கௌதமன்,சமுத்திரக்கனி, பூஜிதா ,மன்சூரலி கான், பாகுபலி பிரபாகர், இளவரசு, தீனா, , சரண்யா பொன்வண்ணன்,வேதாளம் கபீர்,மதுசூதனன், நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய்,ஆடுகளம் நரேன்,ஏ எல் அழகப்பன்,தமிழ் கௌதமன், ரெடின் கிங்ஸ்லி நடித்துள்ளனர்.
ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.பின்னணி இசை சாம் சி எஸ். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜாமுகமது படத்தொகுப்பு செய்துள்ளார், சண்டைக் காட்சிகள் – ஸ்டண்ட் சில்வா,நடனம் -தினேஷ். தயாரிப்பு -விகே புரொடக்ஷன்ஸ்.
படையாண்ட மாவீரன் படத்தைப்பற்றி இயக்குநர் வ. கௌதமன் கூறும்போது,
“வீரப்பன் வரலாற்றை ‘சந்தனக்காடு’ மூலம் எடுத்தேன். அடுத்து முந்திரிக்காட்டு வரலாற்றை எடுக்க விரும்பினேன். 12 ஆண்டுகளுக்குப் பிறகு போராடி ‘படையாண்ட மாவீரா’வைக் கொண்டு வருகிறேன். இந்தப் படம் பேரதிர்வை ஏற்படுத்தும் என திடமாக நம்புகிறேன். பெண் இனத்தின் உரிமைக்காகவும், இந்த மண்ணிற்காகவும் போராடிய ஒருவரின் உண்மை வரலாறுதான் இந்தப் படம். முந்திரிக்காட்டில் ஈரமும் வீரமும் அறமும் சுமந்து நின்ற ஒருவரின் வரலாற்றை அழுத்தம் திருத்தமாகவும், கமர்ஷியல் கலந்தும் சொல்லியிருக்கிறேன். அத்துமீறும் கூட்டத்தை அடித்து அந்த மண்ணுக்குள்ளாகவே புதைத்த ஒரு வரலாறு இது. அதிகாரவர்க்கத்தை எதிர்த்து நின்று தவிடுபொடியாக்கிய ஒரு நாயகனின் கதை” என்று படத்தைப் பற்றி இயக்குநர் கௌதமன் கூறிவந்தார்.
பல்வேறு தடைகளைக் கடந்து படம் இன்று வெளியாகிறது. படம் எப்படி இருக்கிறது? என்று பார்ப்போம்.
காடுவெட்டி குரு என்று அழைக்கப்பட்டு வன்னியர் சங்கத்தில் முக்கிய தலைவராக இருந்தவர் குரு. அவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகி உள்ள திரைப்படம் தான் இந்த ‘படையாண்ட மாவீரா’.குருவை நேரடியாக அதே பெயரில் கதை நாயகனாக வைத்து உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் வ.கெளதமன்.
அரியலூர் மாவட்டத்தில் மதுரா கிராமப் பகுதிகளில் உள்ள நில வளத்தைச் சுரண்டும் கார்ப்பரேட்டுகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்று அப்பகுதி மக்களின் நம்பிக்கைக்குரியவராக மதிக்கப்படுகிறார் குரு. அவரது தாத்தா காலத்தில் இருந்து சமூகத்துக்காக உழைக்கும் குடும்பமாக இருக்கிறார்கள். அவரது தந்தையும் அப்படியே இருக்கிறார். குருவின் தந்தை கொலை செய்யப்படுகிறார்.தனது தந்தையைக் கொன்றவரை மகன் குரு பழி தீர்க்கிறார்.அதற்குப் பிறகு அந்தப் பகுதியில் பெண்களுக்கு எதிரான குற்றம், நில மோசடிகள், பண முதலைகளின் ஆக்கிரமிப்பு போன்ற எதற்கும் முன்னால் வந்து நின்று தட்டிக் கேட்கிறார்.குற்றவாளிகளைத் துவம்சம் செய்கிறார். சட்டப் போராட்டம் போராடி வெற்றியும் பெறுகிறார். எனவே அப்பகுதி மக்களின் பாதுகாவலனாக மாறுகிறார். அவருக்கு உயிரையே கொடுக்கும் ஒரு கூட்டம் உருவாகிறது. இப்படிப்பட்ட குருவை எதிர்ப்பதற்கு உயர் போலீஸ் அதிகாரிகள், கார்ப்பரேட் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு ஏராளமான சதிவேலைகள் செய்கிறார்கள்.ஏன் அவரைக் கொல்வதற்கே சதி செய்கிறார்கள். முதலில் சமாதானமாக பேசி ஆசை வார்த்தை பேசியவர்கள், பிறகு நேரடியாகக் களத்தில் இறங்குகிறார்கள். அவற்றை எல்லாம் எப்படி குரு சமாளித்து தான் ஒரு தலைவனாக நிற்கிறார் என்பதைச் சொல்கின்ற கதை இது.
மக்களை வீட்டைக் காலி செய்ய மிரட்டப்படும் போலீசின் அட்டூழியத்துடன் படம் தொடங்குகிறது .போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள்கிற போலீஸ் இன்ஸ்பெக்டரைத் தாக்கி அந்த ஸ்டேஷனையே அதகளம் செய்யும் காட்சியுடன் கதாநாயகன் குரு அறிமுகம் ஆகிறார்.குரு வந்துட்டு போனார் என்று அதிகார வட்டத்தில் பரபரப்பு பரவுகிறது.அந்த அளவிற்கு அவர் சிம்ம சொப்பனமாக இருக்கிறார்.யார் அந்த குரு என்று முன் கதை விரிகிறது.மக்களின் ஒற்றுமைக்காகப் போராடிய தாத்தா காலத்தில் இருந்து, அனைவரும் படிக்க வேண்டும் என்று பள்ளிக்கூடம் கட்டும் அப்பா கதை வரை செல்கிறது.தந்தையின் கொலைக்குப் பழி தீர்த்து கதை நாயகனாக வெளிப்படும் வரை காட்சிகள் செல்கின்றன.
வளர்ந்து குருவான பிறகு பாட்டாளி மக்கள் கட்சியின் தளபதியாக கட்சித் தலைமையிடம் நம்பிக்கை பெற்று விளங்குகிறார்.அதற்குப் பிறகு அவர் சந்திக்கும் போராட்டங்களை,எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களைப் பேசுகிறது படம்.
விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி பகுதிகளில் நடக்கும் காட்சிகள் அந்த மண்ணை அசலாகப் படப் பதிவு செய்துள்ளது.அந்த முந்திரிக்காட்டின் பின்னணியே அடர்ந்த பசுமை நடுவே ஒளிந்திருக்கும் மக்கள் வாழ்க்கையை மட்டுமல்ல மர்மங்களையும் காட்டுகிறது.
படத்தில் படையாண்டமாவீரா பத்திரத்தில் குருவாக நடித்துள்ளார் இயக்குநர் கௌதமன்.இளைய குருவாக அவரது மகன் தமிழ் கெளதமன் நடித்துள்ளார்.ஒரு தளபதிக்குரிய தைரியமான குணத்துடன் முறைக்கும் விழிகள் விரைத்த உடம்பு என்று அந்தக் கதாபாத்திரத்தைக் கண் முன் நிறுத்துகிறார் இயக்குநர் கௌதமன்.நேர்மை உண்மை தரும் துணிவை உடல் மொழியில் காட்டியுள்ளார்.சிவந்த கண்களுடன் அவர் ஆவேசத்துடன் சண்டை போடும் காட்சிகளில் விஜயகாந்த் போலத் தெரிகிறார்.இளம் வயது காடுவெட்டி குருவாக திரையில் தோன்றும் அறிமுக நடிகர் தமிழ் கௌதமனின் நடிப்பும் சிறப்பு.
கிராமத்தில் பிரம்மாண்ட காளையை வைத்துப் பராமரிக்கும் துடுக்குப் பெண்ணாக வருகிறார் பூஜிதா. நாயகன் கௌதமனுடன் கலர் கலராக உடை அணிந்து ஆடல் பாடல் என்று வந்து சில காட்சிகளோடு சென்றுவிடுகிறார்.குருவின் தாயாக வரும் சரண்யா பொன்வண்ணன் ஒரு வீரத்தாயைக் கண் முன் நிறுத்துகிறார்.கணவர் கொலையுண்டதும் அவர் பதறித் தவிப்பதும் சாபம் விடுவதும் கொலையாளி மன்னிப்பு கேட்கும் போது அதை நிராகரிப்பதும் என அவர் ஆவேசம் காட்டுகிறார்.
ஆடுகளம் நரேன் ரவிச்சந்திரன் என்கிற பாத்திரத்தில் வருகிறார். சமுத்திரக்கனியைக் கொலை செய்து விடுகிறார் .பிறகு கொலையாகிறார்.
குருவின் தந்தையாக வரும் சமுத்திரகனி குறைந்த எண்ணிக்கையிலான காட்சிகளில் இருந்தாலும் மனதில் பதிந்து விடுகிறார்.
எரிச்சலூட்டும் வில்லன் பாத்திரத்தில் படங்களில் வரும் மன்சூர் அலிகான் இதில் குருவுக்கு விசுவாசமுள்ள ஒரு மனிதராக நடித்துள்ளார்.அவரது பாத்திரம் நன்றாக அமைக்கப்பட்டுள்ளது.அதேபோல் ரெடின் கிங்ஸ்லியும் மாவீரனுடன் கூடவே வருகிற பாத்திரத்தில் வந்து பதிகிறார்.
டிஎஸ்பி ராம்குமாராக வரும் பாகுபலி பிரபாகர் ஆரம்பம் முதல் இறுதி வரை இரக்கமற்ற கண்களோடு முறைப்போடு வந்து வில்லத்தனம் செய்கிறார்.கார்ப்பரேட் முதலாளியாக மதுசூதனராவ் வருகிறார்.மனசாட்சி உள்ள போலீஸ்காரராக வரும் இளவரசு,நீதிபதியாக வரும் தலைவாசல் விஜய் இப்படித் துணைப் பாத்திரங்களில் நடித்துள்ள அனைவருமே கவனம் பெறுகிறார்கள்.
படத்தில் ஒளிப்பதிவு அந்த நடு நாட்டுக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது.ஓடி ஓடி உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன் .ஜி வி பிரகாஷ் குமார் இசையில் அனைத்து பாடல்களும் புரிகிற வரிகளோடு சிறப்பாக உள்ளன.கவிப்பேரரசு வைரமுத்து எழுத்தில் தெளிவான வரிகளோடு சரியான அமைவிடத்தோடு பாடல்கள் அமைந்துள்ளன. 
பொதுவாக வட தமிழகத்தில் வன்னியர் பட்டியலின மக்களின் மோதல்கள் ஏற்படுவதையும் அதற்குக் காரணமானவர்கள் யார் என்பதையும் படம் சொல்கிறது.சமூகத்தின் மோதல்கள் ஏற்படுத்தி குளிர்காயும் நரிக் கூட்டத்தை பற்றியும் படம் பேசுகிறது. சாதிகளை மறந்து தமிழராக ஒன்றிணைவோம் என்கிற தமிழ் தேசியக் குரலும் இப்படத்தில் ஒலிக்கிறது.
படத்தில் கூர்மையான வசனங்கள் ஆங்காங்கே தெறிக்கின்றன.’நெருப்புச் சட்டியோடு பிறந்தீர்களாமே என்ற போது நெருப்பாகவே பிறந்தோம்’ என்பதும்,’ஊருக்குள்ள திருட வந்தவனையே சும்மா விட மாட்டோம் ஊரையே திருட வந்தால் விடுவோமா? ‘ , ’தமிழன் திருப்பி அடித்த மூன்றே இடம் சந்தனக்காடு, முந்திரிக்காடு, வன்னிக்காடு’ போன்ற வசனங்களும் உண்டு.
தமிழ் மரபின் கலாச்சாரம் பக்தி ஆன்மீகம் தெய்வ நம்பிக்கை போன்ற அனைத்தும் வெளிப்படுத்தும் படியான காட்சிகள் உள்ளன.
பொதுவாக பயோபிக் எனப்படும் இப்படி வாழ்க்கை வரலாற்றை எடுக்கும் போது ஒரு ஆவணத்தன்மை வந்து விடும். ஆனால் ஒரு துளியும் அந்த ஆவணத்தன்மை எட்டிப் பார்த்து விடாதபடி முழுக்க முழுக்க வணிக ரீதியில் வெற்றி பெறும் வகையில் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் கௌதமன்.அந்த முயற்சிக்கு வெற்றி கிட்டும் என்றே கூறலாம்.


