விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, விவேக், கதிர், தேவதர்ஷினி நடிப்பில்
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அட்லி இயக்கியுள்ள படம்.
தெறி, மெர்சல் படங்களுக்குப் பிறகு இயக்குநர் அட்லியும் நடிகர் விஜய்யும் இணைந்திருக்கும் மூன்றாவது படம் இது. பலரும் நினைத்ததைப்போல இது விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட படம்தான்.
ஒரு கால்பந்தாட்ட வீரனாக இருந்து, சூழல் காரணமாக அதிலிருந்து விலகிய ஒருவன், ஒரு கால்பந்தாட்ட அணிக்கு பயிற்சியாளராக மாறி அந்த அணியை வெற்றிபெற வைப்பது என்கிற ஒற்றை வரிக் கதை இது நாம் அண்மை ’கனா’ உள்பட பல படங்களில் பார்த்ததுதான்.
மைக்கேல் விஜய் ஒரு லோக்கல் ரவுடி .தன் ஏரியா பசங்களுக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக ஓடி வந்து உதவக்கூடியவர். தன்னால் முடிந்த அளவிற்கு தன் ஏரியா பசங்களை பெரியாளாக்க விரும்புபவர்.அப்படிப்பட்ட அவரை ஒரு கும்பல் எப்போதும் கொலை செய்ய துரத்துகிறது. அவருடைய நண்பரான கதிர் (கதிர்) ஒரு கால்பந்தாட்ட கோச். கதிரும், மைக்கேலும் ஒன்றாகப் போய்க் கொண்டிருக்கும்போது நடக்கும் ஒரு தாக்குதலில் கதிர் படுகாயமடைகிறார். அதனால், அவர் கோச்சாக இருந்து வழிநடத்த வேண்டிய ஒரு கால்பந்தாட்ட அணிக்கு மைக்கேல் கோச்சாகிறார். ஒரு ரவுடி எப்படி கோச்சாக முடியும்? அதற்கு ஒரு பெரிய முன்கதை உண்டு. இதற்கு நடுவில் வில்லன்களையும் எதிர்கொண்டு சமாளித்து விஜய் எப்படி வெல்ல வைக்கின்றார் என்பதே கதை செல்லும் பாதை..
ஒற்றை வரிக்கதையை இயக்குநர் எப்படி முழு நீளத் திரைப்படமாக்குகிறார் என்பதில்தான் அந்தப் படம் சுவாரஸ்யமாக இருக்கிறதா இல்லையா என்பது அமையும். அட்லி இதில் கோட்டைவிட்டிருக்கிறார். படத்துக்கான பெரிய எதிர்பார்ப்பை இந்தப் படம் பூர்த்தி செய்திருக்கிறதா என்றால் கேள்விக்குறிதான் பதில்.
படத்தில் விஜய்க்கு தந்தை – மகன் என இரண்டு வேடங்கள். தந்தைக்கும் மகனுக்கும் குரலிலும் மீசையிலும் மட்டும் சின்ன வித்தியாசம்.
இத்தனை நட்சத்திரங்கள் இருந்தும் விஜய் மட்டுமே தான் முழுப்படத்தையும் தோளில் சுமக்கின்றார். ஆட்டம், பாட்டம் என்று ஜாலியாகவும் சரி, கத்தியை எடுத்த ராயப்பனாகவும் சரி தொட்டதெல்லாம் விஜய் மயம்தான்.
ஆனால், ராயப்பன் கதாபாத்திரம் அப்பாவாக இல்லாமல் அண்ணனாக காட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஏனெனில் விஜய்க்கு வயதான கதாபாத்திரம் பொருந்தவில்லை, அதிலும் நயன்தாரா அவரை அப்பா என்று கூப்பிடுவதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
படம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொண்டது. சிங்கப்பெண்ணே உள்ளிட்ட இரண்டு பாடல்கள் நன்றாகத்தான் இருக்கின்றன. ஆனால் இந்தப் பாடல்கள் படத்திற்கு எந்தவிதத்திலும் உதவவில்லை.
தந்தை ராயப்பனாக வரும் விஜய், வில்லனான ஷர்மாவோடு (ஜாக்கி ஷராஃப்) மோதும் காட்சி ஒன்று வருகிறது. சிறப்பாக வரவேண்டியது ஆனால், அந்தக் காட்சி மிகச் சாதாரணமாக கடந்துபோகிறது.
படத்தின் பிரதானமான சிக்கல் படத்தின் நீளம். தேவையே இல்லாமல் மூன்று மணி நேரம் ஓடுகிறது படம். அதில் இடைவேளைக்கு முன்பாகவே நான்கு சண்டைகள், இரண்டு பாடல்கள். படத்தில் உள்ள ஏகப்பட்ட சண்டைகளையும் பாடல்களையும் குறைந்திருந்தால் படத்தில் அரை மணிநேரம் குறைந்திருக்கும்.
முதல் பாதி சண்டையும் பாட்டுமாகக் கழிந்ததென்றால், இரண்டாவது பாதியில் எந்த சுவாரஸ்யமும் இல்லாத ஒரு நீண்ட கால்பந்தாட்ட போட்டியை வைத்து ஒப்பேற்றி நம்மை வீட்டுக்கு அனுப்புகிறார் அட்லி.
படத்தில் தன்னை கோச்சாக ஏற்றுக்கொள்ள விஜய் போடும் போட்டி, ஆசிட் அடிக்க பெண்ணிடம் பேசும் காட்சிகள், கிளைமாக்ஸில் தன் அணியைத் திட்டி வெறுப்பேற்றுவது என இரண்டாம் பாதி முழுவதும் கைத்தட்டலுக்கு குறைவில்லாத காட்சிகள். இவை முதல் பாதியிலும் இருந்திருக்கலாம்.
நயன்தாரா கதாநாயகி.அதனால் இரண்டு பாடல் காட்சிகளில் வருகிறார். பிறகு எதுவும் செய்யாமல் விஜய் கூடவே இருக்கிறார். அவ்வளவுதான். யோகிபாபு, ஆனந்த்ராஜ், விவேக், தேவதர்ஷினி, கு. ஞானசம்பந்தன் ஆகியார் தலா இரண்டு காட்சிகளில் வருகிறார்கள்.
யோகிபாபு, விவேக் ஆகியோர் இருந்தும் சிறு புன்னகைக்குக்கூட நகைச்சுவைக் காட்சிகள் இல்லை. சில இடங்களில் விஜய் நகைச்சுவைக்கு முயற்சிக்கிறார். ஆனால், சிரிப்பு வரவில்லை.
இந்தப் படத்தில் வில்லனாக வரும் ஷர்மாவின் நோக்கம் என்ன என்பது தெளிவாக இல்லை. சாதாரண இளைஞர்களுக்கு கால்பந்தாட்ட அணியில் காசு வாங்காமல் இடம்தர விருப்பமில்லையென்றால், எதற்காக வந்து இந்திய அணியில் இடம் தருவதாக கதாநாயகனிடம் சொல்கிறார்? பிறகு, ஏன் வீணாக வாங்கிக்கட்டிக் கொள்கிறார்?
இரண்டாம் பாதியில் வில்லன் மீண்டும் ரீ – என்ட்ரி கொடுக்கும்போது சிவப்பு லைட் எரியும் ஒரு குடோன். நான்கு குண்டர்கள். அவர்களை வைத்து ஆள்களைக் கடத்துவது, போதை மருந்து ஏற்றுவது என ஏதேதோ நடக்கிறது.
படத்தின் இரண்டாம் பாதி முழுக்க கால்பந்தாட்டம்தான். அப்படியான கதையில், அந்த ஆட்டத்தின் நுணுக்கங்களை வைத்து ஏதாவது நடக்கிறதா என்று பார்த்தால் ஏமாற்றம்தான். அதனாலேயே சென்னை – 28, கில்லி, வெண்ணிலா கபடிக் குழு, கனா போன்ற படங்களில் இருந்த சுவாரஸ்யம் இதில் இல்லை.
படத்தின் மிகப்பெரிய பலம் விஷ்ணுவின் ஒளிப்பதிவு, செம்ம கலர்புல் காட்சிகள், ரகுமானின் பின்னணி இசை எமோஷ்னல் காட்சிக்கு அருமை. எடிட்டர் ரூபன் இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டு இருக்கலாம்.
உலகம் முழுவதும் பிகில் சுமார் 4000 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகியுள்ளது. எங்கு திரும்பினாலும் இன்று ஒரே பிகில் பேச்சு தான், அப்படிப்பட்ட பிகில் சத்தம் ஓங்கி ஒலித்ததா? என்றால் கேள்விதான் மிஞ்சுகிறது.. மொத்தத்தில் தெறி, மெர்சலை ஒப்பிடுகையில் பிகில் சத்தம் குறைவு தான்.
விஜய் ரசிகர்கள் ரசிக்கலாம்.