படம் எடுத்த பாண்டியராஜன் பாடம் நடத்துகிறார் . ஆம் சினிமா எடுப்பது பற்றி ஆன்லைனில் பாடம் நடத்துகிறார் பாண்டியராஜன்!
ஒரு திரைப்படத்தை எடுப்பதற்கு கற்பனை ,படைப்புத் திறமை இருந்தால் மட்டும் போதாது .கதையைக் காட்சிப்படுத்துவது எப்படி, இயக்குவது எப்படி என்கிற தொழில் சார்ந்த அடிப்படை அறிவு தேவை. சினிமா ஆர்வமுள்ளவர்களுக்குக் கைகொடுத்து வழிகாட்ட வந்துள்ளார் நடிகர் இயக்குநர் ஆர்.பாண்டியராஜன்.
இயக்குநராக 10 படங்கள் இயக்கியவரும் நடிகராக 100 படங்களுக்கு மேல் நடித்தவருமான பாண்டியராஜன் புதுமையான ஆன் லைன் வகுப்புகள் மூலம் சொல்லித்தருகிறார்.சினிமா ஈடுபாடு கொண்டவர்களுக்கு சினிமா பற்றி வகுப்பு எடுக்கிறார், அதுவும் ஆன்லைனில் இப்படி ஒரு பயிற்சிப்பட்டறை நடத்துவது முற்றிலும் புதுமைதான்.
கதை உருவாக்கம் முதல் படம் எடுத்து வெளியிடுவது வரை உள்ள நுணுக்கங்களை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்.
படப்பிடிப்புக்கு முந்தைய வேலைகள், திரைக்கதை எழுதுவது, காட்சிகள் அமைத்தல், கோணங்கள் வைத்தல் ,படப்பிடிப்பு இடங்கள் தேர்வு, எடிட்டிங், டப்பிங், ஒலிப்பதிவு என்று வளர்ந்து படப்பிடிப்புக்குப் பிந்தைய வேலைகள், முதல் பிரதி தயாராகி படம் வெளியிடுவது வரை சொல்லித்தருகிறார்
வாரத்தில் சனி ,ஞாயிறு இரு நாட்களிலும் காலை, மாலை என இரு வகுப்புகள் உண்டு .
இம்முயற்சி தமிழ்ச் சினிமாவில் இது வரை யாரும் செய்யாத முயற்சியாகும். பல இடங்களில் சினிமா சார்ந்து விரிவுரை நிகழ்த்த பாண்டியராஜன் போகும் போதெல்லாம் இதை நீங்கள் ஏன் முறையான பயிற்சியாக தரக்கூடாது என்று கேட்டிருக்கிறார்கள் அதன் விளைவுதான் இம்முயற்சி.
இப்பயிற்சியில் சேர எந்தத் கல்வி தகுதியும் தேவையில்லை. ஆர்வம் மட்டுமே தகுதியாகப் பார்க்கப்படும்.
சினிமாவைப் புத்தகங்களை வைத்து மட்டும் கற்றுக் கொள்ள முடியாது .இப்படி திரையுலகில் அனுபவம் பெற்ற ஒருவர் நேரலையில் நடத்தும் பயிற்சிப்பட்டறை பாடங்கள் சினிமாபற்றிய செய்முறை அறிவை ஊட்டும். இந்த நம்பிக்கையில்தான் பாண்டியராஜன். இம்முயற்சியில் இறங்கியுள்ளார்.
.
இதில் திரைஆர்வமுள்ள இளைஞர்கள் rpandiarajan.com என்கிற தளத்தில் சென்றால் பயிற்சி விவரம்,விண்ணப்பம் அனைத்தும் கிடைக்கும்.