படப்பிடிப்புக் குழுவினரைத் துரத்தி சுற்றி வளைத்து பொதுமக்கள் அடிக்க வந்தனர் விட்டால் போதும் என படக் குழு தப்பித்து வந்துள்ளனர்.இது பற்றிய விவரம் வருமாறு:
சென்னை போன்ற பெரிய நகரங்களில் நாளுக்குநாள் கொலை, கொள்ளை போன்றவை மட்டுமல்ல செயின் பறிப்பும் அதிகரித்து வருகிறது .தங்கம் தொடர்பான பெண்களுக்கு எதிரான குற்றங்களை மையமாக வைத்து ‘மெட்ரோ’ என்கிற பெயரில் ஒரு படம் உருவாகி வருகிறது.இப்படத்தை எழுதி இயக்குகிறார் ஆனந்த கிருஷ்ணன்.இவர் ஏற்கெனவே ‘ஆள்’ படம் மூலம் ஊடகங்களின் பரவலான கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்றவர்.
இந்த ‘மெட்ரோ’ படத்துக்காக ஒரு செயின் பறிப்பு சம்பவத்தை படமாக்கிக் கொண்டிருந்தது படக்குழு .சென்னை அமைந்தகரை மார்க்கெட் பகுதியில் செயின் பறிப்பு சம்பவம் நடப்பது போன்ற காட்சி .
தளத்தில் நடிகர்கள் நடிக்க காட்சி படமாகிக் கொண்டிருந்தது.பட்டப்பகலில் ஜனசந்தடி மிக்க இடத்தில் இப்படி ஒருசெயின் பறிப்பு சம்பவமா ? என சுற்றிலும் இருந்தவர்கள் துரத்திப்பிடித்து அடிக்கத் துரத்த இது படப்பிடிப்பு என்று சொல்லி,சமாளித்து விட்டால் போதும் என மீட்பதற்குள் பெரும்பாடாகி விட்டதாம்.
இது படத்தில் அந்தக்காட்சி தத்ரூபமாக அமைந்து இருந்ததற்கு ஒரு சான்று எனலாம்.
நம் சென்னை மாநகரம் தமிழகத்தின் நிர்வாக அடிப்படையில் மட்டும் தலைநகரமாக இருக்கவில்லை. குற்றச் செயல்களிலும் தலைநகரமாகத் திகழ்கிறது.
இம் மாநகரத்தில் நடைபெறும் தங்கம் சார்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்களை அடிப்படையாக வைத்து எழுதி எடுக்கப் பட்டுள்ள படம்தான் இந்த ‘மெட்ரோ’ .
சென்னையில் மட்டும் சராசரியாக மாதம் ஆயிரம் செயின் பறிப்புக் குற்றங்கள் நடைபெறுகின்றன என்கிறது ஒரு புள்ளி விவரம்
இது பற்றி இயக்குநர் பேசும் போது,”இப்படித் திருட்டு போகும் நகைகளை எளிதில் சென்று ஏதாவது ஒரு அடகுக் கடையில் விற்றுவிட முடியாது. அதை வாங்க என்று சில குழுக்கள் இருக்கின்றன. இந்த நிழல் உலக வலைப்பின்னல் குழுக்கள் எவ்வளவு திருட்டு நகைகளையும் வாங்கிக் கொள்ளும். அப்படிப்பட்ட கும்பல் திட்டமிட்டு மிகவும் சாதுர்யமாக இயங்கி இந்த வேலைகளைச் செய்து வருகிறது. இப்படிப்பட்ட குழுக்கள் பற்றி அவர்களின் செயல்பாடுகள் பற்றியெல்லாம் விசாரிக்க தொடங்கிய போது தோண்டத் தோண்ட தகவல்கள் கொட்டின. அவை கற்பனையைவிட திகிலும் திருப்பமும் கொண்டவை. ” என்கிறார் இயக்குநர்.
தினமும் விமான நிலையத்தில் தங்க நகைகள் கிலோ கணக்கில் பிடிபடுகிறது ஏன் ? இதன் பின்னுள்ள உலக அரசியல் என்ன?
கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க இந்தியாவுக்கு தங்கம் அனுப்பும் நாடுகள் என்னென்ன? இவை எல்லாம் புரியாத புதிர்களா?
இவை பற்றியெல்லாம் மேலும் கூடுதல் தகவல்கள் பெற செயின் பறிப்பில் பல முறை ஈடுபட்டு சிறை சென்று திருந்திய குற்றவாளிகளையும் சந்தித்து பேசியுள்ளார் இயக்குநர்..
செயின்பறிப்பு, தங்கம் சம்பந்தமான திருட்டுகளின் பின்னுள்ள நெட்ஒர்க், எது? இதில் ஈடுபடும் இன்றைய இளைஞர்களின் மனப்பான்மை சமூக நடத்தை எப்படி உள்ளது ?
எல்லாவற்றையும் அலசுகிறது இந்தப் படம் .
தொடர்ந்து பெண்களைக் குறிவைத்து நகைபறிப்பு நடக்கக் காரணம் , அவர்கள் பல வீனமானவர்கள் என்று கருதப்படுவதால்தான் .அது மட்டுமல்ல சென்னை போன்ற பெருநகரங்களில் தினமும் நகைபறிப்பு நடக்கிறது. பெரும்பாலானவற்றில் துப்பு துலங்குவதே இல்லை. பத்திரிகை செய்தியோடு நின்று விடுகிறது.ஆனாலும் இது ஏதோ சாதாரணமான ஒன்றாக கருதப்படக் காரணம்,இது தொடர்பாக உயிர்ப்பலி ஏற்படுவதில்லை. காயங்களுடன் நின்று விடுகிறது ஏதாவது உயிரிழப்பு ஏற்பட்டால்தான் சமூகத்தில் கவனம் பெறும் என்கிற அவலமும் நம்மிடையே உள்ளது. இப்படித் தகவல்கள் நீள்கின்றன.
படத்தின் கதை வழக்கமான நாயகன் நாயகி வகையில் இல்லாமல் யதார்த்தமான போக்கில் இருக்கும்.
கதையின் நாயகனாக புதுமுகம் சிரிஷ் நடித்துள்ளார் .நாயகியாக மாயா நடித்துள்ளார் இவர் ‘மான்கராத்தே’ படத்தில் தோழியாக நடித்தவர். ‘டார்லிங் 2’ படத்தின் நாயகியும் கூட .
பாபிசிம்ஹா வில்லனாக மிரட்டியுள்ளார் .மேலும் செண்ட்ராயன் துளசி, யோகிபாபு, ‘ரேணிகுண்டா’ நிஷாந்த், சத்யா நடித்துள்ளனர்.
படப்பிடிப்பின் பெரும்பகுதி வடசென்னையில் நடைபெற்றுள்ளது.
படத்துக்கு ஒளிப்பதிவு – என் எஸ். உதயகுமார், இசை- ஜோகன், படத்தொகுப்பு- ரமேஷ்பாரதி, கலை இயக்கம் -மூர்த்தி.
இப்படத்தில் 3 பாடல்கள் உள்ளன. கானாபாலா ‘பூமியாருக்கும் சொந்தமில்லை’ என்கிற ஒரு பாடலைப் பாடியுள்ளார்.
விறு விறுப்பான இந்தப் படத்தை மெட்ரோ புரொடக்ஷன்ஸுடன் இணைந்து E 5 எண்டர் டெய்ன்மெண்ட்ஸ் இந்தியா நிறுவனத்தின் சார்பில் ஜெயகிருஷ்ணன் தயாரித்துள்ளார்.