ஏ4 மீடியா வொர்க்ஸ் டாக்டர் வீரபாண்டியன் மற்றும் டாக்டர் டெய்ஸி வீரபாண்டியன் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘துணிகரம்’ அறிமுக இயக்குநர் பாலசுதன் எழுதி, இயக்கியிருக்கும் இந்த படத்தில் நடிகர்கள் வினோத், பரணி, டென்னிஸ், நடிகைகள் செம்மலர் அன்னம், சரண்யா ரவிச்சந்திரன் காயத்ரி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மெய்யேந்திரன் கெம்புராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஷான் கோகுல் இசையமைத்திருக்கிறார். பின்னணியிசையை தனுஷ் மேனன் கவனிக்க, படத்தொகுப்பை என். பிரகாஷ் கையாண்டிருக்கிறார். க்ரைம் திரில்லர் ஜானரில் தயாராகியிருக்கும் இந்த சிறிய பட்ஜெட் படத்தை தமிழகம் முழுவதும் மே 6ஆம் தேதியன்று ஆக்ஷன் ரியாக்ஷன் விநியோக நிறுவனம் சார்பில் விநியோகஸ்தர் ஜெனிஷ் வெளியிடுகிறார். இதனையடுத்து படத்தின் முன்னோட்ட வெளியீடும், ஊடகவியலாளர் சந்திப்பும் சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் அபி சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.
நடிகர் அபி சரவணன் பேசுகையில்,“ குழந்தைகள் கடத்தலை மையப்படுத்தி ஒருநாள் இரவில் நடைபெறும் கதை என்று இயக்குநர் என்னிடம் விவரித்தார். இம்மாதிரியான திரைப்படங்களின் வருகை மிகக் குறைவு. அதனால் இந்த திரைப்படத்தை பார்க்கும் போது பெற்றோர்களுக்கு நல்லதொரு அனுபவ பாடம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். இன்றைய சூழலில் ஒவ்வொரு பெற்றோரும், தங்களது குழந்தை வீட்டிலிருந்து வெளியே சென்று, மீண்டும் வீடு திரும்பும் வரை பதற்றத்துடனேயே இருக்கிறார்கள். இதனை மையப்படுத்திய திரைப்படம் என்பதால், இதற்கு பார்வையாளர்களிடையே ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன். இதற்காக இயக்குநரை மனதார பாராட்ட வேண்டும். ஏனெனில் திரைப்பட ஊடகத்தை அனைவரும் வணிக நோக்கத்தில் அணுகும்போது, சமூகத்திற்கு தேவையான கருத்தை பதிவு செய்ய வேண்டும் என இயக்குநர் தேர்ந்தெடுத்திருப்பதால் முதலில் அவரை பாராட்ட வேண்டும். குழந்தைகளை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும். அதையும் கடந்து ஏதேனும் ஒரு நெருக்கடியான சூழல் ஏற்படும்போது, அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? என்ற விளக்கத்தையும் இந்த படத்தில் விவரித்திருக்கிறார்கள்.

கொரோனாப் பாதிப்பிற்கு பிறகு இது போன்ற சிறிய பட்ஜெட் படங்கள் தற்போது வெளியாகிறது. பொதுவாக கொரோனாத் தொற்று பாதிப்பிற்கு பிறகு திரையுலகம் செழிப்பாக இருக்கிறது. இது போன்ற சிறிய பட்ஜெட்டில் உருவான தரமான படத்தை வெளியிடும் என்னுடைய விநியோகஸ்தர் நண்பர் ஜெனிஷ் அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறிய பட்ஜெட் படங்களை வெளியிடுவது இன்றைய சூழலில் மிகவும் சவாலானது. படம் வெளியிடுவதற்கான சில கட்டண நடைமுறைகளை மேற்கொண்ட பிறகும், திரையரங்குகளில் வெளியிடுவது என்பது சிக்கலானதாக இருக்கிறது. ஏனெனில் சிறிய பட்ஜெட் படங்களை திரையரங்குகள் வெளியிடும்போது அவர்கள் விதிக்கும் நிபந்தனை கடினமானதாக இருக்கிறது. படங்களை விளம்பரப்படுத்துவதிலும் பாரபட்சமான அணுகுமுறை இருக்கிறது. இதனால் தயாரிப்பாளர் சங்கத்திற்கு பணிவான வேண்டுகோளை முன்வைக்கிறேன். ‘துணிகரம்’ போன்ற சிறிய பட்ஜெட் படங்களை வெளியிடுவதற்கும், அப்படங்கள் வெளியான முதல் மூன்று நாட்களில் விளம்பரப்படுத்துவதற்கும் எளிமையான வழிமுறையை உருவாக்கி, உதவ வேண்டும்.
மேலும் சிறிய பட்ஜெட் படங்களை இயக்கும் இயக்குநர்களும் தங்களுடைய கனவுகளை சுமந்து கொண்டு, சில சமரசங்களுக்கு உட்பட்டுதான் படைப்புகளை வழங்குகிறார்கள். அவர்களுக்கு ஊடகங்களும், திரை உலகமும் உதவிட வேண்டும். திரைப்பட விமர்சகர்களும் நட்சத்திர நடிகர்களின் படங்களை போல் சிறிய பட்ஜெட் படங்களையும் நேர்மறையாக விமர்சித்து சிறிய பட்ஜெட் படங்களின் தரத்தை மேம்படுத்த வேண்டும்.

‘துணிகரம்’ போன்ற சிறிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு போதிய திரையரங்குகளை ஒதுக்குங்கள். மக்களுக்கு சௌகரியமான காட்சி நேரங்களையும் ஒதுக்கிட வேண்டும். குழந்தை கடத்தலையும், குழந்தையின் பாதுகாப்பையும் பெற்றோர்களுக்கு உணர்த்தும் முக்கியமான படைப்பாக உருவாகி இருக்கும் ‘துணிகரம்’ படத்திற்கு பேராதரவு தாருங்கள்.” என்றார்.
இயக்குநர் பால சுதன் பேசுகையில்,” துணிகரம்’படத்தில் ஹீரோ, ஹீரோயின் என்று யாருமில்லை. முதன்மையான கதாபாத்திரம், முக்கியமான கதாபாத்திரம் என கதாபாத்திரங்கள்தான் இடம்பெற்றிருக்கிறது. ஆம்புலன்சில் நடைபெறும் குழந்தைகள் கடத்தலை மையப்படுத்தி ஒரு இரவில் நடைபெறும் கதையாக ‘துணிகரம்’ உருவாகி இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது தோன்றிய தலைப்புதான் இது. பொருத்தமானதாக இருந்ததால் இதனையே படத்தின் தலைப்பாக சூட்டினோம். சிவலோகநாதன் சிவ கணேஷ், திருப்பூர் சம்பத் ஆகிய இருவரும் தான் இந்த படத்தின் கதைக் கரு உருவாவதற்கு மூல காரணமாக இருந்தனர். அவர்களுக்கும் இந்த படத்தில் நன்றி தெரிவித்திருக்கிறேன்.
சென்னை பல்லடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 45 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பின் போது ஒத்துழைப்பு வழங்கிய காவல்துறையினருக்கும், வனத்துறையினருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். புதுமுகங்கள், சிறிய பட்ஜெட் என்றாலும் திரைக்கதையை நேர்த்தியாக படமாக்கி இருக்கிறோம்.”என்றார்.
இசையமைப்பாளர் ஷான் கோகுல் பேசுகையில்,“ இந்த படத்தில் மூன்று பாடல்கள் இடம் பெற்றிருக்கிறது. இதில் இரண்டு பாடல்களை நான் எழுதி இருக்கிறேன், ஒரு பாடலை பாடலாசிரியர் கு. கார்த்திக் எழுதியிருக்கிறார். படத்தின் பின்னணி இசையில் தனுஷ் மேனன் பணியாற்றியிருக்கிறார். மூன்றாண்டு கால காத்திருப்புக்குப் பின் வெளியாகும் இந்த படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள்.” என்றார்.
படத்தை வெளியிடும் விநியோகஸ்தர் ஜெனிஷ் பேசுகையில்,” எங்கள் நிறுவனம் சார்பில் சிறிய பட்ஜெட் படங்களில் தரமான படைப்புகளை தேர்வு செய்து வெளியிட்டு வருகிறோம். இந்த வகையில் இந்தியாவில் முதன்முறையாக ஆம்புலன்சிற்குள் நடைபெறும் சர்வைவல் திரில்லர் என்ற ஜானரில் தயாராகியிருக்கும் ‘துணிகரம்’ திரைப் படத்தை வெளியிடுகிறோம். தமிழகம் முழுவதும் மே 6ஆம் தேதியன்று 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். குழந்தைகள் கடத்தலை மையப்படுத்திய திரைப்படமாக இருந்தாலும், கமர்சியல் அம்சங்கள் இருப்பதால் இந்த படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறேன்.” என்றார்.