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் பிரமாண்டமான ஆதரவோடும், வாழ்த்துக்களோடும், வெற்றியோடு பூர்த்தி செய்திருக்கிறது. தொடரும் எமது 8வது நோர்வே தமிழ் திரைப்பட விழாவின் (27-30 ஏப்ரல் 2017) செயற்பாடுகள்  விரைவாக நடைபெற்று வருகின்றன.

திரைப்பட விழாக் குழுவினர் சார்பாக  ஆதரவு அளித்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத்  தெரிவித்துக் கொள்கிறோம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் தாரக மந்திரம். தமிழர் திருநாள் உலகம் முழுவதும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டதில், நோர்வே தமிழ் திரைப்பட விழா குழுவினர் நாம் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

கடந்த ஏழு வருட காலமாக மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்த விழா  பிரமாண்ட விழாவாக  பல நாடுகளின் வரவேற்பைப் பெற்று நிற்கிறது. நாங்கள் கடந்த ஆண்டில் இருந்து எங்கள் விழாவினை விரிவடைய செய்திருக்கிறோம்.  மேலும் சிறப்பு சேர்க்கும் வண்ணம் வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கும் “தமிழர் விருது”  வழங்கப்பட்டு வருகின்றது.

 

norway11எமது திரைப்பட விழாவின் விரிவாக்கம் அதிகப்படியான செலவுகளை  எமக்கு கொடுத்த வண்ணம் இருப்பதால். கடந்த ஆண்டில் இருந்து ஒரு முடிவினை எடுத்திருக்கின்றோம். நோர்வே நாட்டிற்கு தாமாகவே வருகை தந்து எமது மதிப்பளிப்பை ஏற்றுக்கொள்ளும் இயக்குநர்கள், கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளுக்கு மட்டுமே “தமிழர் விருது” வழங்கப்படும். ஏனையவர்களுக்கு அவர்கள் பெற்ற விருதிற்கான சான்றிதழ்கள்  மட்டும் வழங்கப்படும் அல்லது அனுப்பி வைக்கப்படும்.

 

இதன் காரணமாக தொடர்ந்தும் படங்களை சமர்ப்பிப்போரிடம் எங்களுக்கு ஒரு தாழ்மையான விண்ணப்பம். உங்களது முழுநீளத்  திரைப்படதிற்கு  தலா  100(Euro) ஐரோவும், ஏனைய படைப்புகளுக்கு  50(Euro) ஐரோவோம் விண்ணப்பக் கட்டணமாக  அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரமாண்டப் பணிகளுக்கு ஒரு சிறு தொகை அளிப்பது  நாகரிகச செயலாகும்  என்ற கோட்பாட்டிற்கு இணங்கவே இந்த வேண்டுகோள்.

இதற்குக்  கைமாறு தெரிவிக்கும் முகமாக அனுப்பப்படும் சகல படங்களும் வெவ்வேறு நாட்களில் பார்வையாளர்களுக்கு, பிரத்தியேக  திரையரங்குகளில் திரையிடுவோம் என்றும் உறுதியளிக்கிறோம். இந்த வழியில் உங்களுடைய, படங்களும், குறும்படங்களும் வேறு திரைப்பட விழாகளிலும், தொலைக்காட்சிகளிலும் இடம்பெற வழிசெய்வோம்.

 

இந்த வகையில் தான் உங்கள் படைப்புகளை உங்களுடைய வட்டத்திற்குள்  அமிழ்ந்து போகாமல், அதிக செலவுமில்லாமல், அனைத்துலக  மக்களின் பார்வைக்கு கொண்டு செல்ல முடியும்.  எங்களுடைய இந்த பல நலன் பெறும்  திட்டத்தில் மனம் விரும்பி பங்கேற்று, எங்களுடன் சேர்ந்து உங்கள் படைப்புகளை விரிவடைய செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். ” இவ்வாறு வசீகரன் சிவலிங்கம்  கூறியுள்ளார்.