‘பூக்கி’ திரைப்பட விமர்சனம்

அஜய் திஷன், ஆர் கே தனுஷா, பாண்டியராஜன், சுனில், லட்சுமி மஞ்சு, இந்துமதி மணிகண்டன், ஆதித்யா கதிர், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, பிக்பாஸ் சத்யா, எம் ஜே ஸ்ரீராம், ராதா, அஸ்வின் ராம், ஷியாரா சார்மி, பிரியங்கா நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் கணேஷ் சந்திரா. எடிட்டிங் மற்றும் இசை விஜய் ஆண்டனி ,கதை திரைக்கதை வசனம் புதிய பரிதி, கலை இயக்கம் பிரகதீஸ்வரன் பன்னீர்செல்வம், தயாரிப்பு விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி .

பூக்கி என்றால் காதலர்கள் ஒருவரை ஒருவரை செல்லமாகக் கூறிக்கொள்ளும் வார்த்தை எனலாம்.படத்தின் கதை என்ன?

கைலாஷும் ஆழியும் ஆறாண்டு காதலித்தவர்கள், வாக்குவாதம் ஆணவச் சிக்கல் என்று முரண் கொண்டு பிரிகிறார்கள். இதில் தான் படமே தொடங்குகிறது.முதல் காட்சியிலே காதலர்கள் பிரிகிறார்கள்.அதற்குப் பிறகுதான் படத்தலைப்பே வருகிறது.பிறகு கதை எங்கே செல்லும்?எப்படி நகரும் ? என்ற கேள்வி எழுகிறது. ஆனால் காதலன் ஒரு பக்கம் காதலி ஒரு பக்கம் என்று அவரவர் முன் கதையைச் சொல்லச் சொல்ல வர்ணஜாலமான காட்சிகள் விரிகின்றன.இருவரும் பிரிந்து இருவரும் இன்னொரு காதலில் விழுகிறார்கள். அதில் அவர்களால் ஒன்ற முடிந்ததா? பழைய காதலை மீட்டார்களா? என்பதை நோக்கிய பயணம் தான் 132.21 நிமிடங்கள் கொண்ட ‘பூக்கி’ படத்தின் மீதிக் கதை.

எப்படியாக இருந்தாலும் காதலர்கள் அநேக போராட்டங்களைக் கடந்து ஒன்று சேர்வார்கள் என்கிற முடிவு யோசிக்கக் கூடியது தான் என்றாலும், அதை நோக்கிச் செல்லும் பாதையும் பயணமும் சுவாரசிய தோரணங்கள் கட்டி நம்மை இருக்கையின் நுனியில் அமர வைக்கின்றன.

காதல் என்பது சரிப்பட்டு வரவில்லை என்றால் துடைத்துப் போட்டு விட்டுச் செல்லக் கூடியதா? அல்லது உண்மையான காதல் இறுதிவரை கைவிடாதா? போன்ற கேள்விகளுக்கு பதில் இப்படத்தில் உள்ளது. அதுமட்டுமல்லாமல் சுற்றி இருக்கும் சமூகமும் நண்பர்களும் எப்படிக் காதலர்களை  மனம் மாற்றுகிறார்கள், எப்படி ஆற்றுப்படுத்துகிறார்கள், எப்படி திசை மாற்றுகிறார்கள் என்பதையும் காட்சிகளாகக் காட்டியுள்ளார்கள்.
இந்தப் படத்தில் கைலாஷாக நடித்துள்ள அஜய்திஷன், புதுமுக நடிகர் போல் தெரியாமல் இளமைத் தோற்றத்திலும்  துறுதுறு நடவடிக்கைகள் வசன உச்சரிப்பு உடல் மொழி முகபாவனைகள் என்று அவர் தேர்ந்த நடிகராக நடிப்பிலும் அசத்தி வெளிப்பட்டுள்ளார்.

அவரது காதலியாக வரும் நடிகை தனுஷா தெற்றுப் பல்லுடன் இயல்பான நாயகியாக வந்து நடிப்புக்கான வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்தி வெளிப்பட்டுள்ளார். இந்த இரு பிரதான பாத்திரங்கள் மட்டுமா ?நாயகனின் அப்பாவாக வரும் பாண்டியராஜன், அம்மாவாக வரும் இந்துமதி மணிகண்டன் ஆகியோரும் இயல்பாகத் தங்களைப் பதிய வைக்கிறார்கள். அதே போல நாயகியின் தந்தையாக வரும் எம் .ஜே . ஸ்ரீராம், தாயாக வரும் ராதா,காவியாவாக வரும் ஷியாரா சார்மி ,ஜிம் மாஸ்டராக வரும் பிக் பாஸ் சத்யா, ராகுலாக வரும் அஸ்வின் ராம் அனைவரும் தத்தமது பாத்திரங்களில் உயிரோட்டம் காட்டியுள்ளார்கள்.சாமியாராக சுனில், மனநல மருத்துவராக லட்சுமி மஞ்சு, நாயகனின் நண்பர்களாக ஆதித்யா கதிர், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி நடித்துள்ளனர்.படத்தில் நிறைய பாடல்கள் இருந்தாலும் பாடல்களே பல இடங்களில் கதை சொல்வதால் அது ஒரு வேகத்தடையாகத் தெரியவில்லை. அனைத்துப் பாடல்களிலும் இளமையின் வர்ணக் கொடியை பறக்க விட்டுள்ளார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி.

காதலில் பிரேக் அப்பை முழுமையாக நிறைவு செய்தல், அடுத்த காதலைத் தொடங்குதல் என்று பல்வேறு மனநலப் பாடங்கள் எடுக்கிறார்கள். படத்தில் பிரேக்கப்பின் விளைவுகள் என்று  ஏற்க முடியாதது,கோபம், சோகம், ஏற்பது என்று ஏழு விளைவுகள் சொல்லப்படுகின்றன. அதற்கு ஒரு பாடல் உண்டு. இப்படிக் காதல் ,பிரிவு போன்றவற்றை உளவியல் ரீதியாக அதன் தாக்கத்தை விலாவாரியாக இழை பிரித்து ஆடையாக நெய்து அலசிக் காயவைத்துள்ளார்கள். இந்தப் படத்தில் அனைத்து காட்சிக ளும் நடப்பு சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் வகையிலும் எதார்த்தம் மீறாத வகையிலும் மனித உளவியலை வெளிப்படுத்தும் வகையிலும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன .

சிம்பு அவ்வப்போது தரும் காதல் அறிவுரைகள் ரசிக்க வைக்கின்றன.படத்தில் வரும் ஒரு நாயின் மைண்ட் வாய்ஸ்ஸை நன்றாகப் பயன்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

பின்புலங்கள் பிரதானமாகத் தெரியாத அளவிற்கு கதாபாத்திரங்களை முன்னிறுத்தி ஒளிப்பதிவாளரின் கேமரா பயணம் செய்துள்ளது. இசையும் பின்னணி இசையும் படத்திற்கு பெரும் பலமாக அமைந்து ஒளி கூட்டி படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது சிறப்பு.

இந்தப் படம் சுவாரசியமான ஒரு காதல் கதையை முற்றிலும் வேறொரு தளத்தில் கொண்டு சென்று ரசிக்க வைக்கும் படியாக அமைந்துள்ளது.பூக்கி என்கிற ஒரு வார்த்தை செய்யும் ரசவாதத்தையும் படத்தில் அழுத்தமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

மொத்தத்தில் இளமையான காதல் கொண்டாட்டத்தில் நாமும் பங்குபெறும் அனுபவத்திற்கு இந்த ‘பூக்கி’யைப் பார்க்கலாம்