‘பிசாசு’ விமர்சனம்

pisasu-5பேய்க்கதைகள் என்றால் கெட்ட ஆவிகளாகத்தான் வர வேண்டுமா? நல்ல பேய் பிசாசும் உண்டு என்று நம்ப வைக்கிற கதை.

படம் தொடங்கியதும் ஒரு கார் விபத்து நடக்கிறது டூவீலரில் போன பிரயாகா தூக்கி வீசப் படுகிறார். குற்றுயிரும் குலையுயிருமாக கிடக்கும் அவரை நாகா தூக்கிக் கொண்டு போக ,நாகாவை பிடித்த கையை பிரயாகா விடவில்லை.  மருத்துவமனையில் சேர்க்கிறார். பிரயாகா இறந்து விடுகிறார்.

வீடுவந்து சேரும் நாகாவின் அறையில் அமானுஷ்ய சக்தியின் நடமாட்டம். பீர் குடிக்க உட்கார்ந்தால் ஓபனரைக் காணோம் .பீர்பாட்டிலே உடைகிறது இதே ஆட்டம் அவரைக் காண வரும் நண்பர்களையும் தொடர்கிறது மகனைத் தேடி வரும் அம்மாவுக்கும் நேர்கிறது.

உன்னை காப்பாற்ற மருத்துவமனை சேர்த்த என்னை ஏன் பாடாய்ப் படுத்துகிறாய் என்று கேட்கிறார் நாகா. நீயார், உனக்கு என்ன வேணும்? என்று அலறுகிறார். பிறகு பிரயாகா பிசாசு தனக்கு தீங்கு செய்ய வரவில்லை என்றும் நன்மை செய்யத்தான் வந்திருக்கிறது என்று உணர்வதுடன், பிரயாகா இறப்பதற்கு காரணமானவனை பழி வாங்கவும் நினைக்கிறார் நாகா.இறுதியில் பிரயாகாவை கார் ஏற்றி கொன்றது யார்? அவரை நாகா பழி வாங்கினாரா? என்பதே மீதிக்கதை.

இது ஒரு பேய்ப்படம். பிசாசை ஒரு பாத்திரமாகவே உலவ விட்டுள்ளார் மிஷ்கின். சில இடங்களில் பயமுறுத்துகிறது. சில இடங்களில் சிரிப்பூட்டுகிறது.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் நாகா, படம் முழுவதும் முகத்தை முடியால் மூடிய படியே நடித்திருக்கிறார். அவ்வப்போது தெரியும் கண்களில் ஆயிரம் அர்த்தங்களை கொண்டு நடித்திருக்கிறார். பிசாசுவால் பயந்து அலறும்போதும் நடிப்பில் கைதட்டல் வாங்குகிறார். நாயகி பிரயாகா அழகாக இருக்கிறார். ஆனால்  பாவம் அவருக்குக் காட்சிகள் குறைவு. பிசாசாகவே அதிக காட்சிகளில் வருகிறார். கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். அப்பாவாக நடித்திருக்கும் ராதாரவி சிறப்பான நடிப்பால் மனதில் நிற்கிறார்.

இயக்குநர் மிஷ்கின் வழக்கம் போல் தன் படங்களுக்குண்டான வித்தியாசமான திரைக்கதையுடன்  இப்படத்தையும் உருவாக்கியிருக்கிறார். முதல் பாதி பிசாசுடனும் இரண்டாம் பாதி நாயகி இறந்ததற்கான காரணத்தையும் தேடும் வகையில் அமைத்திருக்கிறார்.

படத்தில் நடித்திருப்பவர்களைத் தவிர இயக்குநர் மிஷ்கின். ஒளிப்பதிவாளர் ரவிராய் இசை அமைப்பாளர் கொலேரி என்று மூன்று  பேரும் பிரதான நாயகர்கள் எனலாம்.தமிழச்சியின் ஒற்றைப்பாடலும் தரம்.

ஒரு பேய்ப் படத்தை தனக்கே உரிய திரை மொழியில் கூறியிருக்கிறார் மிஷ்கின். ஒரு வணிக வெற்றி தேவை என்கிற நிர்ப்பந்தத்தில் காலத்துக்கேற்ற பேய்க்கதையாக நகாசு வேலைகளுடன் ‘பிசாசு’ வை கொடுத்துள்ளார். அதற்காக மிஷ்கினுக்கு ஒரு சபாசு.