மகேஷ் விவசாயப் படிப்பு படித்து விவசாயம் செய்ய விரும்புகிறார். வங்கியில் கடன் வாங்கி விவசாய பண்ணை அமைப்பது அவரது லட்சியம். கடன் வாங்க அலைகிறார்.வெறுத்து விடுகிறார்.அவருடைய காதலி மித்ரா குரியன்.
சமுத்திரக்கனி சி.பிஐ ஆபீசர் ஆவேச மனிதர். ஒரு ஊழலைக் கண்டுபிடிக்க நியமிக்கப் படுகிறார். ஆனால் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.நம்நாட்டின் அமைப்பின் ஒட்டைகளும் அதிகார வர்க்கமும் அவரை இயங்க விடாமல் கேலி செய்கின்றன.
ஏமாற்றமடைந்த இருவரும் இணைகிறார்கள். சமுதாயத்தின் களைகளை எடுக்கத் தொடங்குகிறார்கள். முதலில் சில அடாவடி டிராபிக் போலீசாரைத் தாக்குகிறார்கள். ஒரு தீவிரவாதியின் தீவிரவாத செயல்களைவிட ஒரு அப்பாவின் மௌனம் ஆபத்தானது என்று படம் முடிகிறது.
‘ஆதார்’ என்று உருவான படம் ‘புத்தனின் சிரிப்பு’ என்று பெயர் மாறி வெளியாகியிருக்கிறது.
படத்தில் இன்றைய சமுதாய நிலையை தோலுரிக்கும் காட்சிகள் நிறைய உண்டு. விவசாயிகள் புறக்கணிப்பு, ஏழைபடும்பாடு, வளையும் சட்டங்கள், வலியவனை ஆதரிக்கும் அதிகார வர்க்கம், எளியவனை ஏளனம் செய்யும் யதேச்சதிகாரம் எல்லாமும் பேசப்படுகின்றன.
மகேஷ், மித்ரா குரியன், சமுத்திரக்கனி எல்லாருமே கருத்து பேசுபவர்களாகவே வருகிறார்கள். விவேக் காமெடி கூடகருத்து இடி யாக உள்ளது.கதையே முக்கியமாகப் படுவதால் பாடல்கள் வேகத்தடைகள் போலுள்ளன.வசனங்கள் பலவும் சரியான சாட்டையடிகளாக உள்ளன.
படத்தின் நோக்கம் அருமை. சொன்ன விதத்தினை சுவையாக்கி திரைக்கதையை நேர் செய்திருந்தால் ‘புத்தனின் சிரிப்பு’ரசிக்கப்பட்டிருக்கும் .பட நோக்கம் நன்று.படைப்பு ஆக்கம் சுமார்.இதுமாதிரி படமெடுக்கத் துணிந்தமைக்காகவே இயக்குநர் விக்டர் டேவிட்சனைப் பாராட்டலாம்.