முன்னோக்கிய கதைக்களங்கள் என்பது தமிழ் சினிமாவில் மிகவும் அரிது. அப்படி வெளியான படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். தற்போது முன்னோக்கிய கதைக்களம் ஒன்று தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமாகத் தயாராகிறது. இதுவரை தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இந்திய சினிமாவிலேயே வந்திராத ஒரு புத்தம் புதிய கதைக்களத்துடன் இளம் படை ஒன்று களம் காணவுள்ளது.
எந்தவொரு இயக்குநரிடமும் உதவி இயக்குநராக பணிபுரியாத பிரமோத் சுந்தர் இயக்கவுள்ள இந்தப் படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. ‘கலியுகம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்காகப் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் படப்பூஜையுடன் படப்பிடிப்பும் தொடங்கியது. விளம்பரத் துறையில் பணிபுரிந்து, சில குறும்படங்களை இயக்கியுள்ளார் பிரமோத் சுந்தர்.

இதில் பிரதான கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கவுள்ளார். இந்தப் பூஜையில் அவருடன், படக்குழுவினரும் கலந்துக் கொண்டனர். இந்தப் பூஜை கரோனா வழிமுறைகளைப் பின்பற்றி படக்குழுவினர் பங்கேற்றனர். இந்தப் படத்தை ஆர்.கே இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ப்ரைம் சினிமாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கே.எஸ். ராமகிருஷ்ணா பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். ஹாரர் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகிறது.
முன்னோக்கிய கதைக்களம் என்பதால் கலை இயக்குநரின் பணி என்பது மிகவும் முக்கியமானது. இதற்காக பல்வேறு விஷயங்களை ஆராய்ச்சி செய்து, இந்தப் படத்துக்கு அரங்குகளைப் பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளார் கலை இயக்குநர் என்.சக்தி வெங்கட் ராஜ். இந்த அரங்குகள் பார்வையாளர்களைக் கண்டிப்பாக ஆச்சரியப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. இந்தியத் திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராமிடம் பணிபுரிந்த ராம்சரண் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.
புதுமையான கதைக்களம் கொண்ட இந்தப் படத்தில் முழுக்க இளம் படையே பணிபுரியவுள்ளது. படப்பிடிப்பை முடித்துவிட்டு, வெளியீட்டுத் தேதியை முடிவு செய்யப் படக்குழு முடிவு செய்துள்ளது. காட்சியமைப்புகள், திரைக்கதை, அரங்குகள் என அனைத்துமே பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் என்கிறார் இயக்குநர் பிரமோத் சுந்தர்.
‘கலியுகம்’ படக்குழுவினர் விவரம்:
தயாரிப்பு நிறுவனம்: ஆர்.கே இண்டர்நேஷனல்
தயாரிப்பாளர்: ப்ரைம் சினிமாஸ் உரிமையாளர் கே.எஸ்.ராமகிருஷ்ணா
இயக்குநர்: பிரமோத் சுந்தர்
ஒளிப்பதிவாளர்: ராம்சரண்
கலை இயக்குநர்: சக்தி வெங்கட் ராஜ். என்
எடிட்டர் – நிமல் நாசீர்
ஆடை வடிவமைப்பாளர் – ப்ரவீன் ராஜா
ஒலி வடிவமைப்பு – கெளரி சங்கர் மற்றும் ஜெய்சன் ஜோஷ்
பி.ஆர்.ஓ – யுவராஜ்