‘பகலறியான்’ திரைப்பட விமர்சனம்

வெற்றி, அக்ஷயா கந்தமுதன், சாப்ளின் பாலு, சாய் தீனா, முருகன், வினுப் பிரியா நடித்துள்ளனர்.எழுதி இயக்கியுள்ளார் முருகன்.இசை – விவேக் சரோ,ஒளிப்பதிவு – அபிலாஷ். ரிஷிகேஷ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் லதா முருகன் தயாரித்துள்ளார் .

இரவிலேயே தனது வாழ்க்கை என்று வாழும் ஒருவன் பகலறியான் எனப்படுகிறான்.பொதுவாக நிழல் உலகத்திற்குத் தான் இரவில் வாழ்க்கை என்றாகும். இப்படித் தனது உலகம்,வாழ்க்கை, எல்லாம் இரவிலேயே என்று வாழும் சிலரைப் பற்றிய கதைதான் பகலறியான் .

படத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, பெண் கடத்தல், பெண் வியாபாரம், விபச்சாரம், கூட்டிக் கொடுத்தல், காட்டிக்கொடுத்தல் என்று பல குற்ற செயல்கள் நிகழ்கின்றன.பல்வேறு பாத்திரங்கள் பல்வேறு திசைகளில் பயணிக்கின்றன.குறிப்பாக அவற்றில் இருந்து வடிகட்டி இருவரது கதையை எடுத்துக் கொண்டு படத்தைப் பற்றிப் பேசலாம்.

கெட்ட செயல்களைச் செய்து கொண்டு கெட்டவனாக இல்லாமல் இருக்கும் ஒருவன், நல்ல செயல்பாடு போல் செய்து கொண்டு கெட்டவனாக இருக்கும் இன்னொருவன்.தந்தையைக் கொலை செய்துவிட்டு ஜெயில் சென்று வந்த ஒருவன் ,அதாவது நம் நாயகன் (வெற்றி) . அவன் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான்.

நாயகியின் தந்தை மறுக்கிறார்.அவளை மறந்து விடு என்று அவமானப்படுத்தி விரட்டுகிறார்.அது அவரது தரப்பின் நியாயம் ,அதில் தவறில்லை. இப்படிப்பட்ட சூழலில் வீட்டுக்குத் தெரியாமல் நாயகன் நாயகியை காரில் வெகு தூரம் அழைத்துச் செல்கிறான். அவனது நடவடிக்கைகள் அவளுக்குப் புதிராகவும் பயமாகவும் உள்ளன.அவளது நினைவைக் குலைக்க , தூக்க மாத்திரை வாங்கிக் கொடுத்து விடுகிறான் .அதை அப்படியே அவள் விழுங்கி விடுகிறாள்.காரிலேயே தூங்கி விடுகிறாள்.

இன்னொருவன் ஒரு பெண்ணைக் காதலிப்பதாக நடித்து, போலிக் காதல் செய்து அவளை நுகரத் துடிக்கும் பணக்கார வீட்டுப் பிள்ளைகளிடம் கொண்டு போய் விட்டு விடுகிறான். ஒருவகையில் விற்று விடுகிறான்.

இப்படி இரு வேறு ஜோடிகள் கதையில் பயணிக்கின்றன.தங்கள் பெண்ணைப் பறி கொடுத்த தரப்பு கவலையுடன் பதற்றத்துடன் தேடித் திரிகிறது.

குற்றமுள்ள நெஞ்சம் காதலியை அழைத்துக் கொண்டு செல்லும் குற்றவாளி மனம் தன் காதலி தன் மீது வைத்த நம்பிக்கையால் நிலைகுலைகிறது. அதனால் தடுமாறி திசை மாறி மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்து சேர்கிறது.அவளைக் கொண்டு போய் அவளது வீட்டிலேயே விட்டு விடுகிறான்.

காதலனால் கொண்டு போய் விடப்பட்ட அந்தப் பெண் உயிரைக் காப்பாற்றப் போராடுகிறாள்.இந்த இரண்டு பெண்களின் நிலைக்கும் இறுதியில் நிகழும் முடிவு என்ன?

முடிவில் வென்றது தர்மமா? அதர்மமா?என்பதைச் சொல்லும் படம் தான் பகலறியான்.

படத்தின் ஆரம்ப இருபது நிமிடங்கள் கதை என்ன என்று யூகிக்க முடியாத அளவிற்குத் தொடர்புின்றி காட்சிகள் விரிகின்றன.எல்லாமே அடிதடி வெட்டு குத்து ரத்தம் வகையிலான காட்சிகள்.
பிறகுதான் தனித்தனியாக இழை பிரித்துக் கதை பயணம் செய்கிறது.பிரதான கதைக்குள் நுழையும் முன்பு பூடகமாகப் பல காட்சிகளைக் காட்டி நம் பொறுமையைச் சோதிக்கிறார்கள். அவர்கள் அதை புதுமை என்று நினைத்திருக்கிறார்கள், பிழையானது என்பதை உணராமல் .

படத்தில் பிரதான பாத்திரம் ஏற்றுள்ளார் வெற்றி.அவர் ஒரு முன்னாள் குற்றவாளி என்பதால் முகத்தில் கள்ளத்தனம், கண்களில் திருட்டுத்தனம் என்று தோன்றுகிறார். சண்டைக்காட்சிகளில் அடித்து துவம்சம் செய்கிறார்.காதலியிடம் கடைசி நிமிடங்களில் மட்டும் பரிவுகாட்டி உருகுகிறார்.நாயகி அக்ஷயா அதிகம் பேசாமல் பரிதாபத்தை அள்ளுகிறார்.

படத்தில் எதிர்மறை நிழல் விழுந்த பாத்திரங்கள் ஏராளம் வருகின்றன.அவற்றின் சில அவ்வப்போது தங்களது பாத்திரத்தை அழுத்தமாக பதிய வைக்கின்றன.

இதுவரை படங்களில் அசட்டுத்தனமான காமெடியனாக வந்து கொண்டிருந்த சாப்ளின்பாலு இதில் முரட்டுத்தனமான வேடமேற்றுள்ளார்.அதை நம்பவும் வைத்துள்ளார். ஊமைப் பாத்திரத்தில் சைலன்டாக வந்து ஆக்சன் காட்சிகளில் சாகசங்கள் செய்து நடித்துள்ளவர் ,நாயகனுக்கு இணையான காட்சிகளில் வருகிறார்.அப்படி தனக்கான நடிப்புத் தருணத்தை ஏற்படுத்திக் கொண்டு நடித்துள்ளார்.  அதேபோல முன்னாள் தாதாவாக குடிகாரன் பாத்திரத்தில் வரும் ஒரு நடிகரும் தனக்கான இடத்தில் நடிப்பில் புகுந்து விளையாடி உள்ளார்.

இதேபோல் பிரதான நட்சத்திரங்களுக்கும் நடிப்பு வாய்ப்புகளைக் கொடுத்து இருந்தால் படத்தின் தரம் மேலும் கூடியிருக்கும்.

பெரும்பாலும் காட்சிகள் இரவில் நடப்பதால்  மங்கலான ஒளியில் கூட சூழலின் தீவிரத்தை உணரச் செய்துள்ள அபிலாஷின் ஒளிப்பதிவு மட்டுமல்ல கடைசிவரை நம்மைப் பதற்றத்தில் ஆழ்த்தும் விவேக் சரோவின் இசையும் படத்திற்குப் பெரும் பலமாக அமைந்துள்ளன.படத்தின் இறுதியில் வசனம் ஒன்று வரும், சாகக் கிடக்கும் ஒருவனுக்குக் கொடுக்கும் மிகப்பெரிய தண்டனை மன்னிப்பு தான் என்று.இந்த நல்ல கருத்தைக் கூற நினைத்து தான் படமாக எடுத்திருப்பார்கள் போலும்.

நிழல் உலகில் நிகழும் மோதல் , பழிவாங்கல், வன்மம்,விசுவாசம், துரோகம் போன்றவற்றைக் காட்சிகள் ஆக்கி அவர்களின் பயணத்தையும் அதில் நிலவும் அசைவுகளையும் இந்தப் படத்தில் காட்சிகளாக்கி முழுக்க முழுக்க இரவிலே கதை சொல்லி இருக்கிறார்கள்.

த்ரில்லர் ரசிகர்களை இப்படம் கவரலாம்.