‘பிளடி பெக்கர்’ திரைப்பட விமர்சனம்

கவின், மாருதி பிரகாஷ் ராஜ், சுனில் சுகதா ,டி எம் கார்த்திக், பதம் வேணு குமார், ஹர்ஷத் , மிஸ். சலீமா, பிரியதர்ஷினி ராஜ்குமார், அக்ஷயா ஹரிஹரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சிவபாலன் முத்துக்குமார் இயக்கியுள்ளார்.தயாரிப்பு – பிளமென்ட் பிக்சர்ஸ் .

‘டாடா’, ‘ஸ்டார்’ ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு நடிகர் கவின் எதிர்பார்த்து காத்திருந்த படம் ‘பிளடி பெக்கர்’.

பிச்சை எடுக்கும் கவின்,விதவிதமாக பொய்களைச் சொல்லி பிச்சை எடுக்கிறார். அவர் கூடவே ஒரு சிறுவன் ஒட்டிக்கொண்டு அவனும் சின்னச் சின்ன புத்தகங்கள்,பேனாக்கள் என்று விற்பனை செய்து வருகிறான்.ஒரு பெரிய மாளிகையில் வாழ்ந்து பார்த்து விட வேண்டுமென்று அவருக்கு ஒரு கனவு உண்டு.ஒரு நாள் அந்த மாளிகையில் ஒரு சிறப்பு நாளை ஒட்டி பிச்சைக்காரர்களை அழைக்கிறார்கள் அப்படி அங்கே செல்கிற கவின், அந்த மாளிகை உள்ளே நுழைந்து விடுகிறார்.சென்ற பிறகு தான் தெரிகிறது அங்கே சொத்துக்களைப் பிரித்துக் கொள்ள வாரிசுகளுக்குள் பெரிய போட்டியே நடக்கிறது.அங்கே நுழைந்த கவினைக் கொலை செய்ய அவர்கள் துடிக்கிறார்கள். போன பிறகு தான் தெரிகிற து,தன் மனைவி இறப்புக்குக் காரணமானவர்கள் அங்கே இருப்பது.இப்படிப்பட்ட சூழலில் கவின் அங்கிருந்து தப்பித்தாரா தனது மனைவி இறப்புக்கு காரணமானவர்களைப் பழி வாங்கினாரா என்பது தான் மீதிக்கதை.

இந்த கதைக்குள் பேண்டஸியையும் சேர்த்து ஒரு டார்க் காமெடி படமாக உருவாக்க முயன்றுள்ளார் இயக்குநர்.ஒரு கதாநாயகனாக நாகரிக உடைகளில் தோன்றி நடித்து இப்போதுதான் வளர்ந்து வரும் வேளையில் இப்படி ஒரு பிச்சைக்காரர் தோற்றத்தில் நடிப்பதற்குக் கவினுக்குத் துணிச்சல் வேண்டும். அந்த தோற்றத்தில் அவர் சரியாகவும் நடித்துள்ளார்.

அரூபமாக வரும் பாத்திரத்தில் நடித்திருக்கும் ரெடின் கிங்ஸ்லி பல இடங்களில் மிகை நடிப்பு காட்டி, சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்.

திரையில் தோன்றும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர்களின் தேர்வு கச்சிதம்.அவர்கள் சில காட்சிகளில் நாடகம் போல் தோன்றினாலும் இயக்குநர் எதிர்பார்ப்பது அதுதான் என்று கதையின் தன்மையை உணர்ந்து நடித்துள்ளார்கள்.குறிப்பாக கவினுடன் வரும் பிச்சைக்கார சிறுவன் கவனம் பெறுகிறான். அந்தச் சிறுவனுக்கும் கவினுக்கும் உள்ள தொடர்பு சிறு சுவாரசியம்.

நகைச்சுவை ஆங்காங்கே தூவப்பட்டிருக்கும் இந்தக் கதையில் கவினின் பிளாஷ்பேக் அனுதாபத்தை வரவழைக்கும் முயற்சி.கவினின் தோற்றத்துக்கு மெனக்கெட்ட அளவுக்கு அந்தக் கதாபாத்திரத்தின் ஆழத்திற்கும் யோசித்து இருந்தால் அவருக்கு இது ஒரு சிறந்த பாத்திரமாக மாறி இருக்கும்.

அந்த மாளிகைக்குள் கதை நுழைந்த பிறகு அங்குள்ள அறைகளில் கூடங்களில் என சுற்றிச் சுற்றி வருகிறது. இருந்தாலும் அந்தக் குறை தெரியாமல் படப்பிடிப்பு நடந்துள்ளது.  ஒளிப்பதிவாளர்  சுஜித் சாரங்கின்  ஒளிப்பதிவுக்கு வாழ்த்துக்கள்.
இவரைப் போலவே படத்தின் காட்சிகளுக்கு ஏற்ற பின்னணி இசை வழங்கியுள்ள இசையமைப்பாளர் ஜென் மார்ட்டினும் கவனம் பெறுகிறார். சில காட்சிகளை யூகிக்க முடிவது திரைக்கதையின் பலவீனம்.

அறிமுக இயக்குநர் சிவபாலன் கதை சொல்வதில் ஓரளவு வெற்றி பெற்று இருக்கிறார் என்றே சொல்லலாம்.முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் சுவாரஸ்யப் படுத்த முயன்றுள்ளார் .ஆனால் மொத்தத்தில் ஏதோ ஒரு போதாமையை உணர முடிகிறது .திரைக்கதையில் மேலும் கவனம் செலுத்தி இருக்கலாம் போல் தோன்றுகிறது. ஆனாலும் ‘பிளடி பெக்கர்’
இப்படி கூட யோசிக்கலாம் என்ற வகையில்  ஒரு புதிய முயற்சி என்று கூறலாம்.

டார்க் காமெடி ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும்.