‘பணி’ திரைப்பட விமர்சனம்

ஜோஜு ஜார்ஜ், சாகர் சூர்யா, ஜுனைஸ் வி.பி., பாபி குரியன், அபிநயா, அபயா ஹிரண்மயி,சீமா, சாந்தினி ஸ்ரீதரன், பிரசாந்த் அலெக்சாண்டர், சுஜித் சங்கர், ரினோஷ் ஜார்ஜ்  ,ரஞ்சித் வேலாயுதன், அனூப் கிருஷ்ணன், ஜெயராஜ் வாரியார், பாபு நம்பூதிரி ,லங்கா லட்சுமி நடித்துள்ளனர்.மலையாளத்தில் முக்கிய நடிகராக மட்டும் இருந்த ஜோஜு ஜார்ஜ் முதன் முறையாக இயக்கி நடித்திருக்கும் இப்படத்திற்கு விஷ்ணு விஜய், சாம் சி. எஸ் இசையமைத்துள்ளனர்.ஒளிப்பதிவு வேணு, ஜின்டோ ஜார்ஜ்.எடிட்டிங் மனு ஆண்டனி. அப்பு பாத்து பாப்பு புரொடக்ஷன் ஹவுஸ் மற்றும் ஏடிஎஸ் ஸ்டுடியோஸ்  சார்பில், தயாரிப்பாளர்கள் எம். ரியாஸ் ஆடம், சிஜோ வடக்கன் தயாரித்துள்ளனர்.

திரில்லராக உருவாகியுள்ள இப்படம் மலையாளத்தில் கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.இப்போது தமிழில் வந்துள்ளது.தமிழகமெங்கும் ஶ்ரீ கோகுலம் மூவிஸ் வெளியிட்டுள்ளது.

எழில் கொஞ்சும் கேரளாவின் திருச்சூர் பகுதி. அங்கே ஜோஜு ஜார்ஜ் மற்றும் அவரது நண்பர்கள் ரியல் எஸ்டேட் புள்ளிகள் மட்டுமல்ல கட்டப்பஞ்சாயத்தில் பிரபலமாக உளனர். அதனால் அந்தப் பகுதியில் அவர்களுக்கு மரியாதை மட்டுமல்ல அவர்கள் மீது பல வழக்குகளும் உள்ளன. ஆனாலும் மேலிட செல்வாக்கால் அவர்கள் தங்கள் குற்றச் செயல்களில் இருந்து தப்பித்து வருகிறார்கள்.இது ஒரு பக்கம் என்றால் மறுபக்கம்,இரு இளைஞர்கள் திருச்சூர் பகுதியில் ஒருவரைப் பணத்துக்காகக் கொலை செய்கின்றனர். இந்தக் கொலைக்கும் ஜோஜு ஜார்ஜ்க்கும் ஒரு சம்பந்தம் உண்டாக்கப்படுகிறது. இதனால் அந்த இருவர் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? என்பதை அதிரடியான காட்சிகள் மூலம் சொல்லி இருக்கும் படம்தான் ‘பணி’.

ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் தனக்கென ஒரு முத்திரை பதித்து ஓரிடத்தை பிடித்து வைத்திருப்பவர். அவரது இயக்கத்தில் வந்துள்ள இந்தப்படம் எப்படி?இந்தக் கேள்வி அனைவர் மத்தியிலும் நிலவி வந்தது.அதை அவர் நிறைவேற்றினாரா?

ஓர் இயக்குநராக ஜோஜு ஜார்ஜ்,ஆக்சன் காட்சிகளிலும் சரி, உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் காட்சிகளிலும் சரி, தனது கற்பனையில் உருவாக்கிய பாத்திரங்களைத் திரைப்படத்திற்கு ஏற்ற மாதிரி சரியாகக் கையாண்டுள்ளார்.

ஜோஜு ஜார்ஜ் மற்றும் அபிநயா இருவருக்குள்ளும் நிகழும் ரொமான்ஸ் காட்சிகள்,காதல் காட்சிகள் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளன.ஜோஜு ஜார்ஜ் உடன் வரும் மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

குறிப்பாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இரண்டு இளைஞர்களும் பார்ப்பவர் மனதில் பலமாகப் பதிகிறார்கள். அவர்கள் பாத்திரம் படத்திற்குப் பெரிய பலம்.அவர்கள் பலவீனப்பட்டிருந்தால் படம் பின்னடைவைச் சந்தித்திருக்கும்.பலம் பொருந்திய நாயகனுடன் அவர்கள் மோதும் விதத்தைப் பார்த்தால் யானைக்காதில் புகுந்த கட்டெறும்பும் மலையைக் குடைந்த எலியும் நினைவுக்கு வருகின்றன.

படம் தொடங்கி முதல் பாதியிலேயே பரவும் பரபரப்பு இடைவேளை வரை நிலவுகிறது.இடையில் சற்று ஆசுவாசம் எடுக்கும் கதை ,உச்சக்கட்ட காட்சி நெருங்கும் போது டாப் கியரில் பறக்கிறது.

கிளைமாக்ஸில் வரும் கார் சேஸிங் பார்ப்பவர்களைக் கதிகலங்க வைக்கிறது.அந்த அளவில் விறுவிறுப்பாகப் படமாக்கப்பட்டுள்ளது.கேரள மண்ணின் பின்புலமே ஓர் அழகான கேன்வாசாக இந்த ஆக்சன் படத்திற்கு அமைந்துள்ளது.நீளமான வசனங்கள் இல்லை ,வழவழா பேச்சுகள் இல்லை செயல் ஒன்றையே பிரதானமாக வெளிப்படுத்தி உள்ளது ‘பணி’ என்ற இப்படம்.

தம்மாத்துண்டு பசங்க என்று மதிப்பிடக்கூடிய அந்த இரண்டு இளைஞர்களை போலீஸ்களாலும் ரவுடிகளாலும் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லையா என்ற கேள்விகள் எழுப்பும் தர்க்கங்களை மறக்க வைக்கின்றன எடுக்கப்பட்டுள்ள காட்சிகள்.கதையாகச் சொன்னால்  சில வரிகளிலான கதையைத் திரைக்கதையில் வலுவூட்டி திரைமொழியைப் புரிந்து கொண்டு ஒரு விறுவிறுப்பான ஆக்சன் திரில்லராகக் கொடுத்துள்ள ஜோஜு ஜார்ஜ்,படம் முழுக்க ஓர் இயக்குநராக பளிச்சென மிளிர்கிறார்.