‘பயாஸ்கோப்’ திரைப்பட விமர்சனம்

சங்ககிரி ராச்குமார், வெள்ளையம்மாள், முத்தாயி, முத்துசாமி, குப்புசாமி, எஸ் எம் மாணிக்கம் ,இந்திராணி, எஸ் எம் செந்தில் குமார், சிவரத்தினம் , பெரியசாமி, மோகனப்பிரியா, தங்கராசு, தர்மசெல்வன், நமச்சிவாயம், ராஜேஷ் கிருஷ்ணன், ரஞ்சித், நிலா நடித்துள்ளனர் .சங்ககிரி ராச்குமார் இயக்கி உள்ளார். இசை தாஜ் நூர். தயாரிப்பு சந்திரா சூரியன், பிரபு, பெரியசாமி.

பாடல் பிறந்த கதை, நாவல் பிறந்த கதை என்றெல்லாம் எழுதப்பட்டுள்ளன. ஒரு திரைப்படம் உருவாக்கிய விதத்தையே அதற்கான போராட்டங்களையே இன்னொரு திரைப்படமாக உருவாகியுள்ளது.அதுதான் பயோஸ்கோப் திரைப்படம். சங்ககிரி ராச்குமார் இயக்கியுள்ளார். தனது முதல் படமான 2011 ஆம் ஆண்டு வெளியான வெங்காயம் திரைப்பட உருவாக்கத்தில் நிகழ்ந்த போராட்டத்தைச் சித்தரித்து இந்தப் படத்தை உருவாக்கி உள்ளார்.
அவர் தான் உருவாக்கிய வெங்காயம் படம் விமர்சன ரீதியாகப் பாராட்டுகளை பெற்றாலும் வியாபார ரீதியாகத் தோல்வி அடைந்தது. அதைப்பற்றி அவர் பேசும்போது குறிப்பிட்ட அனுபவங்களை வைத்து, ‘இதை வைத்தே இன்னொரு படம் எடுக்கலாம்’ என்று பலரும் யோசனை கூறவே அந்த முயற்சியில் இறங்கி இந்தப் படத்தை முடித்துள்ளார்.

அதன்படி, ‘வெங்காயம்’ என்ற கதை எழுத தூண்டுதலாக இருந்த சம்பவம் தொடங்கி, அந்த கதைக்கான குறும்படம் எடுப்பதற்கான பணத்தை தனது தந்தையிடம் தற்கொலை மிரட்டல் விடுத்து பெற்றது, பிறகு தானே அந்த கதையை படமாக எடுக்க முயற்சித்தது,
தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களைக் கொண்டு படத்தை எடுக்க தொடங்கி, அதற்காக தனது வீட்டில் இருந்த ஆடு, மாடு என அனைத்தையும் விற்று கடைசியில் குடும்பத்தின் வாழ்வாதார நிலத்தையும் விற்று படத்தை வெளியிட்டது வரை கதை கட்சிகளாக விரிகின்றன.

தான் சந்தித்த அனுபவங்களை, துன்பங்களை, துயரங்களை ,வலிகளை கலகலப்பாகவும் நெகிழ்ச்சி யூட்டும்படியும் இயக்குநர் சங்ககிரி ராச்குமார் சொல்வது தான் ‘பயாஸ்கோப்’.

சினிமா பற்றி அதன் தொழில்நுட்ப விவரங்கள் எதுவும் தெரியாத கிராமத்து மனிதர்களை வைத்துக் கொண்டு அந்த படத்தை அவர் உருவாக்கிய விதத்தை காட்சிகளாக காட்டி இருப்பது சுவாரசியமும் கலகலப்பும் நிறைந்தவை.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் ராச்குமார், முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பாட்டிகள் வெள்ளையம்மாள், முத்தாயி, தாத்தாக்கள் முத்துசாமி, குப்புசாமி, அப்பா வேடத்தில் நடித்திருக்கும் எஸ்.எம்.மாணிக்கம், அம்மாவாக நடித்திருக்கும் இந்திராணி, தம்பிகளாக நடித்திருக்கும் எஸ்.எம்.செந்தில்குமார், சிவாரத்தினம், பெரியசாமி, தங்கையாக நடித்திருக்கும் மோகனபிரியா, ஜோதிடராக நடித்திருக்கும் தங்கராசு, திரைப்பட தயாரிப்பாளராக நடித்திருக்கும் தர்மசெல்வன், குவாரி முதலாளியாக நடித்திருக்கும் நமச்சிவாயம், நண்பராக நடித்திருக்கும் ராஜேஷ்கிருஷ்ணன், இரண்டாவது ஹீரோவாக நடித்திருக்கும் ரஞ்சித், ஹீரோயினாக நடித்திருக்கும் நிலா என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் திரை பாத்திரங்களாக தெரியாமல் மண்ணின் மைந்தர்களாகவே தெரிகிறார்கள்.அறியாமையில் அவர்கள் பேசுவதும் நடந்து கொள்வதும் பார்வையாளர்களுக்கு நகைச்சுவைப் பட்டாசாக வெடிக்க வைக்கின்றன.

சங்ககிரி ராச்குமாருக்கு கடவுள் போல் தோன்றி உதவி செய்த இயக்குநர் சேரன் , சிறப்புப் தோற்றத்தில் வரும் நடிகர் சத்யராஜ் இருவரின் பங்களிப்பு படத்துக்கு உயரம் கூட்டி உள்ளது.

ஒளிப்பதிவாளர் முரளி கணேஷின் கேமரா கதைக்களத்தையும், கதாபாத்திரங்களையும் இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கிறது.இசையமைப்பாளர் தாஜ்நூருக்கு வேலை  குறைவு என்றாலும்,  நிறைவாக செய்திருக்கிறார்.

தான் படம் எடுத்த அனுபவத்தை ஒரு கதையாக எழுதி இயக்கியிருக்கும் சங்ககிரி ராச்குமார், தனது முதல் படத்தின் காட்சிகளையும்அதற்கான விழா தொடர்பான காட்சிகளையும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தியுள்ளார். இப்படியும் படம் எடுக்கலாம் என்று பலருக்கும் வழிகாட்டி உள்ளார்.முதல் பாதி சற்றே சுமாராக இருந்தாலும் இரண்டாம் பாதியில் நெகிழ வைக்கும் சம்பவங்களால் நிறைவளித்து விட்டார்.அவரது அடுத்த படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கலாம்.