கைப்புள்ள! என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத மக்கள் தமிழகத்தில் இருக்க முடியாது. நகைச்சுவை நடிகர் வடிவேலு மூலம் தமிழகத்தில் காலடி எடுத்து வைத்த கைப்புள்ள என்னும் சொல், தற்போது அனைத்து தரப்பு மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் கிண்டல், கேலி, கலாட்டா மற்றும் நையாண்டிக்கு பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. எந்த நேரத்திலும், எந்த ரூபத்திலும் வந்து தாங்கக் கூடிய ஓர் நகைச்சுவை கதாப்பாத்திரம் தான் ‘கைப்புள்ள’ சொல்லின் அர்த்தம்.
சமீபகாலமாக, சென்னை இளைஞர்களின் உள்ளம் கவர்ந்த யூத் சேனலாக மாறி வருகிறது ‘புட் சட்னி’. ஏற்கனவே இக்குழுவினர் ‘மிருதன்’, ‘டார்லிங் 2’ திரைப்படத்திற்காக வெளியிட்ட 5 நிமிட, நகைச்சுவை கலந்த குறும்புத்தனமான வீடியோ பல ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது இவர்கள் ஷமீர் சுல்தான் இயக்கும் ‘எந்திரிடா கைப்புள்ள’ என்னும் குறும்படம் மூலம் மீண்டும் களத்தில் இறங்கியுள்ளனர். எப்படியாவது அதிகாலை எழுந்து சூரிய உதயத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணம்; அதற்காக காலை கிரிக்கெட்டை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு, தனது நண்பர்கள் மத்தியில் தன்னாலும் அதிகாலை எழுந்திருக்க முடியும் என்று நிரூபிக்க போராடும் ஒரு சிறுவனின் வாழ்க்கையை நகைச்சுவையாக கூறுவதே இந்த குறும்படத்தின் கதை. மேலும் கிரிக்கெட் சீசனான மே மாதத்தில் இந்த குறும்படம் வெளியிடப்படுவதால் கண்டிப்பாக சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.