தீபாவளியை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்து உரையாடினார் இயக்குநர் சுசீந்திரன்.
அப்போது அவர் பேசும்போது, “தீபாவளி பண்டிகை எப்போதும் எனக்கு சிறப்பாகத்தான் இருக்கும். 1991-ல் ரஜினியின் ‘தளபதி’ படத்தை தீபாவளி தினத்தில் பார்க்க வேண்டும் என்று கஷ்டப்பட்டு பல கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் சென்று முதல் நாள், முதல் காட்சியில் பார்த்தேன்.
அதற்கு பின்பு பல தீபாவளிகள் வந்தாலும் இப்போதும் என் மனதில் சந்தோஷமான தீபாவளியாக இருப்பது ‘வெண்ணிலா கபடிக் குழு’ படம் வந்த பின்பு கொண்டாடிய தீபாவளிதான். நான் முதன்முதலில் உழைத்து சம்பாதித்த பணத்தில் என் குடும்பத்தினர் அனைவருக்கும் அந்தத் தீபாவளிக்காக துணி எடுத்து கொடுத்தேன். அப்போது எனது குடும்பத்தினர் அனைவருமே மிகவும் சந்தோஷப்பட்டோம்.
பின்பு எனக்கு திருமணம் நடந்த்து. அதன் பின்பான தலை தீபாவளியும் ஒரு ஸ்பெஷாலாகத்தான் இருந்த்து. அடுத்து எனது சகோதரியின் திருமணம்.. பின்பு எனக்கான பட வேலைகள் என்று மும்முரமாகிவிட்டதால் தீபாவளியை ஒரு பெரிய பண்டிகையாக கொண்டாட முடியாத நிலை. ஆனால் இந்தாண்டு அப்படியல்ல.
இந்த வருடம் எனது படமான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தை தீபாவளிக்கு கொண்டு வர நினைத்திருந்தேன். ஆனால் முடியவில்லை. அடுத்து ‘ஏஞ்சல்’ என்கிற படமும் முடியும் தருவாயில் உள்ளது.
நான் சென்னைக்கு வந்து துணை இயக்குநராக பலரிடமும் வேலை பார்த்து கஷ்டப்பட்டுதான் உழைத்து இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன். எனது படங்களின் வெற்றியினாலும், எனது திறமையினாலும்தான் இந்த அளவுக்கு நான் நிற்கிறேன்.
எனது இயக்கத்தில் வெளியான படங்களின் இரண்டாம் பாகத்தை எடுக்க எனக்கு விருப்பமில்லை. அது அவ்வளவுதான். புதிய கதைகளை எவ்வளவு வேண்டுமானாலும் என்னால் உருவாக்க முடியும். ஏனெனில், கிட்டத்தட்ட 300 படங்களுக்கும் மேல் நான் கதை இலாகாவில் பணியாற்றியிருக்கிறேன். இதனால் என்னால் இப்போதும் சிறப்பான கதை, திரைக்கதையை கொடுக்க முடியும். அதனால்தான் நான் இந்தத் திரையுலகத்தில் நீடித்திருக்கிறேன்.
நான் இயக்கிய ‘நான் மகான் அல்ல’ படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியானது. தற்போது இயக்கியுள்ள ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படம், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக்கியிருக்கிறேன். இப்படம் என்னுடைய நேரடி தெலுங்கு படம்.
விஷாலை தவிர பெரிய நடிகர்களை வைத்து நான் இதுவரையிலும் இயக்கவில்லை. காரணம்.. அதற்கான சூழல் வரவில்லை. சூர்யாவிடம் ஒரு கதை சொன்னேன். அந்த கதை அவருக்கு பிடிக்கவில்லை. விஜய்யிடம் ஒரு கதை சொல்லியிருக்கிறேன். சொல்கிறேன் என்று சொல்லியிருக்கார். அவ்வளவுதான். அஜித்திடம் கதை சொல்ல அவரது பி.ஆர்.ஓ.விடம் அனுமதி கேட்டிருக்கிறேன். இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. நீங்கள் பேசி வாங்கிக் கொடுங்கள். படத்தை உடனே துவக்க நான் தயார்… என்றேன்” இவ்வாறு இயக்குநர் சுசீந்திரன்கூறினார்.
‘வெண்ணிலா கபடிக் குழு’ படம் மூலம் தமிழ்ச் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான சுசீந்திரன் அதைத் தொடர்ந்து ‘நான் மகான் அல்ல’, ‘அழகர்சாமியின் குதிரை’, ‘ராஜபாட்டை’, ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘பாண்டிய நாடு’, ‘ஜீவா’, ‘பாயும் புலி’, ‘மாவீரன் கிட்டு’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர். இப்போது பிஸியான இயக்குநர்களில் ஒருவர்.