ஷேன் நிகம், சாந்தனு,செல்வராகவன், அல்போன்ஸ் புத்திரன், ப்ரீதி நடித்திருக்கிறார்கள்.
உன்னி சிவலிங்கம் இயக்கியிருக்கிறார்.
அலெக்ஸ் ஜே.புலிக்கல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார்.
சாந்தோஷ் டி. குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்றார்கள்.
இப்படம் மலையாளம் மற்றும் தமிழில் உருவாகி செப்டம்பர் 26ஆம் தேதி வெளியாகியிருக்கிறது.
பொற்றாமரை. பஞ்சமி என்கிற கபடிக் குழுக்கள் எதிரெதிர் அணியாக வளர்ந்து எதிரிகளாகவே வாழ்ந்து வருகிறார்கள்.
உதயன், குமார் மற்றும் இரண்டு நண்பர்கள் என பஞ்சமி கபடிக் குழு இளமை விசையுடன் இருக்கிறது. சரியான வியூகத்தில் எதிரிகளை வெல்வது அவர்களது பாணி. அவர்கள் பொற்றாமரை கபடிக் குழுவினை வெல்கிறார்கள்.
பொற்றாமரை குழுமம், சோடா பாபு, கௌரி பைனான்ஸ் ஜி மா என்கிற மூன்று பேரும் வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலில் கொடி கட்டிப் பறக்கிறார்கள். ஒருவருக்கொருவர் பகையுணர்ச்சியோடு ஒருவரை ஒருவர் மிஞ்ச வேண்டும் என்றும் பொருளாதாரத்திலும் வில்லத்தனத்திலும் வளர்ந்து வருகிறார்கள்.
அவர்களில் பொற்றாமரை குரூப் பைரவன் பெரிய கையாக இருக்கிறார்.எதிலும் தான் தான் வெல்ல வேண்டும் என்ற வெறியோடு இருக்கிறார்.
தனது பொற்றாமரைக் கபடி குழுவை வென்ற பஞ்சமி
வாலிபர்களை வளைத்துப் போட்டுத் தனது கையாட்களாக வைத்து
அவர்களது ஆற்றலைத் தங்களது தொழிலுக்கு செல்வராகவன் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார். அப்படியே
அவர்களின் வீரத்தையும் துணிவையும் வைத்துப் பல காரியங்களைச் சாதிக்கிறார்.ஒரு கட்டத்தில் தங்களைக் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள் என்று தெரிகிறது.கபடி நண்பர்களில் ஒருவனது காதலியின் குடும்பத்தை அவமானப்படுத்தியதால் பைரவனைப் பகைத்துக் கொள்ள நேர்கிறது. பிறகு இவர்களைப் பைரவன் களப்பலியில் கொல்ல முடிவெடுக்க பெரிய மோதலாகிறது. முடிவு என்ன என்பதுதான் பல்டி படத்தின் கதை.
மலையாளக் குழுவினர் தயாரித்துள்ள படம் இது.படம் பற்றி இயக்குநர் உன்னி சிவலிங்கம் பேசும்போது,
“நான் மலையாளி, என்னைப் போலவே இப்படமும் 60 சதவிகிதம் மலையாளம் 40 சதவிகிதம் தமிழ்ப் படமாக மலையாளத்தில் இருக்கும். தமிழ் மொழியில் மாறி வரும். அதிரடியாக படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்”என்று கூறியிருந்தார்.
அப்படியே கேரள தமிழக எல்லையில் நடப்பதால் தமிழ் மலையாளம் என இரண்டுக்கும் பொருத்தமாகவே களமும் கதையும் உள்ளன.
கபடி ஆட்டத்தில் தொடங்குகிற கதை, களப்பலியில் முடிகிறது.
இந்த கதையில் கபடி இளைஞர்களாக உதயன் பாத்திரத்தில் ஷேன் நிகமும் உற்ற தோழனாக சாந்தனுவும் வருகிறார்கள்.இவர்கள் இருவரும் தான் முதன்மையானவர்கள் .இருந்தாலும் நால்வரில் மேலும் இரண்டு நண்பர்களும் இருக்கிறார்கள்.
ஷேன் நிகம் தோற்றத்தில் அசல் கபடி வீரராக விசை குறையாத ஆற்றலுடன் கட்டுக் கோப்பான உடற்கட்டுடன் வருகிறார். காதலியைக் கண்டால் மட்டும் தன்வசம் இழந்து விடுவது, கபடி ஆட்டத்தில் கலக்குவது எதிரிகளைப் பந்தாடுவது என்று அந்த பாத்திரத்தில் சரியாகவே செயல்பட்டுள்ளார். அவரது நண்பர் குமாராக வரும் சாந்தனுவும் நல்லவரா கெட்டவரா துரோகம் செய்பவரா என்று அடையாளம் காண முடியாத ஒரு சிக்கலான பாத்திரத்தில் நடித்திருக்கிறார். மற்ற இரண்டு நண்பர்களும் அவரவருக்கு ஏற்ற வேலையைச் செய்துள்ளார்கள். உதயனின் காதலியாக காவியா பாத்திரத்தில் வரும் ப்ரீத்தி பொறிபறக்கும் கண்களுடன் வருகிறார். சில காட்சிகளில் வந்தாலும் கவனம் ஈர்க்கிறார்.
சிரித்துக் கொண்டே கழுத்தறுக்கும் வில்லத்தனத்தில் செல்வராகவன் அசத்தியுள்ளார்.
சோடா பாபு பாத்திரத்தில் வரும் அல்போன்ஸ் புத்திரன் அலட்டாமல் வில்லத்தனம் காட்டி மிரட்டுகிறார்.
இவர்களுக்கு இடையில் அரசியல் செய்து காய் நகர்த்தி வரும் ஜீமா பாத்திரத்தில் வரும் நடிகையும் சரியான தேர்வு தான்.
கபடி போட்டி நடக்கும் காட்சிகள் ,கோயில் திருவிழா காட்சிகள் போன்றவற்றை கலர்ஃபுல்லாக எடுத்து படத்திற்கு பலம் சேர்த்துள்ளார் ஒளிப்பதிவாளர்
அலெக்ஸ் ஜே.புலிக்கல். சாய் அபயங்கரின்
இசையிலும் இளமை கொடிகட்டிப் பறக்கிறது .
இறுதிக் கட்டத்தில் இவ்வளவு வன்முறை தேவையா என்று கேள்வி வருகிறது.
மொத்தத்தில் பல்டி ஒரு விறுவிறுப்பான திரையரங்க அனுபவம் தான்.
.


