மணிபாரதி இயக்கியுள்ள பேட்டரி படம் எப்படி பார்க்கலாம். நகரில் நடக்கும் ஒரு கொலையை விசாரிப்பதில் தொடங்குகிறது திரைப்படம். அங்கு புதிதாகப் பணிக்கு வரும் எஸ்.ஐ. யாக நாயகன் செங்குட்டுவன். ‘க்ளூ’ கிடைக்காத கொலையில் நாயகனின் புத்திசாலித்தனத்தால் கொஞ்சம் கொஞ்சமாக முடிச்சு அவிழும் நேரத்தில் எதிர்பாராத விதமாக மற்றொரு கொலை.
மர்ம முடிச்சுகளைப் போட்டு சுவாரஸ்யமான திருப்பங்களோடு செல்லும் கதையில் ஏன் இக்கொலைகள் என்பதைச் சொல்லும் இடத்தில் நிமிரவைக்கிறது.
உணர்வுபூர்வமான ஒரு ‘ஃப்ளாஷ் பேக்’ காட்சி படத்தின் இரண்டாம் பாதியில் வருகிறது. அதில் சொல்லப்படும்
கொலைகளுக்கான காரணம் புதியது.
அதில் நடித்துள்ள
சிறுமியும், தாத்தாவாக வரும் எம்.எஸ். பாஸ்கரும் காட்சியில் ஒன்றி நம்மை நெகிழவைக்கிறார்கள்.
ஃப்ளாஷ் பேக் முடிந்ததும் அதைச் சொல்லும் நாயகனையும், கேட்கும் பாத்திரங்களையும் இணைக்கிறது திரைக்கதை .
எங்கும் தொய்வில்லாமல் நகர்த்தி இருக்கிறார் இயக்குநர்.
பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார் நாயகனாக நடித்துள்ள செங்குட்டுவன். அப்பாவியாகவும் புத்திசாலித்தனமாகவும் இருமுகம் காட்டிச் சிறப்பாக செய்திருக்கிறார்.
நீண்ட கால இடைவெளிக்கு பின் மணி பாரதி இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். ஆனால் இப்படி வருபவர்கள் கால மாற்றத்தைப் புரிந்து கொள்வதில்லை. இவர் காலம் மாற்றத்திற்கு ஏற்ப படத்தை உருவாக்கி இருக்கிறார்.
மிகைப் படுத்துதல் இல்லாத எதார்த்தமான காவல்துறை விசாரணை படத்தின் பலம். அதே போல் வணிக வளாகத்தில் வில்லனிடம் சிக்கும் கதாநாயகி மீட்கப்படும் காட்சி, லிஃப்ட்- டில் போலீஸ் அதிகாரியை மிரட்டும் காட்சி , ஃப்ளாஷ் பேக் குடும்ப உறவுகளைக் காட்சிப்படுத்தி இருக்கும் விதம் எனப் படம் முழுக்க தான் ஒரு அனுபவம் மிக்க இயக்குநர் என நிரூபித்திருக்கிறார் மணிபாரதி.
‘இரண்டாவதாக வந்தவனை இந்த உலகம் ஞாபகம் வச்சுக்காது… எதுலயும் முதல்ல வர பாரு …’
‘இலக்கை தீர்மானிச்சுட்டா தூரம் ஒரு பிரச்சினை இல்லை… ‘ என வசனம் எழுதிய ரவிவர்மா கிடைக்கும் இடங்களில் எல்லாம் கைத்தட்டல் பெறுகிறார்.
ஒளிப்பதிவு வெங்கடேஷ். ‘சதுரங்க வேட்டை ‘ முதலிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். சிறப்பாகச் செய்துள்ளார். ராஜேஷ் குமாரின் எடிட்டிங்கில் அவ்வளவு நேர்த்தி. பின்னணி இசையில் சித்தார்த் விபின் திரைக்கதையின் வேகத்தைக் கூட்டுகிறார்.
கதாநாயகி அம்மு அபிராமியின் கண்கள் சரிதாவை நினைவூட்டுகின்றன.
அசிஸ்டன்ட் கமிஷனராக நடித்திருக்கும் ராஜ் தீபக் ஷெட்டி,
எஸ். ஐ. ஆக நடித்திருக்கும்
யோக் ஜபி ஆகியோர் சரியான தேர்வு. அளவெடுத்த சட்டைகளை அணிவித்துள்ளார் இயக்குநர். அந்தளவு பாத்திரத்தோடு பொருந்திவிட்டார்கள்.
எந்தத் துறைகளில் குற்றம் நடக்கக்கூடாதோ அங்கு குற்றம் நடந்தால் அது எவ்வளவு பெரிய ஆபத்து என்று சொல்லியிருக்கிறார்கள்.
சார்ஜ் குறையாத பேட்டரி.