விரைவில் வெளிவரவுள்ள ‘மேகி’ என்கிற படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ள நிம்மி ,திரையில் தான் அறிமுகமான அனுபவம் பற்றிப் பேசுகிறார்:
“இந்த ‘மேகி ‘ படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு பேஸ்புக் மூலம் தான் கிடைத்தது .அதற்குக் காரணம் மாடல் கோ ஆர்டினேட்டர் கோபிநாத் என்பவர் தான். பேஸ்புக் மூலம் அறிமுகமாகும் போது நிறைய பேக்குகளாக வருவார்கள். பலவும் போலிகளாக இருக்கும். ஆனால் எனக்கு இந்த படமே பேஸ்புக் மூலம் தான் கிடைத்தது என்பதை நான் சொல்லியாக வேண்டும் .என்னை அவர்களுக்குத் தெரியாது அவர்களை யார் என்றும் எனக்குத் தெரியாது. என்னுடைய டப்மாஷ் பார்த்து விட்டு என்னை அழைத்தார்கள் .ஒருவரிடம் திறமை உள்ளதா இல்லையா என்பது ஒரு டப்மாஷ்ஷை வைத்து முடிவு செய்ய முடியுமா?
யாருடைய குரலுக்கோ நடித்துக் காட்டும் டப்மாஷ் பார்த்தோ போட்டோக்களை வைத்தோ ஒருவரின் திறமையை முடிவு செய்ய முடியாது. நம்மிடம் உள்ள திறமை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தால் மட்டும்தான் தெரியும் .அந்த நிலையில்தான் இந்தப் படத்திற்காக நான் சென்றேன். இயக்குநர் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சாரைப் போய்ப் பார்த்தேன்.அவர்களுக்கு என்னைப் பிடித்து விட்டது . அன்று மாலைக்குள் முடிவு சொல்லவேண்டும் என்றார்கள் .
எனக்குப் புரியவில்லை. இவ்வளவு சுலபமாக சினிமா வாய்ப்பு கிடைக்குமா? என்று சந்தேகமாக இருந்தது.நேரம் நகர்ந்து கொண்டிருந்தது .முடிவைச் சொல்லலாமா வேண்டாமா? இது உண்மையா பொய்யா என்று கூட என்னால் நம்ப முடியவில்லை. நான் மீண்டும் மாலை பேசியபோது நேரம் கேட்டேன் எனக்கு சிந்திக்க நேரம் வேண்டும். யோசிக்க ஒரு வாரம் அவகாசம் வேண்டும் என்றேன். அவசரம் என்றார்கள்.சிந்திக்க இரண்டு நாள் வேண்டும் என்றேன். ஏனென்றால் சினிமாவில் போலிகள் அதிகம் .யார் படம் எடுப்பவர்கள் ?யார் எடுக்க முடியாதவர்கள்? என்று கணிப்பது கடினம் .அதனால் என் மனம் நம்ப மறுத்தது. ஆனால் ஒரு வாரத்தில் படப்பிடிப்பு என்றார்கள் அதையும் என்னால் நம்ப முடியவில்லை .ஒரு வழியாகச் சம்மதித்து படப்பிடிப்புக்குச் சென்று விட்டேன். இயக்குநர் கார்த்திகேயன் சார் தான் படத்தின் தயாரிப்பாளர் .படப்பிடிப்புக்குச் சென்ற முதல் நாளே நான் கேட்ட கேள்வி என்ன தெரியுமா? இந்த படத்தை எடுத்து முடித்து வெளியிடுவீர்களா? என்பது தான்.இந்த படம் வருமா? என்று கேட்டேன்.
நான் அறியாமையில் அப்போது கேட்டிருந்தாலும் அப்படி நான் கேட்டிருக்க கூடாது தான். இந்த கேள்வி அவரை அதிர்ச்சியூட்டியிருக்க வேண்டும் .ஆனாலும் அவர் அதை எதிர்கொண்டு விரைவில் முடித்து 22ஆம் தேதி வெளியிடுவோம் என்று தேதி சொன்னார் .அதன்படி அடுத்தடுத்த வேலைகள் நடக்க ஆரம்பித்தன .எனக்கு நம்பிக்கை துளிர்த்தது.
படப்பிடிப்புக்குக் கொடைக்கானல் சென்றோம் .காலநிலை, உணவு, மலைப் பகுதி என்பதால் அந்த சூழ்நிலையும் பலருக்கும் ஒத்துவரவில்லை. பல பிரச்சினைகளைச் சந்தித்தோம். இடம், உணவு, சூழ்நிலை எல்லாம் ஒத்துவராத போதும் ஒரு நல்ல ஒருங்கிணைப்புடன் அனைத்தையும் சமாளித்து படத்தை முடித்திருக்கிறார் இயக்குநர் கார்த்திகேயன் சார்.
இந்த அனுபவம் எனக்கு நல்ல பாடத்தையும் சினிமா பற்றிய நல்ல புரிதலையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது .
‘ மேகி’ஒரு பேய்ப் படம் என்றாலும் அனைவரும் பார்க்கும்படியாக இருக்கும் .விறுவிறுப்பு, காமெடி, திகில் எல்லாம் கலந்த ஒன்றாக இருக்கும் .
இந்த நேரத்தில் முதல் படத்திலேயே இவ்வளவு விரைவாக படத்தை எடுத்து இவ்வளவு விரைவாக ஒரு படத்தை வெளியிட்டிருக்கும் இயக்குநருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். இப்போது அந்தக் கேள்வி கேட்டதை நினைத்து வருத்தமாகவும் வெட்கமாகவும் இருக்கிறது. ஏனென்றால் சினிமாவில் சொன்னதைச் செய்பவர்களும் இருக்கிறார்கள் .இப்படி என்னை உணர வைத்த அனுபவம் தான் மேகி படம் .” இவ்வாறு நடிகை நிம்மி கூறினார்.