ஒன் மேன் புரொடக்ஷன்ஸ் சார்பில் புவனேஸ்வரி சாம்பசிவம் தயாரிப்பில் ரமேஷ் பாரதி இயக்கத்தில் மெட்ரோ சிரிஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம் பிஸ்தா.மேலும் சதீஷ், யோகி பாபு, அருந்ததி நாயர், மிருதுளா முரளி, நமோ நாராயணன் , பேராசிரியர் கு. ஞானசம்பந்தன்,லொள்ளு சபா சாமிநாதன்,நீண்ட இடைவெளிக்கு பின் நடிகர் செந்தில் ஆகியோர் நடித்துள்ளனர்.
திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யும் ,சேவையைச் செய்யும் ஏ டு இசட் மேரேஜ் சர்வீஸ் குழுவினரைப் பார்த்திருப்போம். ஆனால் திருமணத்தை நிறுத்துகிற சேவை செய்து வருகின்றனர் சிரிஷ்
மற்றும் நண்பர்கள்.
விருப்பமில்லாத திருமணத்தைக் கடைசி நேரத்தில் போய் நிறுத்தி மணப்பெண்ணைக் காப்பாற்றுவதாகச் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்.அதன் மூலம் பல குடும்பங்களில் பலரது வயிற்றெரிச்சலையும் பலரது எதிர்ப்புகளையும் சம்பாதிக்கிறார்கள்.
இப்படிப்பட்ட வேலை செய்யும் நாயகன் சிரிஷிற்குத் திருமணம் தள்ளிக் கொண்டே போகிறது.அவர் மிருதுளா முரளியைக் காதலிக்கிறார் இருவருக்கும் இடையில் ஒரு கட்டத்தில் முரண்பாடு வந்து கோபித்துக் கொண்டு செல்கிறார் நாயகி.
அவருக்குத் திருமணம் நடக்கக் கூடாது என்று பலரும் முயற்சி செய்கிறார்கள், தடையாக நிற்கிறார்கள்.கடைசியில் திருமணம் நடந்ததா இல்லையா என்பதுதான் கதை.
முதலில் வளர்ந்து வரும் நாயகனான சிரிஷ் இப்படி எதிர்மறை நிழல் விழும் பாத்திரத்தைத் தேர்ந்தெடுத்ததற்கு ஒரு சபாஷ் போடலாம்.முடிந்தவரை அந்த பாத்திரத்திற்குள் நுழைய முயன்றிருக்கிறார். இக்கதை நாயகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மிருதுளா முரளியை விட அருந்ததி நாயர் அழகாக இருக்கிறார்.அவரது திரைத் தோற்றம் நன்றாக உள்ளது.மற்றபடி கு.ஞானசம்பந்தன், லொள்ளு சபா சாமிநாதன், நமோ நாராயணன், யோகி பாபு போன்றவர்களுக்கு அளித்துள்ள வாய்ப்புகள் வழக்கமான காமெடிக் காட்சிகள் தான்.
நகைச்சுவை என்கிற பெயரில் மலிவான காமெடி காட்சிகளை வைத்துக் கொண்டு சிரிக்க வைக்க முயற்சி செய்துள்ளார்கள்.
பலம் வாய்ந்த நகைச்சுவை நடிகர்களை வைத்துக்கொண்டு அசட்டுத்தனமான காட்சிகளை எடுத்து கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள்.அதுவும் ஞானசம்பந்தன், லொள்ளு சபா சாமிநாதன் குடும்பம் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிக மலிவானவை.
குறிப்பாக அந்த ‘மானங்கெட்ட குடும்பம்’ ப்ளாஷ்பேக் குமட்டல் ரகம்.
ஆபாசம்தான் காமெடி என்று இவர்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள்?
தரண் குமார் இசையில் பாடல்கள் சிறு ஆறுதல்.அதேபோல வண்ண மயமான ஒளிப் பதிவும் எரிச்சலைக் குறைக்கிறது.குறிப்பாக படம் முழுக்க வரும் திருமண வீடு சார்ந்த பின்னணிக் காட்சிகள் கலகலப்பு.
நல்லதொரு நகைச்சுவை பட்டாளத்தை வைத்துக்கொண்டு மிகச் சாதாரணமான காட்சிகள் வைத்து இந்தப் படத்தை முடித்துள்ளார்கள்.
லாஜிக் எதுவும் பார்க்காமல் மனம் அழுத்தம் உள்ளவர்கள் போய்ப் பார்த்துச் சிரித்து விட்டு வரலாம்.