’பக்கிரி’ விமர்சனம்

 

மாமனார் ரஜினியின் ப்ளட்ஸ்டோன் படத்தைப் போலவே மருமகன் தனுஷும் ஒரு  ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார் . அதுதான்    ‘தி எக்ஸ்ட்ராட்னரி ஜார்னி ஆஃப் ஃபகிர்’ (The Extraordinary Journey of the Fakir) . இப்படத்தின் தமிழ் வடிவம்தான் ‘பக்கிரி’ என்ற தலைப்பில் வெளியாகியிருக்கிறது. இப்படத்தை கென் ஸ்காட் இயக்கியிருக்கிறார்.

தனுசின் சர்வதேச திரைப்படமான இப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.

சிறு வயதில் இருந்தே நண்பர்களுடன் சேர்ந்து சிறு சிறு குற்றங்களை செய்து வாழ்ந்து வருகிறார் அப்பா இல்லாமல் வாழும் தனுஷ்,  அவரது அம்மா இறக்கும் போது  அவரது தந்தை பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இருப்பதை அறிந்துக் கொள்ளும் தனுஷ், பணம் சேர்த்து வைத்து தனது அப்பாவைச் சந்திக்க விரும்புகிறார். தனது அம்மாவின் அஸ்தியுடன் பாரீஸ் செல்கிறார். பாரீஸ் வந்ததும் ஒரு பெண் மீது காதல் கொள்கிறார்.

இதற்கிடையே, சூழ்நிலை காரணமாக பாரீஸில் இருந்து இங்கிலாந்து செல்லும் தனுஷ் அங்கு தான் சந்திக்கும் புதிய சூழ்நிலையாலும், மக்களாலும் இன்னும் சில நாடுகளுக்கு பயணிக்க, பாரீஸில் இருக்கும் தனது அப்பாவை சந்தித்தாரா, அவரது காதல் கைகூடியதா என்பது தான் படத்தின் மீதிக்கதை.

கதை சாதரணமானதாக தெரிந்தாலும், தனுஷின் பலதரப்பட்ட கலவையான நடிப்பால் படம் சுவையாக நகர்கிறது. காதல், காமெடி, செண்டிமெண்ட் என்று அனைத்துவிதமான நடிப்புகள் மூலம் முழு படத்தையும் தோளில் தூக்கி சுமக்கும் தனுஷ் ஒரு பக்கம் நம்மை கவர்வது போல, மறுபுறம் கதை பல நாடுகளுக்கும் கதை பயணித்து கவர்கிறது.

உட்கார்ந்த இடத்தில் இருந்தே உலகத்தை சுற்றிக் காட்டுவது மட்டும் இன்றி, பல நாடுகளின் சாதாரண மக்களையும், அவர்களது வாழ்வியலையும் எதார்த்தமாகவும், ரசிக்கும்படியாகவும் சொல்லியிருக்கிறது இப்படம்.

இதுவரை நாம் பார்த்த ஹாலிவுட் படங்களை தாண்டி, இந்த படம், நிச்சயம் குடும்பத்தோடு பார்ப்பதற்கான தகுதியான படமாக இருக்கிறது.

மொத்தத்தில், ‘பக்கிரி’ சாதாரண மனிதரின் சுவாரஸ்யமான வாழ்க்கைப் பயணத்தை, படம் பார்ப்பவர்களும் உணரக்கூடிய படமாக இருக்கிறது.பார்க்கலாம் ரசிக்கலாம்.