இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணத்தைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது:
இனப் படுகொலை நிகழ்த்திய சிங்கள அரசின் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தக் கோரி உலகளாவிய போராட்டங்கள் வலுவாக நடந்துகொண்டிருக்கும் நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமிழர்களின் உணர்வுகளையும் கோரிக்கைகளையும் புறந்தள்ளிவிட்டு இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செல்வது இந்திய இறையாண்மையை மதித்து தேசிய ஒருமைப்பட்டிருக்கு கட்டுப்பட்டு ஒன்பது கோடிக்கு மேலாக இந்திய பெருநிலத்தில் நிறைந்து வாழ்கிற தமிழ் தேசிய இன மக்களுக்குச் செய்கிற பெரும் துரோகமாகும். இலங்கை இனப்படுகொலை நிகழ்த்திய நாடு என்கிற உலகளாவிய பார்வையை மாற்றுகிற செயலாகவே இந்தியப் பிரதமரின் பயணத்தைப் பார்க்கத் தோன்றுகிறது. கடந்தகால காங்கிரஸ் அரசுக்கு சிறிதும் மாற்றம் இல்லாது பாரதீய ஜனதா அரசு ஒட்டுமொத்தத் தமிழ் மக்களின் உணர்வுகளையும் காலில் போட்டு நசுக்கிவிட்டு சிங்கள சேர்க்கையையே ஆதரித்து நிற்கிறது என்பதற்கு மோடியின் இலங்கைப் பயணம் சரியான உதாரணம். தமிழக மீனவர்கள் பிரச்சனைக்குத் தீர்வு கேட்டு காலாகாலமாய் போராடிவரும் நிலையில், எல்லை தாண்டும் மீனவர்களை நாங்கள் சுடத்தான் செய்வோம் எனக் கொக்கரித்திருக்கிறார் இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே.
போரில் வெறும் 5000 மக்கள் மட்டுமே கொல்லப்பட்டார்கள் என இலங்கைப் பிரதமர் ரணில் சொல்கிறார். ஆனால், 80,000 விதவைகளின் வாழ்வாதாரத்திற்கு உதவுவோம் என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா சொல்கிறார். அப்படியென்றால், 80,000 கணவர்கள் கொல்லப்பட்டது இலங்கையில் நடந்த போரில்தானே ?… அவர்களின் உறவினர்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டார்களே… அவையெல்லாம் கொலைப்பட்டியலில் அடங்காதா? கொஞ்சமும் மனசாட்சியற்ற பொய்க் கருத்துக்களைப் பேசிவரும் இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, எங்கள் பிரதமரை நேரில் சந்திக்கும் போதுமட்டும் உண்மைகளை பந்திவைத்து பரிமாறிவிடப் போகிறாரா?
லட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்றுகுவித்த சிங்கள அரசுக்கு இறுதிக்கட்டப் போரில் இந்திய அரசு உதவி செய்ததாக ரணில் பகிரங்கமாகக் கூறியிருக்கிறார். இதற்கு இன்றைய இந்திய அரசின் கருத்து என்ன? அப்படியானால் எங்கள் பிரதமர் எம் இனத்தின் சாவை ஏற்றுக்கொள்கிறாரா? போருக்கும் உதவிவிட்டு ஆறுதலுக்கும் போய் நிற்கிற அரசுதான் எமது அராசா? லட்சக்கணக்கான தமிழ் மக்களின் படுகொலைக்கு நியாயம் கேட்கவோ, சிங்கள அரசின் பயங்கரவாதத்தைத் தட்டிக்கேட்கவோ துணியாத எங்கள் பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் இருக்கும் தமிழ் மக்களைச் சந்தித்துப் பேசுவேன் என அறிவித்திருக்கிறார்.
சிங்கள ராணுவத்தின் பன்மடங்கு மிரட்டலுக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகி இருக்கும் தமிழர்கள் பிரதமர் மோடியிடம் எப்படி வெளிப்படையாகப் பேசுவார்கள்? ‘காணாமல் போன தமிழர்களைக் கண்டுபிடிக்கக் கோரி’ இலங்கையில் போராடிவரும் தங்கை ஆனந்தியின் குரலுக்குப் பதில் கொடுக்காமல், இந்தியப் பிரதமரை அழைத்துப் பொய்க்கருத்துக்களைப் பரப்பவே சிங்கள அரசு திட்டமிடுகிறது. எங்கள் பிரதமர் தங்கை ஆனந்தியை சந்திப்பாரா?உண்மை நிலையைக் கேட்டறிவாரா?
இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் என்ற ஒருவலிமையான தீர்மானத்தை மாண்பு மிகு தமிழகத்தில் முதல்வர் அவர்கள் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.அதே கருத்தை வலியுறுத்தி வடக்கு மாகாண முதல்வர் அய்யா விக்னேசுவரன் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார். இதற்கு எங்கள் பிரதமரின் நிலைப்பாடு என்ன?
இலங்கையின் இனப்படுகொலை குறித்தும் தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்தும் ஈழத் தமிழர் மறுவாழ்வு குறித்தும் சிங்கள அதிபர் சிறிசேனா இந்தியாவுக்கு வந்தபோதே அவரிடம் எங்கள் பிரதமர் மோடி அவர்கள் விசாரித்து இருக்கலாமே… புதுமாப்பிள்ளை தேனிலவுக்காக ஊர் ஊராக சுற்றுவதைப்போல் நாடு சுற்றிப் பார்ப்பதையே கடமையாகக் கருதிவரும் எங்கள் பிரதமர், அதற்காகவே இலங்கைக்குப் போகிறாரோ என எண்ணத் தோன்றுகிறது.
எமது இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான நீதியை பெற நாங்கள் போராடிக்கொண்டிருக்கிற வேளையில் தெற்காசிய பிராந்தியத்தில் வலிமைமிக்க ஒரு வல்லாதிக்கத்தின் பிரதமர் மோடி அவர்கள் இலங்கைக்கு செல்வது அந்த நாடு செய்த அத்தனை குற்றங்களையும் ஆதரிப்பது அங்கீகரிப்பதாகிவிடாதா? உலகத்தில் கோடிக்கணக்கான தமிழ் மக்களின் கோரிக்கைகளைப் புறந்தள்ளிவிட்டு, லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலையாக்கப்பட்ட அரக்க தேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் எங்கள் பிரதமர் மோடி அவர்களின் பயணத்தை நாம் தமிழர் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. .
இவ்வாறு அந்த அறிக்கையில் செந்தமிழன் சீமான் கூறியுள்ளார்.