நிவின் பாலி, அதிதி பாலன், ஷம்மி திலகன், ஷினே டாம் சக்கோ, இந்திரன்ஸ், விஜயராகவன், மனோஜ் ஓமன், ரம்யா சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள மலையாளப் படம் ‘படவெட்டு’.
இப்படத்தை லிஜூ கிருஷ்ணா எழுதி இயக்கி உள்ளார். ஒளிப்பதிவு தீபக் டி மேனன்.இசை அமைத்துள்ளவர் கோவிந்த் வசந்தா.
படத்தின் கதை என்ன?
படவெட்டு என்றால் யுத்தம் என்று பொருள் படுமாம். அரசியல்வாதிகளும் அதிகாரவர்க்கமும் கூடாரத்தில் ஒட்டகம் நுழைவது போல் மெல்ல தலையை நீட்டிக் கழுத்தை நுழைத்து முழு உடலை நுழைத்து, கூடாரத்தை ஆக்கிரமிப்பது போல் ஏழை மக்களிடம் நைச்சியமாகப் பேசி தங்கள் வலையில் விழ வைத்து ஆக்கிரமிப்பார்கள் என்று எச்சரிக்கை விடுக்கும் ஒரு கதை.
நிவின் பாலி ஒரு தடகள வீரர். ஒரு விபத்தின் மூலம் தனது தனது காலையும் காதலையும் இழக்க நேரிடுகிறது.
கசப்பை மனதில் சுமந்து விரக்தியுடன் மௌனத்தை மொழியாக வெளிப்படுத்தி அமைதியாக வாழ்ந்து வருகிறார்.
அவரது பழைய வீட்டை புதுப்பித்துத் தருவதாக ஒரு அரசியல் கட்சி களம் இறங்கி அப்படியே புதுப்பித்து தந்து அதை விளம்பரப்படுத்துகிறார்கள்.இதில் உள்நோக்கம் இருக்கிறது என்று அவர் சந்தேகப்படுவது பிறகு உண்மையாகிறது .
மலையும் மலை சார்ந்த இடமுமான அந்த ஊர் மக்களின் விவசாய நிலத்தை நயவஞ்சகமாக அபகரிக்க அந்தக் கட்சியினர் திட்டமிட்டு செயலில் இறங்குகிறார்கள்.நிவின் பாலிக்கு வீடு புதுப்பித்துக் கட்டிக் கொடுக்கும் செயலில் இருந்து அந்த வேலையைத் தொடங்குகிறார்கள். அதுவரை அமைதியாக இருந்து வந்த நிவின் பாலி ‘பொறுத்தது போதும் பொங்கி எழு ‘என்று தனது மக்களுக்கான மண்ணை மீட்கக் கொதித்து எழுகிறார் முடிவு என்ன என்பதுதான் ‘படவெட்டு ‘ கதை.
கதை ஏதோ பழையஆக்சன் ஹீரோக்களின் சூத்திரம் போல் தோன்றினாலும் அந்தக் கதையைச் சரியான பின்புலத்துடனும் சரியான உணர்ச்சியுடனும் சொல்லி இருக்கும் விதத்தில் இயக்குநர் லிஜூ கிருஷ்ணா ஒளிர்கிறார்.
மக்கள் நலத் திட்டங்கள் என்கிற பெயரில் கவர்ச்சியான திட்டங்களால் மக்களை எப்படி அதிகார வர்க்கம் ஏமாற்றிச் சூறையாடுகிறது என்பதைச் சொல்லாமல் சொல்லி எச்சரித்துள்ளார்.இதை அவரவர் அதிகார வர்க்க அரசியலுடன் பொருத்திப் பார்த்து ரசிக்க முடியும்.
இதில் நாயகனாக நடித்துள்ள நிவின் பாலி தனது முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.வலிகளைச் சுமந்து வாழ்க்கை இழந்து தவிக்கும் போதும் ஆவேசப்பட்டு மக்களுக்காகப் போராடும் போதும் என இருவேறு நிறங்களில் தனது நடிப்பைக் காட்டியுள்ளார் .
அதிதி பாலன்தான் நாயகி என்றாலும் வழக்கமான காதல் காட்சிகளோ, டூயட் பாடல் காட்சிகளோ இல்லை.மெல்லிய உடல் மொழியிலேயே உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.
அதேபோல் மறைந்த நடிகர் திலகனின் மகன் ஷம்மி திலகனும் அரசியல்வாதியாக வந்து குறிப்பிடத் தகுந்த வகையில் வில்லத்தனம் காட்டியுள்ளார்.
நிவின் பாலியின் அத்தையாக நடித்துள்ள ரம்யா சுரேஷ், தினே டாம் சக்கோ, மனோஜ் ஓமன் போன்றவர்களும் தங்கள் நடிப்பின் மூலம் கவனம் பெறுகிறார்கள்.
தீபக் டி மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார் .கேரளத்தின் மண்ணின் அழகைக் கண் முன் நிறுத்துகிறார்.எதார்த்தமான காட்சிகள் படத்திற்கு பலமாக உள்ளன.
கோவிந்த் வசந்தாவின் இனிமையான இசையில் பாடல்கள் எல்லாமே கேட்கும் ரகம். செயற்கைப் பூச்சுகள் இல்லாமல் நகரும் கதையில் சபிக் முகமது அலியின் படத்தொகுப்பு சிறப்பு.
அதிகார வர்க்கமும் கார்ப்பரேட் நிறுவனங்களும் நம் மண்ணை அபகரிப்பு செய்யும் ஆபத்துள்ள இந்தச் சூழலில் ”நம் மண் ,நம் வீடு, நம் நாடு ”என்று படம் முடிவடைகிறது.
படம் மலையாளத்தில் எடுக்கப்பட்டிருந்தாலும் பார்க்கும் அனைவருக்கும் புரியும் வகையில் காட்சிகள் உள்ளன.
சுருக்கமாகச் சொன்னால் மண்ணுரிமைக்காகப் போராடும் மக்களின் கதை தான் இது எனலாம். சற்றே பிரச்சார தொனி வெளிப்பட்டாலும் இது பிரதேசம் கடந்து அனைவருக்கும் விழிப்புணர்வூட்டும் படமாக அமைந்துள்ளது .