படிப்பது கடமை ; சாதிப்பதுதான் பெருமை : ஜெயம் ரவி !
வில் அம்பு திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் பாடல் வெளியீட்டு விழா இன்று லயோலா இன்ஜினீயரிங் கல்லூரியில் நடந்து வரும் இன்ஜினியா கலை விழாவில் நடந்தது. இவ்விழாவில் படத்தின் தயாரிப்பாளர்கள் திரு. சுசீந்திரன் , தாய் சரவணன் , இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் , படத்தின் நாயகர்கள் ஸ்ரீ , ஹரிஷ் கல்யாண் நாயகி ஸ்ருஷ்டி டாங்கே இசையமைப்பாளர் நவீன் ஆகியோர் கலந்து கொண்டனர் . இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாடலை வெளியிட்டார் நடிகர் ஜெயம் ரவி.
நடிகர் ஜெயம் ரவி பேசியதாவது” நானும் சில வருடங்களுக்கு முன்பு இந்த கல்லூரியில் மாணவனாக படித்துள்ளேன் , இதே பெட்ரம் ஹாலில் நிறைய நிகழ்ச்சியில் நான் என்னுடைய திறமையை வெளிப்படுத்தியுள்ளேன். இப்போது நான் உங்கள் சீனியராக இங்கே நிற்கிறேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது .
உங்களிடம் நிறைய பேசலாம் என்று தான் வந்தேன் ஆனால் உங்கள் ஆரவாரத்தை பார்த்தவுடன் எனக்கு என்ன பேச வந்தோம் என்றே மறந்துவிட்டது. நம்முடைய வாழ்க்கையில் இரண்டு முறை மகிழ்ச்சியான தருணம் வரும் ஒன்று நாம் பிறக்கும் போது நம்மை சார்ந்தவர்களுக்கு வரும். மற்றொன்று நாம் எதற்காக பிறந்தோம் என்று நாம் அறியும் போதும் வரும் .
உங்களைப் போல் இங்கே அமர்ந்து நானும் கைதட்டி ஆரவாரம் செய்திருக்கிறேன் , நாம் கல்லூரிக்கு வந்து படிப்பில் சாதனை படைப்பது பெரிய விஷயமல்ல படிப்பது நம்முடைய கடமை. அதை தாண்டி நாம் என்ன சாதித்தோம் என்பது தான் நமக்கு பெருமை .
இயக்குநர் சுசீந்திரனை போல் நட்புக்கு பெரிய மரியாதை கொடுப்பவன் நான். இந்த படத்தின் இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் , படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் சுசீந்திரனின் நெருங்கிய நண்பர் , இருவரும் பதினான்கு வருடங்களாக ஒரே அறையில் தங்கி இருந்தனர். அந்த நட்பை மறக்காமல் இயக்குநர் சுசீந்திரன் தன் நண்பனுக்காக இந்த படத்தை தயாரித்துள்ளார். இதை போன்ற நட்பை நீங்கள் அனைவரும் கல்லூரிக் காலத்தில் தவறவிட்டுவிடக் கூடாது. இயக்குநர் சுசீந்திரனின் மேல் உள்ள மரியாதையின் காரணமாக தான் நான் இந்த விழாவுக்கு வருகை தந்தேன்.
இந்த படத்தில் நடித்துள்ள ஸ்ரீயின் நடிப்பை ஓநாயும் ஆட்டுகுட்டியும் படத்தில் நான் நிறைய ரசித்தேன். அவருக்கு வாழ்த்துக்கள். படத்துக்கு இசையமைத்துள்ள நவீன் பாடல்கள் அருமையாக உருவாக்கியுள்ளார். இந்த படத்தின் பாடல்களை பெயர்பெற்ற இசையமைப்பாளர்களை கொண்டு உருவாக்கியுள்ளார் நவீன். இது ஒரு நல்ல முயற்சி. இதை போன்ற முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெறும் ”என்று கூறி நடிகர் ஜெயம் ரவி வாழ்த்தினார் .