வணிக நோக்கத்துக்கு மட்டுமே சினிமா ஊடகத்தை பயன்படுத்த வேண்டும் என்பவர்கள் கொஞ்சம் சமூக நோக்கத்துக்கும் பயன்படுத்தலாம் என்று முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குநர் இசக்கி கார்வண்ணன். அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா எனப்பார்ப்போம்.
உலகம் முழுவதுமே பல்வேறு சமூக கொந்தளிப்புக்கும் விழிப்புணர்வுக்கும் காரணமாக இருக்கும் ‘வாட்ஸ் அப்’ என்னும் அப்ளிகேஷனின் தமிழ்ப் பெயர்தான் ‘பகிரி’.
நாயகனின் அப்பா தன்னுடைய மகனையும் தன்னைப்போலவே விவசாயத்தில் ஆளாக்க எண்ணுகிறார்.அந்த ஆசையில் அவனை விவசாய படிப்பு படிக்க வைக்கிறார். ஆனால், அரசாங்க வேலைக் கனவிலிருக்கிற மகனோ, தனது அப்பாவின் ஆசைக்காக விவசாய படிப்பை முடிக்கிறான். படித்து முடித்தபின், அரசாங்க வேலை தேடி அலைகிறான்.
அவனுக்கு நாஸ்மாக் எனப்படும் அரசாங்கம் நடத்தும் மதுபானக்கடையில் வேலைக்கு சேர ஆசை. அதற்காக முயற்சிக்கிறான். ஆனால் வேலையில் சேர்வதற்கு ரூ.5 லட்சம் வரை லஞ்சமாக கேட்கிறார்கள். தன்னுடைய அப்பாவிடம் சென்று நிலத்தை விற்று பணம் கேட்க ,அவரோ மறுக்கிறார். இதையடுத்து, எப்படியாவது பணத்தைச் சம்பாதித்து அந்த வேலையில் சேர முடிவெடுக்கிறான்.
இந்நிலையில், ஒரு மதுபானக்கடையில் தற்காலிக வேலை கிடைக்கிறது. அங்கிருந்து சம்பாதித்து எப்படியாவது அந்த வேலையை நிரந்தரமாக்கிக் கொள்ள முயற்சி செய்கிறான். இப்படிப் போய்க்கொண்டிருக்கும் நிலையில், ஒருநாள் நாயகி யைப் பார்க்கும் நாயகன் அவள் மீது காதல் கொள்கிறான். காதலியின் அடாவடித்தனங்கள் நாயகனுக்கு பிடித்துப் போகிறது. முதலில் காதலை ஏற்க மறுக்கும் காதலி பின்னர் காதலை ஏற்றுக்கொள்கிறாள். அத்துடன், காதலனின் லட்சியம் நிறைவேற உதவி செய்கிறாள்.
இதற்கிடையில், அந்த ஊர் எம்.எல்.ஏ.வான ரவிமரியாவுக்கும் நாயகனுக்கும் பிரச்சினை முளைக்கிறது. காதலி வீட்டில் உள்ளவர்கள் நாயகனுக்கு வேலை கிடைக்க இருந்த நகைகளை விற்று பணியில் சேர உதவுகிறார்கள்.
இதையறிந்த ரவிமரியா அங்கு மதுபானக் கடை இருக்கக்கூடாது என்று போராட்டம் நடத்தி அந்த கடையை மூட வைக்கிறார். இதனால், நொந்துபோன நாயகன், வேறு இடத்தில் மதுபானக்கடையை திறக்கிறான். அங்கும் ரவிமரியாவால் பிரச்சினை வருகிறது.
இறுதியில், பிரச்சினைகளைச் சமாளித்து நாயகன் தனது லட்சியத்தில் நின்று வென்றானா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
அறிமுக நாயகன் என்றாலும் பிரபு ரணவீரன் மோசமில்லை.அரசாங்க வேலையில் சேர வேண்டும் என்ற லட்சியத்துடன் போராடும் காட்சிகளிலும், காதலி ஸ்ரவ்யாவுடன் சிருங்காரம் சொட்டும் காட்சிகளிலும், அப்பா, அம்மா பாசக் காட்சிகளிலும் குறையில்லாமல் நடித்துள்ளார்.
ஸ்ரவ்யா, அடாவடிப் பெண்ணாக வருகிறார்.கவர்கிறார். அரசியல்வாதியாக வரும் ரவிமரியா வரும் காட்சிகள் எல்லாம் படம் கலகலப்பாக செல்கிறது.ஆனால் அவர் ஆண்டிகளுக்கு அலையும் காட்சிகளில் ஆபாச நெடி .ஸ்ரவ்யாவின் குடிகார தந்தையாக வரும் ஏ.வெங்கடேஷ் அசல் குடிகாரனாகவே நடித்திருக்கிறார். விவசாயத்தின் பெருமையை பறைசாற்றும் வகையில் நடித்திருக்கும் சூப்பர் குட் சுப்பிரமணிக்கு சபாஷ்.
விவசாயத்தின் முக்கியத்துவத்தை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார் இசக்கி கார்வண்ணன். அதேபோல், மதுவிலக்குக் கொள்கைக்கு பின்னால் இருக்கும் அரசியல் சூதாட்டங்கள்தான். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்றில்லை அனைவரும் ஒன்று சேர்ந்துதான் இந்த டாஸ்மாக்கை வாழ வைக்கிறார்கள். தமிழகத்தையே குடிகாரர்கள் மாநிலமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நெத்தியடியாக சொல்லியிருக்கிறார் இயக்குநர். . இப்படி நிறைய நாட்டு நடப்பு அவலங்களை தைரியமாகப் போட்டுத்தாக்கியுள்ளார். இருப்பினும், காட்சிகளை கோர்வையாக்குவதில் இயக்குநர் கொஞ்சம் தடுமாறியிருக்கிறார்.
வீரக்குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.. அருணகிரியின் இசை படத்திற்கு ஊறுசெய்ய வில்லை.
மற்றபடி, மக்களை சிந்திக்க வைக்கக்கூடிய வசனங்கள், நக்கல், நையாண்டி கலந்த காட்சி அமைப்புகளுடன் படம் நகர்வதால் படம் போரடிக்காமல் செல்கிறது.சமூக நோக்கில் நல்ல கருத்துகளை சொல்ல முயன்றிருப்பதால் குறைகளை மறந்து விடலாம்.