சூர்யா சேதுபதி, வரலட்சுமி சரத்குமார் ,தேவதர்ஷினி ,ஜே விக்னேஷ், அபி நட்சத்திரா, அஜய் கோஷ்,ஹரிஷ் உத்தமன்,,வர்ஷா, சம்பத்ராஜ் , மூணாறு ரமேஷ் ,முத்துக்குமார், திலீபன் ,காயத்ரி நடித்துள்ளனர்.
சண்டை இயக்குநர் அனல் அரசு இயக்குநர் அவதாரம் எடுத்து இயக்கி உள்ள படம் இது.இசை சாம் சி எஸ்.,தயாரிப்பு ஏ.கே. பிரேவ் மேன் பிக்சர்ஸ் சார்பில் ராஜலட்சுமி அனல் அரசு.
எம்எல்ஏ சம்பத்ராஜ் -க்கு உட்கட்சிப் ப கை அரசியல் பகை என்று ஆயிரம் இருந்தாலும் அவர் யாரும் எதிர்பாராத வகையில் கொலை செய்யப்படுகிறார்.அதுவும் ஒரு 17 வயது சிறுவனால் பட்டப் பகலில் துடிக்கத் துடிக்க முப்பத்தாறு வெட்டுகள் பெற்றுக் கொலை செய்யப்படுகிறார்.போலீஸ் உட்பட பொதுமக்கள் பலரும் அந்த சம்பவத்தைப் பார்த்து அதிர்கிறார்கள்.இந்தக் கொலையைச் செய்தவர் சூர்யா சேதுபதி.அவரைப் போலீஸ் கைது செய்து அரசு கண்காணிப்பு இல்லத்தில் அடைக்கிறது.தன் கணவனை கொலை செய்த சூர்யா கதையை முடிக்க எம்.எல்.ஏ-வின் மனைவி வரலட்சுமி சரத்குமார் துடிக்கிறார்.
சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் தீர்த்துக்கட்ட பல முயற்சிகள் நடக்கின்றன.அனைத்துத் திட்டத்தையும் தகர்த்து அதிர்ச்சி தருகிறார் சூர்யா சேதுபதி. சிறுவன் என்று சாதாரணமாக நினைத்த சூர்யான் அதிரடியைக் கண்டு திட்டம் போட்ட பகையாளிக் கூட்டமும் உடந்தையாக இருந்த போலீஸ் தரப்பும் மிரள்கிறார்கள்.மேலும் மேலும் பல வகைகளில் கதை முடிக்க முயற்சி செய்கிறார்கள்.அவற்விறிலிருந்து சூர்யா சேதுபதி எப்படி தப்பிக்கிறார்? ஒரு பீனிக்ஸ் பறவையைப் போல் வீழ்ச்சி அடையாத வீரனாக,வீழானாக தன்னை எப்படி நிரூபிக்கிறார் என்பதே ‘பீனிக்ஸ்’ படத்தின் கதை.
நாயகனாக நடித்திருக்கும் சூர்யா சேதுபதி, முதல் படத்திலேயே பலம் வாய்ந்த கதாபாத்திரத்தை அதன் எடையைப் பற்றி கவலைப்படாமல் தனது தோளில் சுமந்து வெற்றி பெற்றிருக்கிறார்.முதல் பாதி முழுக்க பேச்சே கிடையாது ஆக்சன் தான்.ஒரு சராசரி குடும்பத்தில் பிள்ளையாக மகிழ்ச்சியாக வாழ நினைக்கும் சூர்யா சேதுபதி தனது அண்ணனின் கொலைக்குப் பழிவாங்கத்தான் இந்த ஆவேச அவதாரம் எடுக்கிறார்.
ஆயுதத்துடன் வரும் ஐந்து பேரை ஒரே ஆளாக அடித்து துவம்சம் செய்யும் போது அவர் காட்டும் அதிரடி சரியான சரவெடி.கதைக்களத்திற்கு ஏற்ற உருவம், ஆக்ஷன் காட்சிகளில் கச்சிதம் என சூர்யா சேதுபதியின் கடுமையான உழைப்புக்குப் பல காட்சிகள் சாட்சிகளாக இருக்கின்றன.அதிகம் பேசாமலேயே அவர் காட்டும் முக பாவனைகள், உடல் மொழிகள் ஒரு ஆக்சன் நாயகனுக்கான சரியான அடித்தளமாக உள்ளது.
வில்லனாக எம்.எல்.ஏ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சம்பத் ராஜ், எம்.எல்.ஏ மனைவியாக நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமார், நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் தேவதர்ஷினி, நாயகனின் அண்ணனாக நடித்திருக்கும் ‘காக்கா முட்டை’ விக்னேஷ், அபி நட்சத்திரா, வர்ஷா, முத்துக்குமார், திலீபன், அஜய் கோஷ், ஹரிஷ் உத்தமன், மூணாறு ரமேஷ், நவீன், காயத்ரி, அட்டி ரிஷி என மற்ற துணைப் பாத்திரங்களில் தோன்றுபவர்கள் கதை ஓட்டத்திற்குத் துணை புரிகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஆர்.வேல்ராஜின் கேமரா, ஆக்ஷன் காட்சிகளை அதிரடியாக மட்டும் இன்றி கதை சொல்லும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறது. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியின் அறை, நீதிமன்றம், தற்காப்புக் கலைப் போட்டி என படம் முழுவதும் சண்டைக்காட்சிகள் நிரம்பியிருந்தாலும் அவற்றுடன் பார்வையாளர்களை ஒன்றிப் பயணிக்க வைக்கும் வகையில் காட்சிகளை படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர்.வேல்ராஜ்.
பாடல்களிலும் பின்னணி செயலும் வழக்கம் போலவே தனது முத்திரையைப் பதித்துள்ளார் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்.தன்னால் முடிந்த அளவிற்கு சூர்யா சேதுபதி பாத்திரத்திற்கு எடை கூட்டி உள்ளார்.
சமரசம் இல்லாத கட்டிங் மூலம் படத்தின் விறுவிறுப்பை ஏற்றி இருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல்.
படம் வழக்கமான பழிவாங்கும் கதையாக இருந்தாலும் அதை யோசிக்க விடாத வேகத்தில் படத்தை உருவாக்கி இருக்கிறார் எழுதி இயக்கியிருக்கும் சண்டை இயக்குநர் அனல் அரசு.வன்முறைக் காட்சிகள் சற்று அதிகம்தான். கதைக்களம் மற்றும் கதை மாந்தர்களின் பாத்திரத் சித்தரிப்புகள் அவற்றை மறக்கடித்து விடும்.
சாது மிரண்டால் காது காடு கொள்ளாது கதை தான் இது. ஒடுக்கி அமிழ்த்தி வைக்கப்படும் சாமானியன் கூட திமிறி எழுந்தால் விளைவு மோசமாக இருக்கும் என்பதையும் படம் சொல்கிறது.ஆக்ஷன் படங்களில் வழக்கமாக டெம்ப்லேட் அம்சங்களைத் தவிர்த்துவிட்டு, சண்டைக்காட்சிகள் மூலமாகவே கதை சொல்லி, ஓர் இயக்குநராவும் வெற்றி பெற்றுள்ளார் அனல் அரசு.
மொத்தத்தில், ‘பீனிக்ஸ்’ ஆக்ஷன் விருந்து.


