வரலட்சுமி சரத்குமார், ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்ஷா நடிப்பில், சுந்தர் பாலு தயாரித்து இயக்கியிருக்கும் படம் “கன்னித்தீவு”. இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர், இயக்குநர் தியாகராஜன், தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் பேரரசு, நடிகர், தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், மக்கள் தொடர்பாளர் விஜயமுரளி, தயாரிப்பாளர் சஞ்சய் லால்வானி ஆகியோருடன் நடிகர் ராஜ்குமார், நடிகை சுபிக்ஷா, இயக்குநர் சுந்தர் பாலு, இசையமைப்பாளர் ராஜ் பிரதாப், ஒளிப்பதிவாளர் சிட்டி பாபு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
இயக்குநர், தயாரிப்பாளர் தியாகராஜன் பேசும்போது, ‘தினமும் செய்தித் தாளை எடுத்ததும் படிக்கும் முதல் விஷயம் கன்னித்தீவு. இதுவரை யாரும் இந்த தலைப்பை வைத்தது இல்லை. அது ஏன் என்று இதுநாள் வரை எனக்கு தெரியவில்லை. படத்தின் தலைப்பிலேயே இயக்குனர் வெற்றியடைந்து விட்டார். அனைவரையும் ஈர்க்கும் பெயரை கொண்ட கன்னித்தீவு வெற்றியடைய வாழ்த்துக்கள்’ என்றார்.
இயக்குநர், தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் பேசும்போது, ‘13 ஆண்டுகளாக என்னை இந்த துறையில் ஆதரித்து வரும் அனைவருக்கும் நன்றி. ரூ.1000 கோடி பட்ஜெட்டில் படம் எடுப்பது சரியான வழிமுறை கிடையாது. இப்படியே சென்றால் இதுபோன்ற படங்கள் விரைவில் தோல்வியடைந்து விடும். படத்திற்கு பட்ஜெட்டை விட கதை தான் முக்கியம். தயாரிப்பாளர் கே. ராஜன் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கூறினார். இப்போது மஹா மற்றும் மாமனிதன் படங்களை வெளியிடுகிறேன். ஆகையால், திரைப்படங்களை என்னிடம் தாருங்கள் நான் வெளியிட்டு தருகிறேன்.
மற்ற மாநில மொழி படங்கள் 30% மட்டும் தான் வர வேண்டும். பான் இந்தியா படம் என்கிறார்கள். அப்போது அதை ஓடிடியில் வெளியிடுங்கள். திரையரங்கம் நிலைக்க வேண்டுமென்றால் சிறிய படங்கள் அதிகம் வர வேண்டும். அந்த திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாக வேண்டும். கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட எத்தனை படங்கள் வெற்றியடைந்துள்ளது என்று கூறுங்கள். புது இயக்குனர்களுக்கு கதைகளை மையப்படுத்தி திரைப்படம் இயக்குங்கள். இது என்னுடைய வேண்டுகோள்’ என்றார்.
தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, ‘ராமநாராயணன் 28 நாட்களில் படம் எடுப்பார். 100 நாட்கள் ஓடும். ஆனால், இப்போது 280 நாட்கள் படம் எடுக்கிறார்கள் 20 நாட்கள் கூட ஓடுவது இல்லை. ஏழைகளுக்கு உதவுங்கள். நான் என்னால் இயன்றதை இயலாதவர்களுக்கு உதவி செய்து வருகிறேன். புகழுக்காக அல்ல; புண்ணியத்திற்காக! எப்போதும் மனதை சுத்தமாக வைத்திருங்கள்.
பெண்களை சிலர் பாலியல் வன்கொடுமை செய்து வருகிறார்கள். இதற்கு காரணம் மதுபானம் தான். அனைத்து பெண்களும் சேர்ந்து தான் மதுவை ஒழிக்க வேண்டும். 4 பெண்களை வைத்து கன்னித்தீவு படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் சுந்தர் பாலு. இரண்டு பாடல்களும் நன்றாக இருந்தது. இசையும், பின்னணி இசையும் நன்றாக இருந்தது. டிரைலரைப் பார்க்கும் போது ஆங்கில படம் போன்று இருக்கிறது. இப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்’ என்றார்.
இயக்குநர் பேரரசு பேசும்போது, ‘கன்னித்தீவு போல கச்சத்தீவும் எப்போதும் முடியும் என்று தெரியவில்லை. சில படங்களின் டிரைலரைப் பார்த்தால் இது தான் கதை என்று யூகிக்க முடியும். ஆனால், இப்படத்தின் டிரைலரைப் பார்க்கும் போது கதையை புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு இருக்கிறது. இதிலேயே இயக்குரின் புத்திசாலித்தனம் தெரிகிறது. பெண் என்றால் மாபெரும் சக்தி. இப்படத்தில் 4 பெண்கள் நடித்திருக்கிறார்கள். நிச்சயம் இப்படம் வெற்றியடையும்’ என்றார்.
இயக்குநர் சுந்தர் பாலு பேசும்போது, ‘1999 ஆம் ஆண்டு தியாகராஜன் சாரிடம் நான் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறேன். அப்போது அவர் ஒரு விஷயம் கூறினார். அது, சினிமாவில் தெரியும் என்று சொல்வதைவிட தெரியாது என்று கூறுவதில் தான் மரியாதை அதிகம் என்று கூறினார். அதை என் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். என்னுடைய முதல் படம் கர்ஜனை. திரிஷா நடிப்பில் உருவான இப்படம் இன்னும் வெளியாகவில்லை. முதலில் இயக்குனராகி விட்டு பின்பு தான் தயாரிப்பாளார் ஆனேன். கன்னித்தீவு படத்தை தயாரித்து இயக்கி இருக்கிறேன். குறைவான நாட்களில் இப்படத்தை இயக்கிருக்கிறேன். இப்படம் துவங்குவதற்கு முக்கிய காரணம் நீல்கிரிஸ் முருகன் சார் தான். கன்னித்தீவு இப்படம் வெற்றியடைய வேண்டுமென்று வாழ்த்திய அனைவருக்கும் நன்றி’ என்றார்.
நடிகை சுபிக்ஷா பேசும்போது, ‘கன்னித்தீவு படத்தில் நடித்தது மட்டுமல்லாமல் ஆக்ஷன், பாடல் பாடுவது என்று ஒரு கதாநாயகன் செய்யும் அனைத்தையும் கதாநாயகிகளான நாங்கள் செய்திருக்கிறோம். திரைப்படம் சிறப்பாக உருவாகி இருக்கிறது. அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இயக்குநர் சுந்தர் பாலு சார் இயக்கி இருக்கிறார்’ என்றார்.